கோவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் தற்கொலை எண்ணங்கள்... என்ன செய்ய வேண்டும்?

மாதிரி படம்

கோவிட் -19 தொற்றின் இரண்டாம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கடந்த ஆண்டை போலவே பலரும் இந்த ஆண்டும் பொருளாதார ரீதியாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தற்கொலை என்பது மன உளைச்சலின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ஒருவர் நாடும் முடிவாக இருக்கிறது என்றாலும், சரியான நேரத்தில் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக தடுக்க கூடியது. தற்கொலைக்கான பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான நேரத்தில் உதவி கிடைப்பது மிகப்பெரிய சவாலாகத் தெரிகிறது. கோவிட் -19 தொற்றின் இரண்டாம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கடந்த ஆண்டை போலவே பலரும் இந்த ஆண்டும் பொருளாதார ரீதியாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றின் இரண்டாவது அலை பரவலான மரணம் மற்றும் கடும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதால் சமீப நாட்களாக பலருக்கும் மன உளைச்சல் அதிகரித்து வருகிறது.

தொற்று தாக்கத்திற்கு மத்தியில் பெரும்பாலான விஷயங்களை பற்றி கவலை கொண்டு மனஉளைச்சலில் ஒருவர் சிக்கி தவித்து வருகிறார் எனில், அவருக்கு தொழில்முறை உதவி (professional help) தேவைப்படும் நேரம் இது. மனச்சோர்வு, பதற்றம், தற்கொலை எண்ணங்கள் அனைத்தும் சிகிச்சை மூலம் சரி செய்ய கூடியவை என்றாலும் மனநலப் பிரச்சினைகளிலிருந்து குணமடைய தொழில்முறை நிபுணர்களின் உதவியை நாடுவது முதல் படியாகும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் மன பிரச்சனைகள் குறித்து தொழில்முறை மனநல மருத்துவர்கள் பகிர்ந்த கருத்துக்கள் பற்றி இங்கே தருகிறோம். மனநல பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அவர்களுடன் இருப்பவர்களுக்கு எழும் சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் இங்கே...

ஒருவர் அனுபவிக்கும் உணர்வுகள் மனநல பாதிப்பு என்றால் அதை எப்படி அறிவது?

எப்போதும் குழப்பமான சிந்தனையோடு இருப்பது, உங்களின் கவனம் செலுத்தும் திறன் குறைவது, அதிகப்படியான அச்சங்கள் அல்லது கவலைகள் அல்லது குற்ற உணர்ச்சியின் தீவிர உணர்வுகள். தீவிர மனநிலை மாற்றங்கள், எப்போதும் சோர்வாக உணர்வது, தூக்கத்தில் சிக்கல்கள், தொடர்ந்து செய்து வரும் செயல்களை செய்வதில் எந்த ஒரு மதிப்பும் இல்லை என்று நினைப்பது, நண்பர்களுடன் பேசாமல், பழகாமல் எப்போதும் தனிமையை விரும்புவது உள்ளிட்ட உணர்வுகள் அனைத்தும் மன உளைச்சலின் அறிகுறிகள். இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் உணர்ந்தால் உடனடியாக உதவியை நாடுவைத்து அவசியம்.

தற்கொலை எண்ணத்திற்கான அறிகுறிகள்.?

தற்கொலை எண்ணத்தை கண்டறிவதற்கான பொதுவான வழிகளில் ஒன்று, ஒருவர் தனது இயல்பை மீறி நடந்து கொள்வது அல்லது கணிசமாக வெவ்வேறு வழிகளில் நடந்து கொள்கிறார்களா என்பதை கவனிப்பதாகும். குறிப்பாக அடிக்கடி எதிர்மறையாக பேசுவார்கள் எதிர்மறை எண்ணங்களோடு இருப்பார்கள். வாழ்க்கையை வெறுப்பதாக சொல்வார்கள். எப்போதும் ஜாலியாக இருக்கும் நபர் தனது இயல்புக்கு மாறாக அதிகம் பேசாமல் இருப்பது, தூக்கம் மற்றும் உணவு பழக்கத்தில் வேறுபாடு காண்பிப்பது என்று இருந்தால் தற்கொலை போக்குகளின் அறிகுறிகளாக இருக்கலாம். எனக்கு வாழ பிடிக்கவில்லை, நான் இறந்து விட்டால் எனது மற்றும் குடும்ப பிரச்சனைகள் சரியாகி விடும் என்று புலம்புவர்களை கவனக்குறைவாக கையாள கூடாது. இவர்கள் எந்த நேரத்திலும் தற்கொலை முடிவை எடுக்க கூடியவர்கள்.

Also read... கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நீண்ட நாள் தற்கொலை பற்றி பேசுபவர்கள் சொல்வது பொய்யாக இருக்கும்?

இல்லை, அவர்கள் என்றாவது ஒருநாள் தற்கொலை முடிவை டுத்து விடுவார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்வதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசும் நபர்கள் உண்மையில் அவர்களுக்குள் நீண்ட காலமாக அந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். எனவே எந்த அறிகுறிகளையும் லேசாக எண்ணி புறக்கணிக்க கூடாது.

தற்கொலை எண்ணம் ஏற்பட்டவருக்கு எவ்வாறு உதவுவது?

தற்கொலை எண்ணம் கொண்டவர்களை நீங்கள் கண்டறிந்தால் முதலில் செய்ய வேண்டியது அவருக்கான தொழில்முறை உதவியை பெற்று தருவது. மனநலம் சார்ந்த ஹெல்ப்லைன் எண்களை அழைப்பதன் மூலம் அவருக்கு உதவலாம். இந்திய அரசின் பொது சுகாதார ஹெல்ப்லைனை (104) கூட நீங்கள் அழைக்கலாம், பாதிக்கப்பட்டவரை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவர் தனியாக இல்லை அவருடன் நீங்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக எப்போதும் இருப்பீர்கள் என்று ஆறுதல் கூறுங்கள்.

மன உளைச்சல், தற்கொலை எண்ணங்கள், கவலை அல்லது மனச்சோர்வு போன்ற விஷயங்களை கையாள சில ஹெல்ப்லைன்களின் பட்டியல்:

* NIMHANS - தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம். இவர்களை 080-46110007 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது nimhans.ac.in/pssmhs-helpline என்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.

* iCALL - இங்குள்ள பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசுகிறார்கள். திங்கள் - சனி காலை 8 மணி முதல் இரவு 10 வரை சேவை கிடைக்கும். இவர்களை 9152987821 என்ற எண்ணில் அணுகலாம் அல்லது http://icallhelpline.org/ என்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.

* Sumaitri - வாரத்தின் அனைத்து நாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை தொலைபேசி ஆலோசனை கிடைக்கும். இவர்களை 011-23389090 / 9315767849 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது sumaitri.net என்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.

* SNEHA- காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மனஉளைச்சல் உள்ளவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இவர்களை 044-24640050, 044-2464006 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது snhaindia.org/new என்ற வெப்சைட்டை பார்வையிடலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: