காதல் உறவில் பல வித சிக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும் சில பிரச்சனைகள் மிக மோசமான விளைவை ஏற்படுத்த கூடியவையாக இருக்கும். குறிப்பாக தவறான துணையை தேர்வு செய்வோருக்கு நிறைய சிக்கல்கள் வாழ்க்கையில் ஏற்படும்.
மோசமான உறவில் நீங்கள் இருந்தால் அடிக்கடி சண்டை உண்டாகும், இதனால் உங்களுக்கு மனதளவிலும் உடல் அளவிலும் பாதிப்புகள் வரக்கூடும். இது போன்ற மோசமான உறவில் இருந்து நீங்கள் உங்களை காப்பாற்றி கொள்ள சில வழிமுறைகள் உண்டு. இதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்
உங்கள் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது எதனால் ஏற்படுகிறது என்று யோசியுங்கள். அதே போன்று யாரால் அந்த பிரச்சனைகள் உண்டாகுகிறது என்பதையும் சிந்தியுங்கள். உங்கள் துணையை விட்டு விலகுவது மிகுந்த வேதனையையே தர கூடிய ஒன்றாக இருக்கும். எனவே, பிரச்சனைகளை கண்டு ஓடாமல் அதை எதிர்கொள்ள கற்று கொள்ளுங்கள். மேலும், உங்களைத் தொந்தரவு செய்யும் அனைத்தையும் உங்கள் மனதில் இருந்து நீக்கி, நிம்மதியாக இருங்கள்.
உங்கள் தரப்பு
எந்த ஒரு பிரச்சனையிலும் ஒருவரை குறிவைத்து தாக்குவது மிகவும் எளிது. உங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நடந்ததா? நீங்கள் உங்கள் அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டும். அதே போன்று நீங்கள் இருவரும் அந்த பிரச்சனைக்கு பொறுப்பேற்க வேண்டும். அப்போது தான் இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பித்து, நிம்மதியாக வாழ முடியும்.
உங்கள் வரம்பு
காதல் உறவில் இருக்கும்போது உங்கள் தனித்துவத்தை இழக்காதீர்கள். அந்த உறவில் நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்கிற அவசியத்தை நீங்கள் தெளிவாக உணர வேண்டும். அதே போன்று உங்கள் தேவைகளைப் பற்றி மிகவும் உறுதியாக இருங்கள். உங்களை ஒருபோதும் உணர்வு பூர்வமாக கையாள அனுமதிக்காதீர்கள். உங்களின் வரம்புகளை நீங்களே வகுத்து கொள்ளுங்கள்.
காதல் ஜோடிகள் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்..!
ஆலோசனை நிபுணர்கள்
உங்கள் உறவில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் ஒரு நல்ல மனநல நிபுணரை சந்திக்கலாம். மேலும் உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் அவர்களின் வெளிப்படையாக சொல்லுங்கள். அப்போது தான் இதற்கான தீர்வை அவர்களால் வழங்க முடியும்.
உறவை முடித்தல்
ஒரு உறவை முறித்து கொள்வது என்பது மிகவும் கடுமையானதாகத் தோன்றலாம், ஆனால் மோசமான உறவில் இருந்து வெளியேற சற்றும் யோசிக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் இன்றைய சூழலில் வெற்று பேச்சுகளை நம்பி அந்த உறவில் விழுந்து விடுகிறார்கள். சில காலங்களுக்கு பிறகு தான் அது எந்த அளவிற்கு மோசமான ஆபத்து நிறைந்த உறவு என்பது தெரிய வருகிறது. உங்களை உடல் அளவிலும், மனதளவிலும் காயம் ஏற்படுத்த கூடிய உறவை விட்டு உடனே விலகுங்கள். இந்த முடிவு பல நேரங்களில் இருவருக்குமான நல்ல தீர்வை வழங்க வாய்ப்புள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.