• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தை வளர்ப்பு குறித்து 84% இந்திய ஆண்கள் நினைப்பது என்ன? ஆய்வில் புதிய தகவல்..

குழந்தை வளர்ப்பு குறித்து 84% இந்திய ஆண்கள் நினைப்பது என்ன? ஆய்வில் புதிய தகவல்..

பெற்றோர்கள் (மாதிரி படம் )

பெற்றோர்கள் (மாதிரி படம் )

இந்தியா முழுவதும் குழந்தை வளர்ப்பு யாருடைய பொறுப்பு என எடுக்கப்பட்ட ஆய்வில், பதிலளித்த ஆண்களில் 84 விழுக்காட்டினர் பெண்களின் பொறுப்பு என பதிலளித்துள்ளனர்.

  • Share this:
தம்பதிகள் இருவரும் இணைந்து குழந்தையை ஆசை, ஆசையாக பெற்றெடுத்தாலும், அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு, பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்படுகிறது. பழங்கால சமூக பழக்க வழக்கங்களில் இருந்து நாம் எவ்வளவு முன்னேறி வந்திருந்தாலும், குழந்தை வளர்ப்பு விஷயத்தில் இன்றளவும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம், இந்தியா முழுவதும் குழந்தை வளர்ப்பு யாருடைய பொறுப்பு என எடுக்கப்பட்ட ஆய்வில், பதிலளித்த ஆண்களில் 84 விழுக்காட்டினர் பெண்களின் பொறுப்பு என பதிலளித்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்லாது, உலகளவிலும் குழந்தைகளை வளர்ப்பது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையாக ஆண்களால் பார்க்கப்படுகிறது. பாலின சமத்துவம், அடிப்படை உரிமை என பேசினாலும் நவ நாகரீக உலகில் பேசினாலும், பெண்களுக்கான சம உரிமையையும், சமத்துவத்தையும் கொடுக்க இந்த சமூகம் தயாராக இல்லை அல்லது ஆணாதிக்க சமூகத்திலேயே வாழ்கிறோம் என்பதற்கு இந்த ஆய்வு உதாரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சமூக அமைப்பில் ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தும், பெண் குழந்தைகளின் மேல் சிறுவயது முதல் திணிக்கப்படும் கடமைகளும் ஆகும்.

வீட்டு வேலை என்றால் பெண் குழந்தைகள் மட்டும் செய்ய வேண்டும். ஆண் குழந்தைகளாக இருப்பவர்கள் தங்களின் துணிகளைக் கூட துவைத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சுதந்திரம் பிறப்பிலிருந்து வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, அவர்களை குளிப்பாட்டுவது முதல் அன்றாடம் கவனித்து கொள்வது வரை முழுவதும் பெண்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. குழந்தைகள் அழுதால் கூட நள்ளிரவில் பெண்கள் எழுந்து, தன் குழந்தையை சமாதானம் செய்து தூங்க வைக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஆண்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள்.

ALSO READ |  பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?

இந்த மனப்போக்கு, ஆணாதிக்க மனப்போக்காக இருக்கிறது அல்லவா?. படித்து, தெளிந்த அறிவுள்ள சமூகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என சமூகம் உணர வேண்டும். குழந்தையை வளர்க்கும்போது, மனைவியின் பொறுப்பு என கணவர்கள் ஒதுங்கிக்கொள்ளாமல், என்னுடைய குழந்தை என்ற பொறுப்பை எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு கவனித்து கொள்ள வேண்டும்.தாயின் அரவணைப்பில் மட்டும் வளரும் குழந்தையை விட கணவன், மனைவி இருவரும் இணைந்து வளர்க்கும் குழந்தை, அவர்களின் வாழ்கையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஐவி லீக் கல்லூரிகள் (Ivy League Colleges) வெளியிட்ட ஆய்வு ஒன்றில், தந்தையின் அதிகப்படியான கவனிப்பில் வளர்ந்த குழந்தைகள் 2 வயதை அடைவதற்குள் நடத்தப்பட்ட அறிவு சோதனைகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. என்னுடைய குழந்தையை மிகவும் திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் வளர்க்க வேண்டும் என நினைக்கும் ஆண்கள், அவர்களின் பிறப்பிலிருந்து உங்களுக்கான பொறுப்பை எடுத்துகொள்ளுங்கள். குழந்தைகளின் கழிவுகளை அகற்றுவதை வெட்கமாக எண்ணாதீர்கள்.

ALSO READ |  குழந்தைகள் வாயைத் திறந்துகொண்டே தூங்கினால் உடல் நலத்திற்கு ஆபத்தா..?

நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் கிண்டலடிப்பார்கள் என மற்றவர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உங்கள் குழந்தையின் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அண்மையில் பாலிவுட் நட்சத்திரங்களான சோகா அலிகான் (Soha Ali Khan), குணால் கேமு (Khemu) ஆகியோர் தங்களின் குழந்தையின் பேம்பர்ஸை கூட்டாக அகற்றுவது போல் புகைப்படத்தை ‘#ItTakes2’ என்ற ஹேஸ்டேக்கின் கீழ் பதிவிட்டனர். அதில், குழந்தை வளர்ப்பு பெற்றோர் இருவருக்கும் பொதுவானது என்ற விழிப்புண்ர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த முன்னெடுப்பை எடுத்ததாக கூறினார்.குழந்தை வளர்ப்பு குறித்து அவர்களின் இந்த விழிப்புணர்வு சமூகவலைதளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தாய், தந்தையாக மாறுவது என்பது கணவன், மனைவி இருவருக்கும் ஒரு கூடுதலான, மகிழ்ச்சியான பொறுப்பு என தெரிவித்துள்ள சோகா அலிகான், அதில் மனைவிக்கு இந்த வேலை, கணவருக்கு இந்த வேலை என்ற எந்த வரையறையும் கிடையாது. இருவரும் இணைந்து தங்களின் குழந்தையை வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ |  குழந்தைகளுக்கு தலையில் அடிபட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

இது குறித்து பேசிய நடிகர் குணால், பெண் குழந்தையை பெற்றெடுத்த நாள், எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக என் வாழ்வில் இருந்ததாக தெரிவித்தார். அன்றைய பொழுதில் மனைவியுடன் இணைந்து மிகச்சிறந்த மகளாக உன்னை வளர்ப்பேன் என தன் குழந்தையிடம் சத்தியம் செய்ததாகவும், அதனை தற்போது கடைபிடித்து வருவதாகவும் குணால் கூறியுள்ளார். குழந்தை வளர்ப்பில் கணவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் குணால் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: