• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • குழந்தைகளை பாதிக்கும் யூடியூப்.. பெற்றோர்களின் பொறுப்பு என்ன..?

குழந்தைகளை பாதிக்கும் யூடியூப்.. பெற்றோர்களின் பொறுப்பு என்ன..?

யூடியூப் மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தளம்தான் என்றாலும் அது குழந்தைகளுக்கானது அல்ல என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  யூடியூபே தங்களுடைய இணையதளம் 13 வயதிற்கு மேற்பட்டோருக்கானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் 2018 ஆய்வின் படி 34 சதவீதம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் யூடியூபில் தொடர் நிகழ்ச்சிகளை பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியதாக தெரிவிக்கிறது.

  மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தளம்தான் என்றாலும் அது குழந்தைகளுக்கானது அல்ல என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எந்தெந்த வகைகளிலெல்லாம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்.

  அதாவது, நீங்கள் உங்கள் பயன்பாட்டிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் யூடியூபில் பல வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள். யூடியூபும் நீங்கள் பார்க்கும் வீடியோக்களை வைத்து சில வீடியோக்களை பரிந்துரைக்கும். அப்படி குழந்தை வீடியோக்கள் பார்க்கும்போது உங்கள் விருப்பத்திற்கேற்ப பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்களை பார்க்க நேரிடலாம். அது குழந்தைக்கு முற்றிலும் தேவையற்றதாக இருக்கும். நீங்களும் குழந்தை உங்களை தொந்தரவு செய்யாமல் வீடியோ பார்க்கிறது என கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள்.

  இதற்கு சிறந்த மாற்று யூடியூப் கிட்ஸ். இது குழந்தைகளுக்கானது மட்டுமே என்பதால் தவறான வீடியோக்களை காண நேராது.  சிலர் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பே குழந்தைக்கு பாடல்கள், பாடங்கள் கற்றுத்தர யூடியூபை பயன்படுத்துவதாக சொல்வார்கள்.

  ”அது அவர்களுக்கு முறையான கல்வியைக் கற்றுத் தராது” என்கிறார் கேர்.காம் தளத்திற்கு பேட்டியளித்த குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பிராண்டன் ஸ்மித். அவர்கள் பாடும் பாடல், பயன்படுத்தும் மொழி வேறு வகையாகவும், பள்ளியில் சேர்ந்த பிறகு ஆசிரியர் சொல்லித் தருவது வேறு வகையாகவும் இருக்கும். இதனால் அவர்கள் குழம்பிப் போகும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்.

  அதோடு மனிதர்களுடனான உறவும் துண்டிக்கப்படும். நேரடியாக கைகளை அசைத்து பாடல் பாடி நீங்கள் கற்றுத் தருவதை காட்டிலும் யூடியூப் அதை சிறப்பாக செய்யாது என்கிறார் ஸ்மித். இதற்கிடையே குழந்தைகளை குறிவைக்கும் விளம்பரங்களும் அவர்களின் சிந்தனைகளை சிதைக்கும் என்கிறார்.

  சில குழந்தைகள் அந்த வீடியோவில் வரும் குழந்தைகள் மற்றும் கதாபாத்திரங்களை தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்ள நேரிடும். சில வீடியோக்களைப் பார்த்து ரியாலிட்டியைத் தெரிந்துகொள்ளாமல் அதை அப்படியே தானும் செய்ய முயற்சிப்பார்கள். இது தவறான புரிதலையும் , கற்றலையும் ஊக்குவிக்கும் என்கிறார் ஸ்மித்.

  அடுத்ததாக என்னதான் ஆக்கப்பூர்வமாக குழந்தைகள் யூடியூபை பயன்படுத்தினாலும் அதற்கான திரை நேரம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது அவசியம். அதிகபட்சமாக குழந்தைகளின் திரை நேரம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்பதே போதுமானது என்கிறது காமன் சென்ஸ் மீடியா.

  எனவே நேரத்தை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையெனில் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி அதற்கு அடிமையாகக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறார் மீடியா பாதுகாப்பு வல்லுநர் பால் டேவிஸ்.  இந்த திரை நேரம் அதிகரித்தல் அவர்களின் தூக்கத்தையும் பாதிக்கும். தூங்கும் முன் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவது பெரியவர்களுக்கே தூக்கமின்மைப் பிரச்னையை உண்டாக்கும் என்ற நிலையில் குழந்தைகள் பயன்படுத்துவது ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிதை மாற்றத்தையே தாமதப்படுத்தும் என்கிறது நேஷ்னல் ஸ்லீப் ஃபவுண்டேஷன்.

  எனவே குழந்தைக்கு மட்டும் கட்டுபாடுகள் வகுக்காமல் பெரியவர்களும் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை டிவி, லேப்டாப், செல்ஃபோன் பயன்படுத்தாதீர்கள் என்கிறது.

  சிறந்த வழியாக; புரிந்துகொள்ளக் கூடிய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பொருமையாக புரிய வைப்பது அவசியம். உண்மை எது, போலி எது என்பதை உணர்த்த வேண்டும். அதேபோல் அமர்ந்த இடத்திலேயே எந்தவித முயற்சிகளின்றி செல்ஃபோன் விளையாட்டுகளில் வெற்றி பெறுவது என்பதும் எந்தவிதத்திலும் பயனில்லை என்பதையும் உணர்த்துவது பெற்றோர்களின் கடமை.

  அதில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அதனால் ஏற்படும் ஏமாற்றம், மன அழுத்தம் அவர்களை மனதளவில் பாதிக்கும். தனிமை, சமூகத்தை எதிர்கொள்ள துணிச்சலின்மை, பதட்டம், பாதுகாப்பின்மை என இப்படி செல்ஃபோன் வீடியோக்கள் அவர்களை எந்த நிலைக்கும் தள்ள நேரிடும். எனவே பெற்றோர்கள் அவர்களை விழிப்படையச் செய்து நிஜத்தை புரிய வைக்க வேண்டியது மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் என்கிறார் கேர்.காம் இணையத்திற்கு பேட்டியளித்த குழந்தை நல வல்லுநர் மோரிசன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: