காதலுக்கு திசை, தேசம் என்பது ஒரு பொருட்டல்ல. தங்களின் நேசத்துக்குரியவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவர்கள் மீது மாறா அன்பு கொண்டிருப்பது காதலில் மட்டுமே சாத்தியம். ஆனால், இதில் இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால், ஒரு இடத்தில் அல்லது ஒரே ஊரில் இருக்கும் காதலர்களைப் போல் தொலை தூரங்களில் இருக்கும் காதலர்கள் உரையாடிக்கொள்ள முடியாது.
நினைத்த நேரத்தில் அவர்களுடன் தங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. இத்தகைய சூழலில் இருவருக்கும் இடையே சில மனக்கசப்புகள், சந்தேகங்கள் எழ வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, அவர்களுக்காக காத்திருப்பதுகூட தேவைதானா? என்றெல்லாம் ஒரு சில சூழல்கள் உங்களை நினைக்க நிர்ப்பந்திக்கும். அப்படியான நேரங்களில், தங்களுக்கு இடையிலான அன்பு சிறிதளவும் குறையாமல், காதல் பயணத்தை வாழ்க்கை முழுவதும் எடுத்துச்செல்ல சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
பரஸ்பர ஒப்புதல் :
நேசத்துக்குரியவர், உங்களை பிரிந்து செல்வதற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும் மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய அரவணைப்பில் நீங்கள் இனி இருக்க முடியாது என்றாலும், குடும்பத்தின் தேவை, நிதிச்சுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக தொலை தூரம் செல்வதை நினைத்து உங்களை சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள். அவர் இல்லாதபோது ஏற்படும் சூழல்களை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது என்றாலும், ஒரு சில சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பரஸ்பரம் பேசிக்கொள்ளுங்கள். பரஸ்பர ஒப்புதலில் உங்கள் நேசத்துக்குரியவர் செல்லும்போது, இருவருக்கும் நிம்மதியாக இருக்கும்.
நாள்தோறும் பேசுங்கள்
தொலைவில் இருக்கும் இருவரும் நாள்தோறும் பேசிக்கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அன்றைய பொழுதில் ஏற்பட்ட நிகழ்வுகளை உரையாடிக்கொள்வது, பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்தும். அதேவேளையில், எதிர்பார்க்கும் நேரங்களில் பேச வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பது, இருவருக்குமான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், இருவரும் தொலைவில் இருப்பதால், அழைக்கும்போது அன்புக்குரியவரின் சூழல் வேறுமாதிரியாக இருக்கலாம். அப்போது, உங்களிடம் உரையாட முடியாமல் போகலாம். அத்தகைய சூழல்களில், மெசேஜ் செய்துவிடுங்கள். சந்தேகத்துக்குரிய வகையில் உரையாடல்களை ஒருபோதும் எடுத்துச்செல்லாதீர்கள்.
சுதந்திரமாக இருத்தல்
தொலைவில் இருக்கும்போது, உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்துவிட்டதுபோல் சில சமயங்களில் உணரக்கூடும். அதனால் ஏற்படும் கோபத்தில் நேசத்துக்குரியவரை வார்த்தைகளால் கஷ்டபடுத்திவிடாதீர்கள். அது அவருக்கும் ஒருவித எரிச்சலை உங்கள் மீது ஏற்படுத்திவிடும். எப்போதெல்லாம் உரையாட நேரம் கிடைக்கிறதோ, அந்த நேரங்களை முடிந்தளவுக்கு மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். விருப்பங்களை பகிர்ந்துகொள்வதில் தவறில்லை. அதனை கோபக்கணைகளாக மாற்றி, சண்டையிட்டுக்கொள்வது சிறந்ததாக இருக்காது.
தொழில்நுட்பங்களின் உதவி
தொழில்நுட்பங்கள் அபாரமாக வளர்ச்சியடைந்து இருப்பதால், அவற்றை பயன்படுத்தி உங்களின் நேசத்துக்குரியவருடன் நேரத்தை செலவிடுங்கள். உதாரணமாக, வீடியோ கால் மூலம் இருவரும் முகம் பார்த்து உரையாடலாம். அன்பிற்குரியவருக்கு தங்களது மனதில் தோன்றுவதை கடிதமாக எழுதி இமெயில் மூலம் அனுப்புவது, இருவருக்குமான பரஸ்பர அன்பை மேலும் அதிகப்படுத்தும். ஆன்லைன் மூலம் கிப்ட்களை ஆர்டர் செய்து கொடுக்கலாம். மேலும், ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் படம் பார்க்கலாம் அல்லது சமைக்கலாம்.
கவனித்தல்
இருவரும் தொலைதூரத்தில் இருந்து உரையாடிக்கொள்ளும்போது, நிதானமாக மற்றொருவரின் உணர்வுகளை காது கொடுத்து கேட்பது மிகவும் அவசியமானது. முழுமையாக கேட்டபிறகு, அதற்கேற்ற தீர்வுகளை பேசி எடுப்பது உங்கள் இருவருக்கும் நல்லது. இல்லையென்றால், சிறு பிரச்சனையும் பெரிய விரிசலுக்கு காரணமாக அமைந்துவிடும். வஎத்தகைய உறவுக்கும் நம்பிக்கை என்பது அடித்தளம் என்பதால், அதில் ஒருபோதும் விரிசல் விழாமல் பார்த்துக்கொள்வது இருவரின் கடமையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy sex Life, Love, Relationship