Home /News /lifestyle /

Life Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!

Life Success Story : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!

தனிமை

தனிமை

தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நன்கு உணர்வதற்கு கற்றுக் கொடுங்கள். வேலைகளைச் செய்யப் பழக்கி, வாழ்க்கையை கையாளப் பழகுவதற்கு உதவுங்கள். பிற மனிதர்களுடன் கலந்து பழகுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள்.

ஏழை பெற்றோருக்கு ஒரு ஆண் பிள்ளை. அந்த பெற்றோரோ, தாம் பட்ட துன்பங்களைப் போல், தங்கள் பிள்ளை துன்பப்படக் கூடாது என நினைத்து கஷ்டதை உணரவிடாமல் வளர்க்கத் தொடங்கினர். அது தன் மகனின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

மகனிடம் குடும்ப கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதில்லை. குடும்ப வருமானத்தைப் பற்றியோ, நிதிநிலையையோ சொல்வதில்லை. வீட்டு வேலைகளை செய்ய வைப்பதில்லை. அவனுக்கு படிப்பு ஒன்றே பிரதானமாக இருக்கும் நிலைமையை ஏற்படுத்தினர். "நன்றாக படித்தால் எல்லாம் கிடைத்துவிடும்" என்று நினைத்தனர். மனிதர்களிடம் கூட நெருங்கிப் பழாகாமல் தனித்து இருக்கும் 'ஒண்டித்தனமே' சிறந்த ஒழுக்கம் என்ற போதனை அவன் பழக்க வழக்கங்களில் வெளிப்படத் தொடங்கின.

"அமைதியான பையன், யாரோட வம்புக்கும் போக மாட்டாங்க. தானுண்டு, தன் வேலையுண்டுனு இருப்பான்" என நாலுபேர் பேசத் தொடங்கினார்கள். ஆக, இதுதான் நல்ல பண்பு என்ற எண்ணம் நாளுக்கு நாள் வேர் பிடித்து வளரத் தொடங்கியது. உறவினர்களின் வீடுகளுக்குக்கூட அவன் அதிகம் செல்வதில்லை.

பள்ளியில் மற்ற மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. வழக்கமான, சாதாரணமான சின்ன சின்ன கிண்டல் பேச்சுகளைக் கூட, பெருங் குற்றமாக கருதும் போக்கு அவனுக்குள் வளர்ந்தது. எதிர்வரும் சிக்கலை எதிர்கொண்டு முன்னேறுவதற்குப் பதிலாக, அதிலிருந்து தப்பிக் பார்த்தான். பொதுவாக சுறுசுறுப்பு இல்லாமல், மந்தமாகக் காணப்பட்டான். சில நேரம் கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன.

வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லையே. புதிய புதிய சிக்கல்கள் தோன்றி கொண்டுதானே இருக்கும். பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டை நெருங்கும் வேளையில், அவனுக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை வளரத் தொடங்கியது. மற்ற மாணவர்களைப் போல தன்னால் இருக்க முடியவில்லை. கலகலப்பாக இருக்க முடியவில்லை. தான் சக மாணவர்களால் புறக்கணிக்கப் படுகிறோம் போன்ற எண்ணங்கள் அவனுக்குள் அதிகரிக்கத் தொடங்கியது.

பாடப்புத்தகத்தில் இருந்து கேள்விகளை கேட்டால் வரி மாறாமல் ஒப்பித்துவிடுவான். ஆனால், அந்த பாடத்தை வாழ்க்கையுடன் அவனால் இணைத்து அறிந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பயிற்சி இருந்த அளவுக்கு வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அதனுடன் இணைந்து ஏட்டுப் பாடம் படிக்கத் தவறினான். எனினும், அதிக மதிப்பெண்களைப் பெற்று பள்ளிப் படிப்பை நிறைவு செய்தான்.

கல்லூரி படிப்பை தொடங்கிய அவனுக்கு, தொடக்கம் முதலே ஒருவித பதற்றத்தை அனுபவித்து வந்தான். அவனுக்குள் தாழ்வு மனப்பான்மை மேலும் அதிகரித்தக் தொடங்கியது. மற்ற மாணவர்களைப் போல தன்னால் கலந்து பழகமுடியவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் நிழலாடியது. இதனால், அவனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. தன் மகனின் நடவடிக்கைகளை கவனித்த, பெற்றோர்களுக்கு கவலை அதிகரித்தது.

Read More : சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை

அவன் உழைப்பின் அருமையை, பணத்தின் அருமையை உணராமல் இருந்தான். தன் பெற்றோரின் துன்பங்களையும் அவன் போதுமான அளவு தெரிந்திருக்கவில்லை. மனிதர்களுடன் மனம் ஒத்துப் பழகும் அருங்கலையை உரிய முறையில் தெரிந்திருக்கவில்லை. ஒருபுறம் கோபமும், மறுபுறம் விரக்தியும் என மாறி மாறி சிரமப்பட்டான். அவற்றை சமநிலை படுத்தமுடியாமல் துன்பப்பட்டான்.

Must Read : தன் மகளை மருத்துவராக்கிய ஓர் ஏழைத் தாயின் கதை....

 

பெற்றோர்களே...., தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையை நன்கு உணர்வதற்கு கற்றுக் கொடுங்கள். வேலைகளைச் செய்யப் பழக்கி, வாழ்க்கையை கையாளப் பழகுவதற்கு உதவுங்கள். எதிர்வரும் சவால்களையும், துன்பங்களை கண்டு ஒதுங்கி செல்லாமல் அதில் தலையிட்டு வெற்றி கொள்ள துணைபுரியுங்கள். பிற மனிதர்களுடன் கலந்து பழகுவதன் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் வெற்றிக் கனியை வாழ்க்கை முழுவதும் சுவைப்பார்கள். ஆம், ‘அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது’.
Published by:Suresh V
First published:

Tags: Parents, Special story, Success

அடுத்த செய்தி