காதல் உறவில் பல வித பிரச்சனைகள் உருவாவது வழக்கம் தான். ஆனால், சில பிரச்சனைகள் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இவை பல்வேறு வடிவங்களில் அந்த உறவுக்குள் வரலாம். பொதுவாக ஒருவரை வாய் வார்த்தையாக மோசமாக நடத்துவதால் அந்த உறவு முற்றிலுமாக முறிந்து விட வாய்ப்பு அதிகம் உண்டு. இது அந்த நபரை மன ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் பாதிக்க செய்யும்.
அதே போன்று அந்த உறவில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும். அன்பையும், அக்கறையையும், பாசத்தையும் எதிர்பார்க்கும் உறவில் துஷ்பிரயோகம் செய்தால் அந்த உறவுக்கே அர்த்தமில்லை. இப்படிப்பட்ட தவறான நடத்தைகள் பற்றிய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் முக்கியமானது. இதற்கான அறிகுறிகளை இனி அறிந்து கொள்வோம்.
அவமரியாதை பெயர்கள்
உங்கள் துணை எந்தவொரு தேவையும் இல்லாமல் உங்களை அவமரியாதையான பெயர்களால் அழைத்தால், அதை மோசமான நடத்தையாக கருத வேண்டும். இது உங்களை அவர் எந்த அளவுக்கு மதிப்பீடுகிறார் என்பதை குறிக்கும் அறிகுறியாகும். மேலும், உங்கள் காதல் துணை இதை வழக்கமாகச் செய்து கொண்டே இருந்தால், உங்கள் உறவுக்கான மிக பெரிய எச்சரிக்கை மணியாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும். எனவே இது குறித்து கட்டாயம் உங்கள் துணையுடன் நீங்கள் பேச வேண்டும். ஒருவேளை நீங்கள் பேசி புரிய வைத்த பிறகும் இதே நிலை தொடர்ந்தால் அவர்களை விட்டு விலக வேண்டும்.
பிளாக் மெயில்
உங்கள் துணை உங்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் விதத்தை வைத்து எல்லாவற்றையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் துணை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உங்களை ஒருபோதும் கையாளக்கூடாது. இது போன்று நடந்து கொண்டால் அவருக்கு ஆரோக்கியமான முறையில் தொடர்பு கொள்ளும் திறன் இல்லை என்று அர்த்தமாகும். முக்கியமாக எதையாவது வைத்து உங்களை பிளாக் மெயில் செய்யும் விதமாக நடந்து கொண்டால், நீங்கள் அந்த உறவில் இருப்பது உங்களுக்கு மேலும் சிக்கலை தர கூடும்.
இது நீங்கள் தவறான உறவில் உள்ளதை குறிக்கும் மிகப்பெரிய அறிகுறியாகும். உங்களை பயமுறுத்தி எல்லா விஷயங்களை செய்யும்படி செய்தால், அது மிக மோசமான உறவாக கருதப்படும். எனவே நீங்கள் அப்படிப்பட்ட உறவில் இருப்பது உங்களுக்கே ஆபத்தாக முடியும். உங்கள் துணை உங்களை நேசித்திருந்தால் இது போன்ற முறையில் உங்களை அச்சுறுத்த மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குற்றம் சொல்லி கொண்டே இருப்பது
நீங்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் உங்கள் துணை குற்றம் சொல்லி கொண்டே இருக்கிறாரா? இப்படி அடிக்கடி குற்றம் சாட்டுவது ஆரோக்கியமற்ற உறவை குறிக்கிறது. உங்கள் துணை அவர்களின் தவறுகளுக்கு உங்களைக் குறை கூறக்கூடாது மற்றும் அவர்களின் தவறுகளுக்கு நீங்கள் ஒருபோதும் காரணமில்லை. எனவே நீங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் குற்றம் கூறி கொண்டே இருந்தால், அது குறித்து உங்கள் துணையுடன் பேசுங்கள். ஒருவேளை இதை கண்டு கொள்ளாமல் இருந்தால், அந்த உறவை விட்டு விலகுவது சிறந்த வழியாகும். இல்லையேல் உங்கள் காதல் வாழ்க்கை நரகமாக மாறிவிடும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.