..2020ம் ஆண்டை பெரிய எதிர்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்ற மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது போல கொரோனா எனும் கொடிய வைரஸ் சுமார் 280க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியது. இதுதவிர உலக பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது. வேலையிழப்பு, சம்பள வெட்டு என பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். கொரோனா வைரஸ் இதுவரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரை பறித்தது. மேலும் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. அந்த வகையில் 2020ம் ஆண்டு மக்களுக்கு மோசமான அனுபவங்களை தந்த ஆண்டு.
இந்த சமயம், 2021ம் ஆண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்க பொது இடங்களிலும், ஹோட்டல்களிலும் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் அவ்வாறு கொண்டாடுவது சற்று கடினம். வீட்டில் இருந்தபடியே நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடலாம். அந்த வகையில், நெருக்கமான சில நண்பர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்தாலோ அல்லது பிற நண்பர்களின் வீட்டிற்கு நீங்கள் செல்ல விரும்பினாலோ அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம். எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் வேடிக்கை நிறைந்த, அற்புதமான புத்தாண்டு கொண்டாட்டத்தை மேற்கொள்ளலாம்.
முகக்கவசங்களை சரியாக அணியுங்கள்:
எங்கு சென்றாலும் ஒருவர் முகக்கவசங்களை அணிவதே முதல் மற்றும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும். அதுவும் சரியான முறையில் அணிவது கட்டாயம். எனவே நீங்கள் முகக்கவசங்களை அணியும் போது அவை உங்கள் மூக்கு, வாய் போன்றவற்றை முற்றுலும் மறைந்துள்ளது என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். வெளியில் போகும் போது இரண்டு அல்லது மூன்று முகக்கவசங்களை எடுத்துச்செல்வது நல்லது. முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதேபோல அடிக்கடி முகக்கவசங்களை தொட வேண்டாம். வீட்டிற்கு திரும்பியவுடன் முகக்கவசங்களை கழட்டும் போது அதன் லூப் பகுதியை பிடித்து கழட்டுங்கள். மேலும், முகக்கவசங்களை கழட்டியவுடன் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
கை கழுவுதல்:
முகக்கவசங்களுக்கு அடுத்தபடியாக ஒருவர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைகளை கழுவுதல். குறைந்தது 20 விநாடிகள் உங்கள் கைகளை சோப் அல்லது ஹாண்ட் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். அதேபோல வெளியே செல்லும் போது சானிடைசர்களை எடுத்துச்செல்லுங்கள். அவற்றில் குறைந்தது 70% ஆல்கஹால் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
காற்றோட்டம் நிறைந்த இடத்தில் ஒன்றுகூடுங்கள்:
புத்தாண்டை கொண்டாட உங்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைக்கும் போதோ அல்லது நீங்கள் உங்கள் நண்பர் வீட்டிற்கு செல்லும்போதோ அந்த இடம் சுவாசிக்க ஏற்ற இடமாகவும், நெரிசலான இடமாக இல்லாமலும் இருக்க வேண்டும். காற்றோட்டம் நிறைந்த பகுதியாகவும், தேவைப்படும் போதெல்லாம் 6 அடி தூரத்தை பராமரிக்க போதுமானதாக இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் தோட்டப் பகுதி அல்லது மொட்டை மாடியில் வெளிப்புற பார்ட்டிகளை கொண்டாடுவது சிறந்தது. அதேபோல அதிக கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருப்பது நல்லது. எந்த ஒரு விருந்தினரையும் வீட்டிற்கு அழைக்க வேண்டாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை விருந்தில் பயன்படுத்துங்கள்:
புத்தாண்டு விருந்தில் உபயோகிக்கும் தட்டுகள், டம்பளர் என அனைத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களாக இருக்க வேண்டும். நண்பர்களுக்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தருவதற்கு பதிலாக, வீட்டிலேயே சமைத்த உணவுகளை சூடாக பரிமாறலாம். அதேபோல், குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி கலந்த சூடான நீரை பருகவும்:
நீங்கள் ஒரு பொது இடத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், சூடான நீர் உட்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். க்ரீன் டீயில் ஒரு துண்டு இஞ்சி, எலும்பிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம். எப்போதும் நீர் பருகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியே செல்ல தடையா? கவலையை விடுங்க.. வீட்டிலேயே கொண்டாட சில டிப்ஸ்..
விர்ச்சுவல் சந்திப்பு:
உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கிட்டத்தட்ட இணைந்திருக்கும் முறையில், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பான, கவலையற்ற விர்ச்சுவல் விருந்தை மேற்கொள்ளலாம். இரவு உணவு, லைவ்ஸ்ட்ரீம் பட்டாசு காட்சி, கச்சேரி என அனைத்தையும் உங்கள் நண்பர்களுடன் விர்ச்சுவல் முறையில் கொண்டாடலாம். இந்த வழி கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மேற்கண்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் கட்டாயம் பின்பற்றுங்கள். என்னதான் கொரோனா பாதிப்பு நம்மை வாட்டி வதைத்தாலும், எப்படியோ சமாளித்து 2020-ஐ கடந்துள்ளோம். அதேபோல புதிய ஆண்டில் அனைத்து இன்னல்களும் நீங்கி, நிலைமைகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை வைத்து 2021-ம் ஆண்டை மகிழ்ச்சியோடு வரவேற்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.