அன்பான, ஆறுதலான வார்த்தைகளால் உருவாகும் திருமண பந்தம், கோபமான, தடித்த வார்த்தைகளால் பிரிவை நோக்கி தள்ளப்படுகிறது. சமூதாயத்தில் பொதுவாக ஆண்கள் வேலை மற்றும் பொருளாதார ரீதியாக மன அழுத்தத்திற்கு உருவாவதால் சற்றே கோபப்பட்டு கத்தினாலும், மனைவிமார்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து உள்ளது. மேலும் விட்டுக்கொடுப்பது, பொறுத்துக் கொள்வதுமே எந்த ஒரு உறவையும் பலப்படுத்தக்கூடியது.
திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் உங்கள் கணவரின் குணநலன்கள் தெரியாவிட்டாலும், அவருடன் வாழ ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அதனை மனைவி அறிந்துகொள்ள முடியும். ஒருவேளை உங்கள் கணவர் எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் கோபப்படக்கூடியவர் என்றால் நீங்கள் என்ன மாதிரியான விஷயங்களை செய்யலாம் என்பது குறித்த பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்.
1. அமைதியாய் இருங்கள்:
கணவன் - மனைவி சண்டையில் இருவரும் கோபமாக கத்தினால் நிலைமை மோசமடையவே செய்யும். எனவே கணவன் கோபமாக கத்திக்கொண்டிருக்கும் போது, கூடுமான வரையில் சூழ்நிலையை அமைதியாக கடக்கப்பாருங்கள். ஏற்கனவே கோபத்தில் இருப்பவரிடம் வாதம் செய்வது மேலும் கோபத்தை தூண்டும். முதலில் எதிரே இருப்பவரை பேச விடுங்கள், பிறகு மிகவும் அமைதியாக உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லுங்கள்.
2. ஓவராக பொறுத்துக்கொள்ளாதீர்கள்:
‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்பார்கள், உங்கள் கணவர் அடிக்கடி உங்களை விமர்சிப்பது, உருவம் அல்லது திறமை குறித்து கேலி செய்வது, மிகவும் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் அதனை ஒரு எல்லைக்கு மேல் பொறுத்துக்கொள்ளாதீர்கள்.
பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...
3. கோப தீயை அணைக்க நகைச்சுவை போதுமே:
முரட்டுத்தனமாக சண்டை உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருக்கும் போது நகைச்சுவையாக பேசுவது சில சமயங்களில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் மாறலாம். ஆனால் சில தவிர்க்க வேண்டிய, மென்மையான விவாதங்களின் போது உங்களுடைய நகைச்சுவை திறனை வெளிக்காட்டி, பார்ட்னருடனான வாக்குவாதத்தை குறைக்கலாம். கோபத்துடன் கத்தி அழுவதை விட, சிரித்த முகத்துடன் செல்லமாக சீண்டி நகைச்சுவையூட்டுவது சிறப்பானது.
4. வார்த்தைகளை கவனியுங்கள்:
‘சண்டையில் கிழியாத சட்டை இல்லை’ என்பது போல் கணவன் - மனைவி சண்டைக்குள் மோசமான, ஒருவரை ஒருவர் அவமதிக்க கூடிய வார்த்தைகளை பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. கணவர் உங்களுடையை வீட்டு வேலைகளை விமர்சிக்கும் போது, ‘நீ ஒன்றுக்கும் லாயக்கி இல்லை’ என்றால், உடனே ‘நானா.. நானா...’ என சந்திரமுகி கங்கா போல் பொங்காதீர்கள். அவர் அப்படி சொல்ல காரணம் என்ன, நமது வேலையில் உள்ள குறைகளை சரி செய்வது எப்படி என யோசியுங்கள்.
5. வெளிப்படையாக பேசுங்கள்:
மனதிற்குள் பல விஷயங்களை மறைத்துக்கொண்டு வெளியே வேறு ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு சண்டை கட்டுவது வேலைக்கு ஆகாத காரியம். இந்த தந்திரம் வாழ்க்கை துணையை சமாளிக்க உதவாது. எதுவாக இருந்தாலும் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது மட்டுமே நல்ல உறவுக்கான அடையாளமாகும். எனவே வீண் சண்டைகளை தவிர்க்க வாழ்க்கை துணை இருவரும் நல்ல மனநிலையுடன் அமர்ந்து, மனம் திறந்த ஆழமான உரையாடல்களை மேற்கொள்வது நல்லது.
6. தனிப்பட்ட விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்:
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கணவன் கோபமாக பேசும் வார்த்தைகள் சில சமயங்களில் அதிக வலியை தரலாம். உடல் ரீதியான வன்முறை உங்கள் உடலில் வடுக்களை விட்டுச்செல்லும் அதே வேளையில், ஒரு அவமதிக்கும் வார்த்தை உங்கள் உள்ளத்தில் வடுக்களை ஏற்படுத்தும். இருப்பினும், அவமானங்களிலிருந்து உங்களைத் திசைதிருப்ப முயற்சிக்கவும், அவற்றை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் உங்கள் கணவரின் வார்த்தையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மன அமைதியை கொடுக்கும்.
வெற்றிகரமான திருமண வாழ்வுக்கு பாலிவுட் ஜோடிகள் பகிர்ந்த ஆலோசனைகள்!
7. கணவரை தனியாக விடுங்கள்:
கணவன் கோபத்துடன் கத்த ஆரம்பித்துவிட்டார், உடனே நீங்களும் பதிலுக்கு கத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருக்கும் இடத்தை விட்டு நீங்கி அவருக்கான காலத்தையும், தனிமையையும் கொடுத்தால் கோபம் தலைக்கேறியவர் கூட மிஸ்டர் கூலாக மாறிவிடுவார். பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவ வேண்டும், தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறுங்கள். இது உங்கள் துணையின் கோபத்தை குறைக்க உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.