கர்ப்பிணிகளின் சில பழக்க வழக்கங்கள் கருவில் உள்ள குழந்தையையும் நேரடியாக பாதிக்கும். எனவேதான் கர்ப்பகாலத்தில் சில விஷயங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் எந்தெந்த பழக்கங்கள் உங்கள் கருவை பாதிக்கும் என்று பார்க்கலாம்.
காஃபி அருந்துதல் : காலை எழுந்தவுடன் காஃபி அருந்தும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் வெறும் வயிற்றில் குடிப்பது தவறு. குறிப்பாக கர்ப்பகாலத்தில் காஃபியை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காஃபில் உள்ள கஃபைன் சிறுநீரை அதிகம் வெளியேற்றும். இதனால் நீர்ச்சத்து குறையும். இப்படி நீர்ச்சத்து குறைந்தால் பல அபாயங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அதிக கஃபைன் கருக்கலைதல், சீக்கிரமே குழந்தை பிறத்தல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் காஃபியை தவிர்த்தல் நல்லது.
புகை , சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் : பொதுவாகவே இந்த மூன்று பழக்கங்களை கருவுற்ற நேரத்தில் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைன் கருவுக்கு செல்லும் ஆக்ஜினை தடை செய்கிறது. இதனால் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை போன்ற பாதிப்புகளை குழந்தை பிறந்த பிறகு சந்திக்க நேரிடும். சில நேரங்களில் கருச்சிதைவும் உண்டாகலாம். மது பழக்கமும் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குறைமாதப் பிரசவம் போன்றவை உண்டாகும்.
அதிக வேலை : அதிக நேரம் வேலைபார்ப்பது உடல் ரீதியான அழுத்தத்தை உண்டாக்கும். இப்படி சரியான ஓய்வு , தூக்கம் இல்லாமல் வேலை பார்க்கும்போது அது குழந்தையையும் பாதிக்கும். அதுமட்டுமன்றி பிரசவ நேரத்திலும் சிக்கலை உண்டாக்கலாம்.
துரித உணவுகள் : கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவு உட்கொள்வதால், தாய்க்கு எடை அதிகரிக்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக எடை காரணமாக குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் பிரசவிக்கும் நேரத்திலும் சிக்கல்கள் வரலாம்.சில ஆய்வுகள் மூலம் செயற்கை உணவு வண்ணம் மற்றும் இரசாயன சேர்க்கைகள் காரணமாக கருவில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடுகள் வர வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம். குளிக்கும் போது அந்தரங்க பகுதியில் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். சொளகரியமான மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துங்கள். அதிகமாக வியர்வை வெளியேறினால் உடனே உடை மாற்றிக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் குளிக்க வேண்டும். பெண்ணுறுப்புகளை சுகாகாதார வைக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.