ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தம்பதியின் உறவைக் குலைக்கும் ஸ்மார்ட் போன்கள்.. நீங்க எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துறீங்க

தம்பதியின் உறவைக் குலைக்கும் ஸ்மார்ட் போன்கள்.. நீங்க எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துறீங்க

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விவோ இந்தியாவின் தலைவர் யோகேந்திர ஸ்ரீராமுலு ஆய்வு குறித்து கூறும்போது, இன்றைய வாழ்க்கையில் ஸ்மார்ட்போனின் முக்கியத்துவம் மறுக்க முடியாதது தான். ஆனால் அதிகப்படியான பயன்பாடுகள் என்பது தான் ஆபத்தானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூன்றாம் கையாகவும், ஆறாம் விரலாகவும், முளைத்திருக்கிறது ஸ்மார்ட் போன்கள். ஒரு காலத்தில் தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது. பின்னர் வீட்டிற்கு ஒன்று முன்னேறியது. அறிவியல் முன்னேற்றத்தால் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொலைதொடர்பின் வீச்சு அதிகரித்திருக்கிறது. இப்போது ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் ஆறு செல்போன்கள் இருக்கிறது. செல்போன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

வெறும் செல்போன் ஸ்மார்ட் போனாக அவதாரம் எடுத்த பிறகு அதன் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. ”செல்போன்கள் உலகத்தையே உங்கள் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டது” என்கிற கூற்று உண்மைதான். உலகமே உள்ளங்கைகளுக்குள் வந்து விட்டாலும், ஒரே வீட்டிற்குள் இருக்கும் உறவுகளை தூரமாக்கியிருக்கிறது ஸ்டார்ட் போன்கள் என்பது தான் நிதர்சனம். ஆளுக்கொரு ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு, ஒரே அறையில் ஆளுக்கொரு மூளையில் முடங்கி கிடக்கிறோம். இதனால் உறவுகள் பாதிக்கப்படுகிறது. ஆனாலும் செல்போன்களின் பயன்பாடு குறையவில்லை.

அதிலும் கணவன் மனைவி உறவையே தற்போது கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட அதிர்ச்சி செய்தி ஒன்றை  வெளியிட்டிருக்கிறது ஒரு ஆய்வின் முடிவு.

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டிருக்கிறது. திருமணமான 88 சதவீத இந்திய தம்பதிகள் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தான் தங்கள் உறவை பாதிக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

விவோ, சிஎம்ஆர் எனப்படும் சைபர் மீடியா ரிசர்ச் என்கிற அமைப்புடன் இணைந்து இந்தியாவில் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோரிடம் நடத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துவதால் திருமணமான தம்பதிகளின் உறவுகளில் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்கள் குறித்து ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத் மற்றும் புனேவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, கணக்கெடுக்கப்பட்ட இந்திய தம்பதிகளில் 67 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும் போது கூட, ஸ்மார்ட்போன்கள் தங்களை ஆக்கிரமித்து விடுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் பதிலளித்தவர்களில் 66 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்கள் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஒரு நாளில் தங்களின் பெர்சனல் ஹவர் எனப்படும் தனிப்பட்ட நேரத்தில் ஒவ்வொருவரும் சுமார் 5 மணி நேரத்தை ஸ்மார்ட் போன்களுடன் செலவிடுகிறார்கள். இப்படி ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அருகில் இருப்பவர்களுடன், குறிப்பாக தங்கள் இணையர்களிடம் கூட உரையாடல்களை சீர்குலைக்கிறது எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் 70 சதவீத மக்கள்  ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது மனைவி குறிக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். 69 சதவீத தம்பதிகள் தங்கள் மனைவியுடன் உரையாடும் போது அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

விவோ இந்தியாவின் தலைவர் யோகேந்திர ஸ்ரீராமுலு ஆய்வு குறித்து கூறும்போது, இன்றைய வாழ்க்கையில் ஸ்மார்ட்போனின் முக்கியத்துவம் மறுக்க முடியாதது தான். ஆனால் அதிகப்படியான பயன்பாடுகள் என்பது தான் ஆபத்தானது. அது குறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு பொறுப்பான நிறுவனமாக, தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் சுட்டிக்காட்டுவதற்காகவே இந்த ஆய்வு எனக் கூறியுள்ளார்.

First published:

Tags: Health, Love, Relationship, Smartphone