உடலுறவின் போது திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவது குற்றம்: கலிபோர்னியாவில் புதிய சட்டம்

உடலுறவின் போது திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவது குற்றம்: கலிபோர்னியாவில் புதிய சட்டம்

பிரதிநிதித்துவப் படம்.

AB 453 என்ற இந்த புதிய மசோதா வந்தால் அனுமதியின்றி, சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சிரீதியான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும்.

  • Share this:
உடலுறவு கொள்ளும் போது ஒருவரது சம்மதம் இல்லாமல் ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்துக்குச் சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் முதல் மாகாணமாக கலிபோர்னியா இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

AB 453 என்ற இந்த புதிய மசோதா வந்தால் அனுமதியின்றி, சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சிரீதியான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும்.

இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா டெய்லி மெய்ல் ஊடகத்துக்குக் கூறும்போது, “2017 முதல் இன்னொருவர் சம்மதமின்றி ஆணுறையை அகற்றும் விவகாரத்தை சட்ட ரீதியாகத் தடுப்பதில் நான் பணியாற்றி வருகிறேன்.

இத்தகையச் செயலைச் செய்பவர்களை தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பாக்கும் வரை நான் ஓயப்போவதில்லை. ஆன்லைன் சமூக ஊடகங்களில் இன்னொருவருக்கு தெரியாமல் எப்படி ஆணுறையை உடலுறவின் போது அகற்றுவது என்பது குறித்த ஆலோசனைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது எனக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவதை ஊக்குவிக்க முடியாது. ஆனால் சட்டத்தில் இது ஒரு குற்றம் என்பதாக இதுவரை எதுவும் இல்லை” என்கிறார்.

ஸ்டெல்திங் என்று பாப்புலராக அழைக்கப்படும் இத்தகைய திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றும் செயல் பற்றி 2018-ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் செக்‌ஷுவல் ஹெல்த் செண்டர் இந்த ஆராய்ச்சியை நடத்தியதில் மூன்றில் ஒரு பெண்ணும் ஐந்தில் ஒரு ஆணும் இதில் உடலுறவின் போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இப்போது கலிபோர்னியாவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெல்திங் என்ற திருட்டுத்தன ஆணுறை அகற்றும் செயல் தொடர்பாக அலெக்ஸாண்ட்ரா பிராட்ஸ்கி என்பவர் நடத்திய ஆய்வின் படி, “செக்ஸ் வைத்துக் கொள்ளும் இளம் ஜோடிகளிடையே உடலுறவுக்கு ஒத்துக் கொள்ளும் நபரின் சம்மதமின்றி செக்ஸின் போது ஆணுறையைத் திருட்டுத் தனமாக அகற்றி விடுவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது” என்பது தெரியவந்தது.

இதனை பாலின உரிமை மீறல் ஆகவும் கற்பழிப்பாகவும் பார்க்க வேண்டும், வன்முறையாகக் கருத வேண்டும் என்ற குரல்கள் வெளிநாடுகளில் எழுந்து வருகின்றன.

இப்படி திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றுவதால் பெண் கருத்தரிப்பது நடந்து விடும் என்ற அச்சத்தை தவிரவும், பாலியல் உறவு உடன்படிக்கையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

இதைப் பாலியல் ரீதியான தாக்குதல் என்றே பார்க்க வேண்டும் என்று அங்கு பெண்கள் தரப்பிலிருந்து குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்தான் கலிபோர்னியா முன்னோடியாக திருட்டுத்தன ஆணுறை அகற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளது.
Published by:Muthukumar
First published: