மூன்றாம் பாலினத்தவர் மீதான புரிதலை சமூகவெளியில் ஒளிர செய்யும் பிரபல நகைக் கடை விளம்பரம்...

மூன்றாம் பாலினத்தவர் மீதான புரிதலை சமூகவெளியில் ஒளிர செய்யும் பிரபல நகைக் கடை விளம்பரம்...

பீமா நகைக்கடை விளம்பரம்

சமூகத்தில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்கிற விவாதங்கள்தான் இன்றளவும் பேசப்படுகிறதே தவிற இந்த மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை.

  • Share this:
ஒரு விளம்பரத்திற்கு இத்தனை வலிமை இருக்கிறதா என்றால் நிச்சயம் உண்டு என்றுதான் சொல்ல முடியும். பல புரட்சிகரமான விஷயங்களை, சமூக மாற்றங்களை 1 நிமிட வீடியோவில் சொல்ல முடியுமெனில் அது மிகையல்ல. அதற்கு சமீபத்தில் டிரெண்டாகி சமூகவலைதளங்களையே ஆட்சி செய்து வருகிற ஒரு நகைக்கடை விளம்பரமே சாட்சி. விளம்பரத்தின் சாராம்சம் ’அன்பு தூய்மையானது’... இது அனைவருக்கும் தெரிந்ததுதானே என்றாலும் அதில் காட்டப்படும் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஏக்கம், வலி , எதிர்பார்ப்பு, சமத்துவம் இப்படி அனைத்தையும் பிரதிபலிப்பதுதான் அந்த விளம்பரத்தின் பலம்.

ஆம்..கேரள மாநிலத்தில் உள்ள 96 வருட பாரம்பரியம் மிக்க பீமா நகைக்கடை விளம்பரம் பலரது மனதை தைத்துள்ளதற்குக் காரணம் மூன்றாம் பாலினத்தவர் மீதான பார்வையை அன்பின்பால் தூய்மையாக்கியுள்ளது.

அதாவது அந்த வீடியோவில்... ஒரு வீட்டில் பிறப்பால் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறத்துடிக்கும் தன் மகனின் பாலின மாற்றத்தைக் காணும் பெற்றோர்கள் அதை புரிந்துகொள்கின்றனர். பின் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றனர். ஏற்றுக்கொள்வதின் அடையாளமாக தங்க கொலுசு வாங்கித் தருகின்றனர். பின் காது குத்தி கம்மல் போடுவது, வளையல் போடுவது என கொஞ்சம் கொஞ்சமாக தன் மகனை மாற்றி இறுதியில் முழுமையான பெண்ணாக தன் சொந்தங்கள் முன் நிறுத்துகின்றனர். ஒரு நிமிடம் நாற்பது நொடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பரம் சமூகத்தில் மீண்டும் ஒரு ஆழமான கலந்துரையாடலை விதைத்துள்ளது.

அந்த விளம்பரத்தில் டெல்லியைச் சேர்ந்த திருநங்கை , மாடல் மீரா சிங்கானியாவை நடிக்க வைத்திருப்பது கூடுதல் சிறப்பு.”சமூகத்தில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்கிற விவாதங்கள்தான் இன்றளவும் பேசப்படுகிறதே தவிர இந்த மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற ஏக்கமே இந்த விளம்பரத்தின் உரத்த சிந்தனையாக உருமாறியது” என பீமா நகைக்கடையின் ஆன்லைன் செயல்பாட்டுத் தலைவர் நவ்யா சுஹா நியூஸ் மினிட் இணையதளத்திற்குக் கூறியுள்ளார்.

இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மாற்றுப்பாலினத்தவர்களுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும், கட்டியக்காரி நாடகக்குழுவின் தலைவர் ஸ்ரீஜித் சுந்தரத்திடம் பேசிய போது “ இதில் பேசியுள்ள அரசியல் மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுவாக தங்கம் என்பது நம் கலாச்சாரத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. அந்த கௌரவத்தை அடையாளப்படுத்துவதற்கு மூன்றாம் பாலின சமூகத்தை முன்னிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விளம்பரத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு சமூகம், மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

பொதுவாக திருநங்கை அல்லது திருநம்பிகளை காட்டும் குறும்படங்கள், காட்சிகள் என்றாலே அடிப்பதும், அழுது புலம்புவதும், ஏக்க முகத்துடனும், பசி, வறுமை , பாலியல் தொழில் செய்வோர் இப்படியாகத்தான் காட்டப்பட்டு வருகிறது. அப்படி இருக்க இதில் அன்பின் தூய்மையை வெளிப்படுத்தும் விதமாக, அழகியலாக சொல்லப்பட்டுள்ளது. அதுவும் இந்த விளம்பரமானது ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சியினூடே செல்லவிருக்கிறது. அது ஒவ்வொரு முறையும் காட்சிப்படுத்தப்படும்போது வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சமேனும் சிந்திக்க பாதை அமைத்துள்ளது” என்று கூறினார்.இந்த ஏற்றுக்கொள்ளல் என்பது இந்தியக் கலாச்சாரத்தில் முழுமையாக மாற நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அதற்கான காலம் வெகு தூரமில்லை என்பதையும் இந்த விளம்பரம் உணர்த்தியுள்ளது.

அப்படி இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும் என உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் பேசிய போது “ 70, 80 களைக் காட்டிலும் இன்றைய பெற்றோர்கள் பக்குவப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அதிலும் இதுபோன்ற விளம்பரங்கள் ஏற்றுக்கொண்டால்தான் என்ன..? என்னும் மாற்றத்தை விதைக்கின்றன. பிறப்பால் மாற்றுப்பாலினமாக இருப்பவர்களை கட்டுப்படுத்துவது கடினம். அவர்களை அவர்களாக இருக்கவிடாமல் தடுப்பதும் வன்முறை என்றே சொல்வேன். கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு வருவோருக்கு சமூகமும் அங்கீகாரம் கொடுப்பதில்லை. எனவே பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வது சமூகத்தின் பார்வையின் மாற்றத்தைப் பொருத்தே இருக்கிறது.உங்கள் மகளோ, மகனோ மூன்றாம் பாலினமாக இருக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் எனில் அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். கோபம் கொள்ளாமல் பக்குவமும், நிதானத்தையும் கடைபிடியுங்கள். நன்கு சிந்தித்து பின் முடிவெடுங்கள். ஆலோசனைகள் தேவை எனில், உங்கள் பிள்ளையின் மனதில் உண்மையில் என்னதான் இருக்கிறது என முழுமையாக அறிந்துகொள்ள உளவியல் ஆலோசகரை அணுகுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள்.

ஏனெனில் இதுபோன்ற விளம்பரங்கள், சமூக வரவேற்பு சில சமயங்களில் சிக்கலிலும் முடிகிறது. அதாவது பிறப்பால் அவர்கள் பெண்ணாகவும், ஆணாகவும் இருந்தாலும் இதுபோன்ற விஷயங்கள் அவர்களின் ஆழ் மனதில் திடீர் மாற்றத்தை உண்டாக்கி விடுகிறது.

ஆனால் அவர்களை சரியான முறையில் வழிநடத்தினால் மாறிவிடுவார்கள். அப்படி பல வழக்குகளை சந்திக்கிறேன். ஆனால் பிறப்பாலேயே மாற்றுப் பாலினமாக இருப்பவர்களை மாற்றுவது என்பது கடினம். அது அவர்களிடம் பேசினாலே தெரிந்துவிடும். சிறு வயது முதலே அவர்களுடைய நடவடிக்கைகளில் தெரிந்துவிடும். எனவே முதலில் உளவியல் ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது என்கிறார் சித்ரா அரவிந்த்.

ஏழை நாடுகளில் பெண்கள் "இப்போது உடலுறவு வேண்டாம்" என்று சொல்ல உரிமை இல்லை - அதிர்ச்சி தரும் ஆய்வு

பீமா தன்னுடைய ஊடகத் தகவலில் இது பிரச்சாரம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. சந்தைபடுத்தும் நோக்கில் மற்ற விளம்பரங்களைக் காட்டிலும் எங்களுடைய பிராண்ட் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளது. இது வியாபார யுத்தி என்றாலும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள சிறு மாற்றம் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பெரும் மாற்றம். காலம் கடந்தும் இந்த விளம்பரங்கள் பேசும். மற்றவர்களும் இதைப் பற்றி பேச தைரியமாக முன் வருவார்கள் என்பதே இணையவாசிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை கூறும் கருத்தாக இருக்கிறது.
Published by:Sivaranjani E
First published: