வினோதினி, வித்யா, நவீனா, சோனாலி, பிரான்ஸினா, மோனிகா, ரோஸ்லின் என்று முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் பெண்கள் மீதான உடல் வெறியாடல் கொலைகளுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் பெயர், ‘காதல் கொலைகள்’. ஒருதலைக் காதலால் கொலை, ஏமாற்றிய காதலியைக் கொலை செய்த காதலன் என காதல் உணர்வு சரியாகச் சொல்லித்தரப்படாத சில முட்டாள் இளைஞர்களின், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு நாம் காதல் முலாம் பூசிக்கொண்டிருக்கிறோம்.
காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உதயக்குமார் என்னும் முன்னாள் மாணவரால் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வகுப்பறையில் வைத்தே கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் கரூர் கல்லூரி மாணவி சோனாலி. கரூரே கண்ணீர் வடித்தது. அதற்கு அடுத்த நாள்.... விரைவில் திருமணம் நடக்கவிருந்த தூத்துக்குடி ஆசிரியை பிரான்ஸினா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கீகன் ஜோஸ் என்பவனின் கைகளில் சிக்கி, ஒருதலைக் காதலுக்காகப் பரிதாபமாக பிரான்ஸினா பலியானார்.
அந்தத் துயரச் சம்பவம் நடந்த அன்று மாலையே திருச்சியில் பாலமுருகன் என்பவரால் மோனிகா என்ற இளம்பெண்ணும், புதுச்சேரியில் எழிலரசன் என்னும் இளைஞரால் ரோஸ்லின் என்ற இளம்பெண்ணும் காதலிக்க மறுத்த ஒரே காரணத்துக்காகச் சரமாரியாகத் தாக்கப்பட்டனர். என்ன கொடுமை இது? மனம் கொதிக்கிறது. பெண் பிள்ளைகள் உள்ள வீடுகளில் எல்லாம் இதுபோன்ற செய்திகள் தரும் கலக்கம், மிக அதிகம். காதல் என்பது உன்னதமான ஓர் உணர்வு. ஆனால் இன்றோ காதலெனும் பெயரில் கொலைவெறி கோரத் தாண்டவமாடும் இதுபோன்ற விபரீதங்கள் தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கின்றன. மனநோய் பீடித்த சிலரின் வெறியாட்டம் இது என்று அசட்டை செய்ய இயலவில்லை. காரணம், கொலையாளிகள் அனைவருமே ஏதோ ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த, அவர்கள் நம்பி வளர்த்த பிள்ளைகள்தான்.
ஒரு கையில் காதல் கடிதமும் மறு கையில் அரிவாளும், ஆசிட் குப்பியும் ஏந்தி வருகிறது இன்றைய பயங்கரவாதக் காதல். இதை தொலைக்காட்சிகளும், சினிமாவும் உசுப்பேற்றுகின்றன. ஒரு பெண்ணைத் தொடர்ந்து வந்து வம்பு செய்வது காதல் என்ற ஒரு கோட்பாடே பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது. 'உன்னைப் பாக்கவே பிடிக்கல' என்று விலகும் பெண்ணிடம், 'என்னப் பாக்கப் பாக்கத்தான் புடிக்கும்' என்று வசனம் சொல்லும் கதாநாயகர்களை உருவாக்கியவர்கள், இப்போது, 'உனக்குப் பிடித்திருக்கிறதா? நிச்சயமான பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம். அவளை உன்னைக் காதலிக்க வைக்கலாம்' என்ற புது நியாயம் சொல்கிறார்கள்.. 'என்னைக் காதலிக்க மறுத்தால் உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்ற மிரட்டல் யாரிடமிருந்து எப்போது வரும் என்று பெண்களும் பெற்றோர்களும் பதைக்கும் நிலை இன்று.
2012-ம் ஆண்டில், ஆசிட் வீச்சுக்கு உள்ளாக்கப் பட்ட வினோதினி, வித்யா எனத் தொடங்கிய இந்தக் கொலைகளின் பயணம் முடிந்தபாடில்லை. தேசியக் குற்றப் பதிவேடு காப்பகத்தின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 2012-15 ஆண்டுகளில் பதிவான காதல் தொடர்பான குற்றங்களின் எண்ணிக்கை 1,021. காதலுக்காகக் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை வருடத்துக்கு சராசரியாக 150 என்கிறது எவிடன்ஸ் அமைப்பு. மேலும், காதல் கொலைகளாக நாம் சித்தரிக்கும் வெறியாட்டக் கொலைகளில், 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்தக் கொலைகளில் ஈடுபட்டு இன்று சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக நிற்கும் இளைஞர்கள் எல்லாம் யார்? ‘பெண் என்பவள் முட்டாள். உன் பாதம் பணிய வேண்டியவள். நீ எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவள் உன்னை ஏற்றுக்கொள்வாள்’ என்று ஆணாதிக்கச் சிந்தனைகள் மூளைக்குள் திணிக்கப்பட்ட, ஹீரோயிஸத்தின் மிச்சம்தான் இந்த இளைஞர்கள்.
ஆண்கள் மட்டும் இப்படி நடந்து கொள்வதில்லை. பெண்களும் நடந்து கொள்கிறார்கள். ஆனால் வெளியில் அதிகம் பேசபடுவதில்லை என்கிறார், உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன். ‘காதலிக்கப்படுபவள் என்னுடைய உடைமை... அவள் என்னைக் காதலித்தாலும், காதலிக்காவிட்டாலும்’ என்று மனதுக்குள்ளேயே ஒரு பெண்ணுடன், அவளது அனுமதியில்லாமலே வாழ ஆரம்பிக்கிறான் ஒரு ஆண். அந்த ஒருதலைக் காதல் பூதம் புகுந்தவுடன், பெண் என்பவள் நம்மைப் போன்ற சகமனுஷி என்றோ, அவளுடைய உடலிலும் ரத்தமும், சதையும்தான் இருக்கிறது என்றோ அவனுடைய முட்டாள் மூளையில் துளிக்கூட தோன்றுவதே இல்லை.
ஆண், பெண் பேதம் பார்க்காத ஒரு பெண் சிரித்துப் பேசுவதையும், அன்பாக உரையாடுவதையும் அந்தப் பூதம் அவனுக்கு ‘அவளுக்கு உன்மேல் அளவுகடந்த ப்ரியம்’ என்று தவறாகப் போதிக்கிறது. அதன்பிறகு அவளுக்கென்று ஒரு மனமாவது, மண்ணாங்கட்டியாவது. அவள் அவனைக் காதலித்தே தீர வேண்டும் அவ்வளவுதான். இல்லையென்றால், ‘எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்று அந்தப் பெண்ணைக் கொலைசெய்யும் அளவுக்கு அவனைக் கொண்டு தள்ளிவிடுகிறது அந்த இனக்கவர்ச்சி வெறி.
காதல் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். வெறும் உடலையும், புற அழகையும் பார்த்துதான் இன்றைக்கு இளைய சமுதாயத்தின் காதல் வளர்கிறது. காதலிக்காவிட்டால் ஆசிட் வீச்சு, கழுத்தை அறுத்து கொலை என்று இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் புதிதானவை. ஏனெனில், வேலைவெட்டி இல்லாமல், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆண் மீதுதான் அழகான பெண்களுக்கு காதல் வரவேண்டும் என்பது அவர்களின் மனதில் அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்த கள்ளிச் செடிகளாய் நாம் வளர்த்து வைத்திருக்கும் களைகள். இந்த உலகில் காதல் செய்பவர்கள் அனைவருமே ஒன்று சேர்வதில்லை. பெரும்பாலானோர் உயிருக்கு உயிராக காதலித்த பின்னர், பிரிவையே சந்திக்கின்றனர். இப்படி உயிருக்கு உயிராக காதலித்தவரை மறப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நிறைய மக்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால், தன்னம்பிக்கையை இழந்து வாழ்க்கையே முடிந்துவிட்டது போல், சரியாக சாப்பிடாமல், எதையோ யோசித்துக் கொண்டே வானத்தைப் பார்த்தவாறு இருப்பார்கள். இப்படியெல்லாம் இருப்பதால் மட்டும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. காதல் தோல்வி அடைந்தால், தன்னம்பிக்கையை கைவிடாமல், இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் வாழும் வாழ்க்கையை சந்தோஷமான பாதையில் எடுத்துச் செல்ல முயல வேண்டும்.
ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்ல முடியாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிகள் உள்ளன என்கிறார், பிருந்தா ஜெயராமன்.
சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த உங்கள் காதல் படகை மூழ்கடித்துவிட்டு உங்களை கண்ணீர் கடலில் தள்ளிவிடுகிறது காதல் தோல்வி. அவன்/அவள் எனக்குச் செய்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது என்ற கோபம்தான் பல எண்ணங்களுக்கு காரணமாக அமைகிறது. என்னை நேசிக்க இந்த உலகத்தில ஒரு ஜீவனும் இல்லை. என்னை யாருக்கும் பிடிக்காது என மனச்சோர்வையும் கொடுக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும் என ஏற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
முன்னோக்கிச் செல்லுங்கள்!
‘காலந்தான் காயத்திற்கு மருந்து’ என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். நீங்கள் இரண்டு பேரும் பிரிந்த சமயத்தில் இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கசப்பாகத் தொனித்திருக்கலாம். ஏனென்றால், காலம் கடந்தாலும் பிரச்னைக்கு ஓரளவுதான் தீர்வு கிடைக்கும்.
வாய்விட்டு அழுங்கள்!
மனதில் இருக்கும் பாரத்தை இறக்க வேண்டுமானால், மனம் விட்டு அழ வேண்டும். இப்படி மனம் விட்டு சத்தமாக அழும் போது, மனதில் உள்ள கஷ்டம் நிச்சயம் போய்விடும். அதனால் தான் அனைவரும், எந்த ஒரு சோகமான செய்திக்கும் அழுகிறார்கள். உங்கள் மனதுக்குள் இருக்கும் பாரத்தை வெளியே கொட்டி அழுவதில் எந்தத் தவறுமில்லை. “அழ ஒரு காலமுண்டு.. புலம்ப ஒரு காலமுண்டு.. அழுதால் நீங்கள் ஒரு கோழை என்று அர்த்தமில்லை. உணர்ச்சியை அடக்காதீர்கள். வாய்விட்டு அழுது விடுங்கள்.
உடற்பயிற்சி!
உடற்பயிற்சி காதல் முறிவினால் ஏற்பட்ட வலியில் இருந்து மீள்வதற்கு உடற்பயிற்சி கூட உதவியாக இருக்கும். தினமும் மனதை அமைதிப்படுத்தும் வகையிலும், கவனத்தை வேறு திசைக்கு திருப்பாத வகையிலும் உடற்பயிற்சியை செய்து வரலாம். காதல் தோல்வியால் நீங்கள் உணர்ச்சி ரீதியில் மிகவும் துவண்டு போயிருப்பீர்கள். இழந்த சக்தியை மீண்டும் பெற உடற்பயிற்சியும், ஊட்டச்சத்துமிக்க உணவும் உங்களுக்குக் கைகொடுக்கும்.
எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள்!
உங்களுக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். ஒருபோதும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டுகிறவர்களுடன் நேரம் செலவழித்தால் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். காதலிக்கும்போது மனது உற்சாகமாக இருக்கும். உலகமே நமக்காகப் படைக்கப்பட்டதைப் போல இருக்கும். ஆனால் அந்த காதலில் தோல்வி என்று வந்துவிட்டால் உலகமே இருண்டுவிடும். எதைப்பற்றியும் சிந்திக்கத் தோன்றாது. எனவே உங்களின் இந்த சோக மனநிலையை மாற்றுங்கள். எந்த சூழ்நிலையிலும் தனிமையில் இருக்க வேண்டாம். நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பேசி மனதை உற்சாகப்படுத்த முயலுங்கள்.
மனதை லேசாக்குங்கள்!
காதலில் தோல்வி என்று கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும். சமயத்தில் இது இதயநோயில் கூட கொண்டுபோய் விட்டுவிடும். எனவே மனதை லேசாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். மனம் வலிக்கத்தான் செய்யும், வேறு வழி இல்லை இதமான பாடல்களை கேளுங்கள். மனதின் ரணத்தை ஆற்ற உதவும்.
நொறுங்கிப் போகாதீர்கள்!
காதலின் தீவிரத்தை எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டீர்களோ அதேபோல காதல் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தவிர்க்கமுடியாத சம்பவங்களை மனதளவில் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த பிரிவினால் சில நல்ல விசயங்கள் நடக்கப்போகிறது என்பதை மனதளவில் நம்ப ஆரம்பித்தால் போதும் தோல்வி என்பது மனதையும் உடலையும் பாதிக்காது.
புதிதாய் காதலியுங்கள்!
காதல் தோல்வியை மறக்க புதிதாக காதலிப்பதுதான் சிறந்த வழி. வீட்டில் உள்ளவர்களை மனதார நேசியுங்கள். இத்தனைநாள் அவர்களை சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும் எனவே உங்களுக்கான நேரத்தை பெற்றோர்கள், சகோதரர்கள், நண்பர்களுடன் செலவிடுங்கள். உங்களின் மனதில் இருந்த பாரம் குறையும். தோல்வி எண்ணம் தலை தூக்காமல் இருக்கும்.
நம்பிக்கை!
தோல்வி என்பது ஏற்படக்கூடாதுதான் ஆனால் ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லை. இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதற்கான மனதைரியத்தை அளிக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள். இறை நம்பிக்கை என்பது எத்தகைய தோல்வியையும் தூர விரட்டிவிடும்.
பிஸிமாக மாறுங்கள்!
கசப்பான அனுவங்களை அசைபோடுவதால் மேலும் மன அழுத்தமும், சோர்வும் அதிகரிக்கும். அவற்றை நினைக்காதீர்கள். தினசரி வாழ்வில் காலை முதல் இரவு வரை உங்களை ‘பிஸி'யாக வைத்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாதபடிக்கு, வேலை, யோகா, தியானம், நுண்கலைப் பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்றவற்றைக் கற்றுக்கொண்டு உங்கள் கவனத்தை அவற்றில் செலுத்துங்கள். மனதின் வெறுமையைப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நிரப்புங்கள். நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மை விட்டு போகாதவர்கள்தான் நண்பர்கள். அத்தகைய நண்பர்களுடன் இருந்தால், சந்தோஷத்தைத் தவிர, எந்த ஒரு கஷ்டமும் நம்மை அண்டாது. இதனால் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.
தலையணை
நண்பர்களுக்கு அடுத்தப்படியாக ஆறுதலாக இருப்பது தலையணைதான். ஆகவே எப்போதெல்லாம் தனியாக இருப்பது போல் உணர்கிறீர்களோ, அப்போது தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினால், மனதிற்கு இதமாக இருக்கும்.
அழகை மெருகேற்றலாம்
காதலில் விழுவதற்கு முன், மற்றவர்களை தம் அழகால் மயக்க வேண்டுமென்று எப்படியெல்லாம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போம். ஆனால் அதுவே காதலி/காதலன் கிடைத்துவிட்டால், அழகைப் பராமரிப்பதை விட்டுவிடுவோம். ஆகவே காதல் முறிவு ஏற்பட்டால், சோர்வு இல்லாமல், மீண்டும் உங்களை அழகுபடுத்த ஆரம்பித்து, மற்றவர்கள் முன்பு சந்தோஷமாக இருந்து காட்டுங்கள்.
புத்தகம் படிக்கலாம்
புத்தகம் படிப்பது எப்போதும் ஒருவித ஆறுதலைக் கொடுக்கும். ஆகவே மன தைரியத்தை ஊக்குவிக்கும் அல்லது தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலான நாவல்களை வாங்கி படியுங்கள்.
சுற்றுலா
மனதை சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ள நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை விட சிறந்த செயல் வேறொன்றும் இருக்க முடியாது. ஆகவே நண்பர்களுடன் மனதிற்கு அமைதியைத் தரும் இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்.
எப்போதும் காதல் முறிவு ஏற்பட்டால், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல், இனிமேல்தான் வாழ்க்கையே உள்ளது என்று எண்ணி தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தால், காதல் முறிவின் வலியில் இருந்து எளிதில் மீள முடியும்.
-ஜெனிபர் டேனியல், செய்தியாளர், நியூஸ்18 தமிழ்நாடு
Published by:Veeramani Panneerselvam
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.