எனக்கு நானே ராஜா, எனக்கு நானே இளவரசி என்று அதுவரையிலும் கேள்வி, கேட்பார் இன்றி சுதந்திரமாக நம்முடைய எண்ணப்படி வாழ்ந்து வந்த சிங்கிள்ஸ்களுக்கு திருமண வாழ்க்கை ஒரு திருப்புமுனையாகத் தான் அமையும். தனக்கென்று ஒரு துணை கிடைக்கிறது என்று ஒரு சந்தோசம் கிடைத்தாலும் இனி இருமனமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நமக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் குணாதிசங்கள், அவர்களுடைய விருப்பு, வெறுப்புகள் நமக்கு ஒத்துப்போக வேண்டும். ஒத்துவராத விஷயங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதை கடைப்பிடித்தாலும் சவால்கள் நிறைந்திருக்கும்.
பெரும்பாலான நபர்கள் திருமண வாழ்க்கையில் ஒன்றிணைந்து போக முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், முதல் ஓராண்டில் சில விஷயங்களைக் கடைப்பிடித்து சமாளித்து விட்டால், பின்னர் வாழ்க்கை முழுவதும் அப்படியே இருந்துவிடலாம்.
எதை செய்யலாம், எதை கூடாது..?
விளையாட்டாக கேலி செய்கிறேன் என்ற பெயரில் எல்லை மீறி போகக் கூடாது. உடல் ரீதியாக விமர்சிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டாம். இருவரும் இணைந்து வேடிக்கையான செயல்களில் ஈடுபடலாம். ஒருவரை, ஒருவர் மதிக்க வேண்டும். காதல் மற்றும் அன்யோன்யம் விடுபடக் கூடாது. சுயநலன் பார்க்க கூடாது. உங்கள் பெற்றோரை சார்ந்திருக்க வேண்டாம். யதார்த்தமான எதிர்பார்ப்புகள் மட்டும் போதும்.
Also Read : மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்புக்கு இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும்.!
பண சம்மந்தப்பட்ட சிக்கல் ஏற்படக்கூடாது
நீ சம்பாதிப்பது போதவில்லை அல்லது நீ ரொம்ப அதிகம் செலவு செய்கிறாய் என்ற அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். வரவுக்கு தகுந்த செலவு செய்ய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்வது நல்ல பலனை தரும். பணக்கஷ்டம் ஏற்படும் தருணங்களில் வாழ்க்கையே வீணாகிவிட்டதாக புலம்பக் கூடாது.
வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யவும்
வீட்டு வேலைகள் மொத்தத்தையும் ஒருவர் மீது மட்டும் திணித்து விடக் கூடாது. இருவரும் பகிர்ந்து வேலைகளை செய்ய வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஒருசில வேலைகள் தெரியவில்லை என்றால் அல்லது செய்ய முடியாத சூழலில் உள்ளீர்கள் என்றால், உங்களால் செய்ய முடிந்த வேலைகளை தானே முன்வந்து செய்ய வேண்டும்.
இணைந்து நேரம் செலவிட வேண்டும்
திருமணத்திற்கு முன்பு நண்பர்கள், தோழிகள் என சுற்றித் திரிந்ததெல்லாம் சரி தான். இப்போதும் அவர்களோடு தொடர்பை துண்டித்து விடாமல் தொடர்ந்து இணைந்திருங்கள். ஆனால், அதே அளவு முக்கியத்துவத்தை உங்கள் வாழ்க்கை துணைக்கும் கொடுங்கள். முடிந்தவரை துணையுடன் சேர்ந்து இருக்க பழகுங்கள்.
Also Read : ஒரு பெண்ணுக்கு உங்கள புடிக்கனுமா? இந்த குணாதிசயங்கள் அதுக்கு ரொம்ப முக்கியம்..!
அன்யோன்யத்திற்கு எல்லை தேவை
திருமண வாழ்க்கை உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால் அன்யோன்யம் தேவை தான். அதே சமயம், ஒருவருக்கு, ஒருவர் தனிநபர் உரிமை, சுதந்திரம் போன்றவற்றில் தலையிடாமல் இருக்க வேண்டும். சில சமயம், அலுவலக பணிச்சுமை அல்லது வேறேதும் காரணங்களால் உங்கள் வாழ்க்கை துணை மனச்சோர்வு அல்லது உடல்சோர்வு அடைந்திருந்தால் அதிலிருந்து அவர்கள் வெளிவரும் வரை பொறுமை காக்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Marriage Life