நீங்கள் விரும்பும் நபர் ஏமாற்றிவிட்டால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

நீங்கள் விரும்பும் நபர் ஏமாற்றிவிட்டால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

மன உளைச்சல்

நீங்கள் விரும்பும் நபர் உங்கள் வாழ்க்கையில் இனி இருக்கமாட்டார் என்ற சூழல் வரும்போது, அந்த நிலையை எதிர்கொள்வது நிச்சயமாக கடினம். அதில் இருந்து வெளிவந்து புதிய நம்பிக்கை, புதிய பரிசம், புதிய வாழ்க்கை என உங்கள் வாழ்க்கையின் சிறகை பறக்கவிடுங்கள். உங்களுக்கான வானம் காத்திருக்கிறது.

  • Share this:
நீங்கள் நீண்டகாலமாக அன்பு செலுத்திய ஒருவர், உங்கள் வாழ்க்கையில் இனி இருக்கமாட்டார் என்ற சூழல் வரும்போது, அந்த நிலையை எதிர்கொள்வது நிச்சயமாக கடினம். கடந்தகால நிகழ்வுகளின் சிந்தனை, புதிதாக ஒன்றை சிந்திக்க உங்களை அனுமதிக்காது. அவர் ஏமாற்றிவிட்டார் என்பதை அப்போது ஜீரணிக்க முடியாது என்றாலும், அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் உங்கள் முன் இருக்காது. ஆனால், அந்த ஒரு ஏமாற்றம் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?

பழகும்முறை மாறும்



ஒருவர் உங்களை ஏமாற்றியபிறகு, மற்றவர்களுடன் பழகும் தன்மை மாறியிருக்கும். கடந்த கால ஏமாற்றங்கள், அவமானங்கள், ஆழமான அன்பு ஏற்படுத்திய காயங்கள் உங்களுக்கு நல்ல படிப்பிணையாக இருக்கும். புதிய அன்பு உங்களுக்கு பிடித்திருந்தாலும், அதனால் வலி ஏற்படும் சூழல் உருவானால் அந்த பாதிப்பை எதிர்கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்காது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்கும். அன்பை கொடுப்பதையும், பெறுவதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு நிலையிலும் கடந்தகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

நம்பிக்கை குறையும்



நீங்கள் ஆழமாக நேசித்த ஒருவர் ஏமாற்றிவிட்டார் என்றால், அதனால் ஏற்படும் காயம் உங்கள் நெஞ்சில் வடுவாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால், புதிதாக ஒருவர் மீது அவ்வளவு எளிதில் நம்பிக்கை வைக்கமாட்டீர்கள். ஒவ்வொருவரின் செயல்முறையையும் ஒருமுறைக்கு இருமுறையாவது எடைபோடுவது இயல்பாகவே உங்களுக்குள் வந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், சந்தேக பார்வையுடன் ஒருவரை அணுகுவது என்பது அதிகரித்திருக்கும். ஒரு சிலசமயங்களில் உங்கள் மீதே நம்பிக்கையின்மை ஏற்படும்.

சுயமதிப்பு பாதிக்கும்



நீங்கள் விரும்பும் ஒருவர் உங்களை அதிகளவில் தரக்குறைவாக அல்லது கீழ்த்தரமாக நடத்துகிறார் அல்லது விமர்ச்சிகிறார் என்றால், உங்களின் மீது உங்களுக்கே சுயமதிப்பு குறையத் தொடங்கும். என்ன செய்வதென்றுகூட தெரியாது. அத்தகைய சூழல்களில், உங்களின் நிம்மதியை, சுயமதிப்பை குறைப்பவருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதை உணர வேண்டும். குழப்பமான மன நிலையில் முடிவெடுக்க முடியாது என்றாலும், உங்களின் அன்பை கேலிக்குள்ளாகும் ஒருவருடன் தொடர்ந்து பயணிக்கும்போது, உங்களின் அடையாளத்தை இழக்க நேரிடும். குறைந்தபட்சம் மன அமைதியை விரும்புவது நல்லது.

பழைய நினைவுகள்



ஒருவேளை முன்னாள் காதலர் அல்லது காதலி உங்கள் மீது அதீத அன்பையும், பாசத்தையும் பொழிந்து இருந்தால், அதில் இருந்து மீள்வது மிகவும் கடினம். பழைய எண்ணங்கள் உங்களை எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அவர்களுடன் கழித்த நல்ல பொழுதுகள் மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை உங்கள் ஆழ் மனது விரும்பிக்கொண்டே இருக்கும். உங்கள் சிந்தனை பெரும்பாலும் அதனை சுற்றியே இருக்கும். உணர்ச்சிகளின் கீழ் நீங்கள் சிக்கிக்கொண்டிருப்பதால், நிகழ்காலத்தில் உங்களால் பயணிக்க முடியாமல் தேங்கி நிற்பீர்கள்.

இயல்புக்கு திரும்புங்கள்



காதலில் தோற்பது அல்லது ஏமாற்றப்படுவது மிகுந்த வலியை தருவது என்றாலும், நீங்கள் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். உங்கள் கடந்தகால வாழ்க்கையில் சந்தித்த மகிழ்ச்சியைக் காட்டிலும், அதற்கு மேலான அற்புதமான வாழ்க்கை காத்திருக்கிறது. உடைந்துபோன நம்பிக்கையை மீண்டும் மீளுருவாக்கம் செய்யுங்கள். காதலின் இரு முகங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், அன்பு மட்டுமே உலகை இயக்குகிறது என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். புதிய நம்பிக்கை, புதிய பரிசம், புதிய வாழ்க்கை என உங்கள் வாழ்க்கையின் சிறகை பறக்கவிடுங்கள். உங்களுக்கான வானம் காத்திருக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: