இன்றைய தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த பயத்தோடும், கவலையோடும் திருமணத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். தேனிலவு காலம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும், அதற்குப் பிறகு ஒரு உறுதியான பந்தம் இல்லாமல் போய்விடுகிறது. இதன் விளைவாக, கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன.
முதலில், உங்கள் பார்ட்னரை நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் ஏதேனும் குறைகள் தென்பட்டால், அதை அமைதியான சூழலில், அன்பான வார்த்தைகளால் புரிய வைத்து, உங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும். அதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே குறைகளை பூதாகரமாக காட்டி சண்டையிடத் தொடங்கினால், அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
இது மட்டுமல்லாமல், திருமண வாழ்வில் மகிழ்ச்சியை தக்க வைக்க எண்ணற்ற ஆலோசனைகள் உள்ளன. அதில், சிலவற்றை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
உடலுறவு என்பதை மனமொற்றி இருக்க வேண்டும்
காதல் இன்றி உடலுறவு கொண்டால், அந்த உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. உடலுறவு என்பது வெறுமனே உடல் தேவையை மட்டும் பூர்த்தி செய்யக் கூடியது அல்ல. இரு மனங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் இணை சேருவதற்கு முன்பாக, அவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் அதற்கு தயாராக இருக்கிறார்களா என்பதை, எண்ண ஓட்டங்களை கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, கட்டாயத்தின் பேரில் அணுகினால் நாளடைவில் வெறுப்பு தட்டிவிடும்.
எல்லாவற்றையும் விவாதம் செய்யுங்கள்
கணவன், மனைவி இடையே அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும். எதையும் ஒளித்து வைத்து பேசக் கூடாது. எந்தவொரு விவகாரம் என்றாலும், இருவரும் உட்கார்ந்து ஆலோசனை செய்தால், அதற்கான தீர்வுகள் எளிதாக கிடைத்துவிடும்.
உங்கள் பார்ட்னர் உங்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறாரா..? காரணம் இதுவாக இருக்கலாம்..!
சமூகத்துடன் இணைந்து செயல்படவும்
உங்கள் வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ளுங்கள். இதன் மூலமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிட்டும். பிறருடைய அனுபவங்களை அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது உங்களுக்கான பாடமாக அது அமையும்.
ஒரு நாளில் ஒரு வேளை உணவாவது இணைந்து சாப்பிடுங்கள்
இன்றைய அவசர உலகில், இருவரும் ஒன்றாக இணைந்து சாப்பிடும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. ஆகவே, ஒரு நாளில் ஒருமுறையேனும் இணைந்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். சாப்பிடும்போது உங்கள் பார்ட்னருக்கு என்ன தேவை என்பதை அறிந்து நீங்கள் பரிமாறத் தொடங்கும்போது உங்களுக்குள் பிணைப்பு அதிகரிக்கும்.
வேலைகளை பகிர்ந்து செய்யுங்கள்
வீட்டில் இதெல்லாம் கணவனின் வேலை, இதெல்லாம் மனைவியின் வேலை என்று ஒதுக்கி வைக்காதீர்கள். அனைத்து வேலைகளையும் இருவருமே பங்கிட்டு செய்யுங்கள். விளையாடுவது, சமைப்பது உட்பட அனைத்தையும் இருவரும் பங்கிட்டு செய்தால், வேலைப்பளு குறையும். இடையிடையே அன்பும், அன்யோன்யமும் மேலோங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage Life, Relationship Tips