உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் நபரை கையாள்வது எப்படி ?

காட்சி படம்

உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்றாங்களா? அதை கடந்து செல்ல டிப்ஸ் இதோ..

 • Share this:
  வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளக்கூடாத விஷயங்களில் நம்பிக்கை துரோகமும் ஒன்று. நாம் மிகவும் நம்பிய நண்பரோ, காதலியோ, காதலனோ நமக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டாங்கனா, அதில் இருந்து மீண்டு வருவது என்பது மறுவாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு சமம் என்று கூறலாம். ஒருவேளை அப்படியான ஒரு சூழலை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த கட்டுரை உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.

  விபத்து எப்படி ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுமோ, அதுபோலத்தான் நம்பிக்கை துரோகமும். விபத்துக்கும், நம்பிக்கை துரோகத்துக்கும் உள்ள ஒரு வித்தியாசம், விபத்து எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் நம்பிக்கை துரோகம், நமக்கு நன்கு பரிச்சயமான நபரால் மட்டுமே நடக்கக்கூடியது. அவர்கள், காதலியாகவோ, காதலனாகவோ, கணவனோ, மனைவியாகவோ கூட இருக்கலாம்.

  நம் வாழ்வின் சுகம், துக்கம், மகிழ்ச்சி என அனைத்து பரிணாமங்களிலும் பங்கேற்றிருந்த அந்த நபர், திடீரென நம்பிக்கை துரோகம் செய்யும்போது, நமக்கு அந்தநொடியில் என்னசெய்வதென்றே தெரியாது. அப்போதுதான் நமக்குள் இருக்கும் உட்சபட்ச கோபம், வலி, அதிர்ச்சி எல்லாம் ஒருசேர வெளிப்படும். நம் வாழ்க்கை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழந்து, ஒரு நிற்கதியான சூழலுக்கு தள்ளப்படுவோம். அந்த நிகழ்வை கடப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருக்கும்.

  அப்போதுதான், இருவரும் ஒன்றாக இருந்த காலங்களில் நடந்த அத்தனை அழகான விஷயங்களும் நம் கண்முன்னே வந்துசெல்லும். அந்த அழகிய தருணங்கள் மீண்டும் வராதா என்ற ஒருவித ஏக்கமும் நமக்குள் உருவாகும். இத்தகைய சூழலை எதிர்கொள்வதற்கு அல்லது சமாளிப்பதற்கு ஒரு சில விஷயங்களை கடைபிடித்தால், நிச்சயமாக கடினமான சூழலில் இருந்து நீங்கள் மீண்டு வரலாம். உணர்ச்சிகளுக்குள் சிக்காமல், முதிர்ச்சியாக இந்த விஷயத்தை அணுகலாம்.

  1.நம்பிக்கை துரோகத்துக்கான காரணம் : முதலில், அவர் உங்களுக்கு செய்த நம்பிக்கை துரோகத்துக்கான காரணம் என்ன? என்பதை பொறுமையாக யோசித்துப் பாருங்கள். யாரிடம் தவறு இருக்கிறது என்பதை ஒருமுறைக்கு மறுமுறை சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? அல்லது அவர் உங்களிடம் எதிர்பார்த்தது என்ன?, அவரின் எதிர்பார்ப்புகளை ஏதேனும் பூர்த்தி செய்ய தவறியிருக்கிறீர்களா? என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களிடம் தவறு இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் பார்ட்னரிடம் சென்று பேசுங்கள். அவரின் காரணத்தைக் கேளுங்கள்.

  2. நீங்கள் எடுக்கும் முடிவு : இருவரும் பேசிக்கொண்டபிறகு நீங்கள் எடுக்கும் முடிவு மிக முக்கியமானது. அதாவது, உங்கள் பார்ட்னரின் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறதா?, அவர் என்ன செய்திருந்தாலும் மன்னிக்கும் மன பக்குவத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். மனம் விட்டு பேசிக்கொள்ளுங்கள். நம்பிக்கை துரோகம் செய்யும் அளவுக்கு ஏன் அவர் சென்றார் என்பதற்கான விளக்கத்தை கேட்டு பெறுங்கள். அப்போது அவர் தன்னுடைய தவறை உணரவும் வாய்ப்பு இருக்கிறது.

  Also Read : நேற்று சாப்பிட்ட உணவால் வயிறு வலியா ? ஃபுட் பாய்சன் ஆயிடுச்சா என்பதை எப்படி கண்டறிவது ?

  3. கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள் : இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்ட பிறகு இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் சிறந்த மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள். பழைய தவறுகள் அனைத்தையும் மறந்து புதுமையான வாழ்வில் அடியெடுத்துவையுங்கள். ஒருபோதும் உங்களின் கடந்தகால வாழ்வை எந்த இடத்திலும் நினைவுகூறாதீர்கள். கடந்தகால வாழ்வில் இருந்து எடுத்துக்கொண்ட அனுபவங்களை, உங்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு பயன்படுத்துங்கள்.

  4. மன வலிமையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் : ஒருவேளை உங்கள் இருவரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்றாலோ, அல்லது அவருடைய விளக்கம் உங்களுக்கு திருப்திகரமாக இல்லாமல் இருந்தாலோ, தவறுகளை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அவர்களை பிரிய முடிவெடுத்தீர்களேயானால், நீங்கள் முதலில் மனதளவில் உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். தைரியமாக புதுவாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் தொடங்குங்கள். நீங்கள் இப்போது சுதந்திரமானவர். எதையும் முழுமனதோடு தொடங்கலாம்.

  5. பார்ட்னரின் உள்நோக்கத்தை அறிந்து கொள்ளுங்கள் : உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த உங்கள் பார்ட்னரின் விளக்கம் ஏற்புடையதாகவோ அல்லது ஏற்புடையது இல்லாமல் இருந்தாலோ, அந்த தவறை செய்ததற்கான பின்புலத்தை அறிந்து கொள்ளுங்கள். எந்த நோக்கத்துக்காக அவர் உங்களோடு இருந்தார் என்பதை அவர்களோடு பேசும்போதே உங்களுக்கு புலப்படும். மேம்போக்காக சில காரணங்களை உங்கள் முன் அவர் கூறினாலும், அவருடைய விளக்கத்தின் தோரணையில், நம்பிக்கை துரோகத்துக்கான உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

  இந்த 5 விஷயங்களையும் நீங்கள் பின்பற்றுவீர்களேயானால், நம்பிக்கை துரோகத்தை ஒரு முதிர்ச்சியுடன் எதிர்கொண்டு, புதுமையான வாழ்க்கையை தொடங்கலாம்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: