பெண்கள் தங்களுக்கான வேலை-வாழ்க்கை சமநிலையை நிர்வகிக்க சூப்பரான டிப்ஸ்கள் இதோ...

பெண்கள் தங்களுக்கான வேலை-வாழ்க்கை சமநிலையை நிர்வகிக்க சூப்பரான டிப்ஸ்கள் இதோ...

வேலை-வாழ்க்கை

தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் குழந்தைகளை கவனிப்பது, கணவரை ஆபிசுக்கு அனுப்பி வைப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கான தேவைகளை செய்வது, மூன்று வேளையும் சமையல் செய்வது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஏதேனும் விழாக்கள் வந்துவிட்டால் போதும் நிற்க நேரமிருக்காது.

  • Share this:
ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய வளம் என்றால் அது நேரம். ஆகவே இயன்ற வரை, வேலை மற்றும் குடும்பத்திற்கான நேரத்தைச் சமமாகச் செலவழிக்க வேண்டும். இதைத் தான் வொர்க் லைப் பேலென்ஸ் அதாவது வேலை-வாழ்க்கை சமநிலை என்று கூறுவர். நேரத்தை நாம் எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை விட, செலவழிக்கும் நேரத்தின் தரம் எப்படியானது என்பது தான் முக்கியம். அதுவும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் குழந்தைகளை கவனிப்பது, கணவரை ஆபிசுக்கு அனுப்பி வைப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கான தேவைகளை செய்வது, மூன்று வேலையும் சமையல் செய்வது, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஏதேனும் விழாக்கள் வந்துவிட்டால் போதும் நிற்க நேரமிருக்காது. இதே நீங்கள் பணிபுரியும் பெண்ணாக இருந்தால் உங்கள் வாழ்க்கை உண்மையில் சவாலானது தான். 

நேர மேலாண்மை:

முதலாவதாக, உழைக்கும் பெண்ணாக, நீங்கள் சில கடினமான தேர்வுகளை செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும். வேலை செய்வது என்பது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். ஆனால் இன்றோ பல பெண்கள் தங்களது அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூட நேரமில்லாமல் உழைக்கின்றனர். இதில் எந்த பயனும் இல்லை.

உங்கள் அம்மா-அப்பாவிடம் நலம் விசாரிக்கவோ, குழந்தைக்கு ஆசை முத்தம் தரவோ, கணவரிடம் பொறுமையாக அமர்ந்து பேச கூட நேரமில்லாமல் உழைத்து என்ன பிரயோசனம். எனவே ஒரு நாளில் உங்களது வேலையை பொறுத்தது இவ்வளவு நேரம் தான் வேலைக்கு செலவழிப்பேன் என உறுதியெடுங்கள். ஒரு மெஷின் போல உழைத்தால் உங்களை ஒரு இயந்திரமாக மட்டுமே அலுவலகமும், வீட்டில் இருப்பவர்களும் கருதுவார்கள். எனவே வேலைக்கும், குடும்பத்துக்கும் எப்போதும் துரோகம் செய்யாமல் நேர்மையாக இருங்கள். வாழ்வு வளமாகும்.

உடல் ஆரோக்கியம்:

பெண்கள் காலையில் ஓட்டபயிற்சி மற்றும் ஜிம் செல்வதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. ஆண்கள் மட்டும்தான் இதையெல்லாம் செய்யவேண்டும். பெண்கள் உடற்பயிற்சி செய்தால் பலரும் பலவிதமாக பேசுவார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். ஓட்டபயிற்சி செய்யவோ ஜிம் செல்லவோ உங்களுக்கு நேரமில்லை என்றால் உடற்பயிற்சி மெஷின்களை வாங்கி வீட்டிலேயே தினமும் 1 மணி நேரம் செய்யலாம்.

அன்யோன்னியம் அவசியம்!

வேலைக்கு போகும் பெண்கள் இருக்கும் வீடுகளில் கணவன், மனைவி என இருவருக்கும் இடையே நெருக்கம் குறையும். இருவரும் பேசிக் கொள்ளக்கூட நேரமிருக்காது. இப்படிப் பேசாமல் இருப்பதாலேயே சின்ன பிரச்னைகூட பெரிதாக வளர்ந்து பூதாகரமாக ஆகிவிடுகிறது. இன்றைய பரபரப்பான சூழலில் இருவரும் தனித்தனி இலக்குகளை வைத்து ஓடுகிறார்களே தவிர, ஒருவருக்காக இன்னொருவர் வாழும் வாழ்க்கை இப்போது இல்லை. இப்படி தனித்தனியாகச் செயல்பட ஆரம்பித்தாலே பிரச்னைதான். அதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் கணவரிடம் அடிக்கடி பேச வேண்டும் அல்லது ஒரு வாட்ஸ்ஆப் மெசேஜ் செய்தும் தொடர்ந்து இணைப்பில் இருக்கலாம்.

வேலைகளைப் பிரித்துக் கொள்ளுங்கள்:

முடிந்தவரை எந்தெந்த வேலையை யார் செய்வது என கணவன், மனைவி கலந்து பேசி வேலைகளைப் பிரித்துக்கொள்வது நல்லது. வேலை என்று வந்துவிட்டால் இந்த வேலையை நான் செய்வதா என்றெல்லாம் கணவன், மனைவி கௌரவம் பார்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்ட கணவன் தயாராக இருக்க வேண்டும். துணிகளை இஸ்திரி செய்ய மனைவியும் தயாராக இருக்க வேண்டும். இதில் ஈகோ பார்த்தால் அமைதி கெடும். கணவன்மார்கள் காய்கறி வெட்டுவது, பாத்திரம் கழுவித் தருவது, வீட்டைப் பெருக்குவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து தந்து மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கலாம். அப்போது தான் உங்கள் மனைவியும் சரியான நேரத்தில் ஆபிஸ் செல்லமுடியும்.

மன அழுத்தத்தைக் குறைத்தல்:

தொழிலதிபர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என்று இல்லாமல் இன்றளவில் அனைவருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இன்றைய கால கட்டத்தில் பணிபுரியும் பெண்களின் சொந்த வேலையை மட்டுமல்லாது ஆபிஸ் வேலையை செய்ய இன்னொரு நபர் அவருக்கு தேவைப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் மன நிம்மதி அவசியம் தேவை. உங்களுக்குப் பாடுவது ரொம்பப் பிடிக்கும் என்றால் பாடுங்கள், புதிய இசையைக் கற்றுக்கொள்ளுங்கள், கிட்டாரும், டிரம்ஸ் போன்றவற்றை வாசிக்கத் தெரிந்தால் மன அழுத்தம் நிறைந்த தருணத்தில் வாசியுங்கள். உங்கள் நீண்ட கால தோழிகளிடம் பேசுங்கள். குழந்தைகளிடம் விளையாடுங்கள்.

குடும்பம் முக்கியம்:

வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு எப்போதும் போதிய முக்கியத்துவம் கொடுக்க தயங்காதீர்கள். குறிப்பாக அம்மா- அப்பா,  உங்கள் பார்ட்னர், குழந்தைகள் ஆகியோருக்கு  முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மேல் அக்கறை கொண்ட குடும்பத்தினர் மேல் நீங்களும் அக்கறை உள்ளவராக மாறுங்கள். குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து சாப்பிடுங்கள். சுகமோ, துக்கமோ மனம் விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். பெரும்பாலான விவாகரத்துக்கு காரணமே கணவன் மனைவியை மதிக்காததும், மனைவி கணவனை மதிக்காததும் தான். எனவே விட்டுக்கொடுத்து புரிதலோடு வாழுங்கள். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். கேண்டிகிரஷ்ஷுக்கு பதிலாக உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள். இதுமட்டுமல்லாமல் உங்கள் மாமியார், மாமனார் இன்னும் வீட்டிலுள்ளவர்களுடன் ஒரு நெருக்கத்தை கொண்டிருங்கள்.

வேலைக்குப் போகும் பல பெண்கள் தங்கள் வேலைக்கு போகும் முன் பல காரியங்களை செய்திருப்பார்கள் குறிப்பாக வாராவாரம் வெள்ளிக்கிழமை சாமி கும்பிடுவது, வீட்டை சுத்தம் செய்து, காக்காவிற்கு சாதமிடுவது, தோட்டங்களை அமைப்பது மற்றும் பராமரிப்பது போன்ற செயல்களை செய்திருப்பர். ஆனால் இன்றோ அவற்றை கவனிக்கவே தவறுகிறார்கள். உங்கள் பிஸி நேரத்திலும் இவற்றை தவற விடாதீர்கள் ஏனெனில் இவை உங்களுக்கு ஒருவித அமைதியையும் உத்வேகத்தையும் தரும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: