பெரியவர்கள் பல சந்தர்ப சூழ்நிலைகளில் சில விஷயங்கள் குறித்து ரகசியம் காப்பது உண்டு. ஆனால், அதையே குழந்தைகளிடம் நாம் ஊக்குவிக்கக் கூடாது. ஏனென்றால், தவறான சில விஷயங்களைக் கூட குழந்தைகள் ரகசியமாக மறைக்க கூடும். உண்மைக்கும், பொய்க்கும் இடையிலான வேறுபாடுகளை அவர்களால் உணர முடியாது.
பெரும்பாலும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் சமயத்தில் பெற்றோர் சிலர் ரகசியங்களை பரிமாறிக் கொள்கின்றனர். குழந்தைக்கு என்ன தெரியப் போகிறது என்ற எண்ணம் அல்லது நம் குழந்தை இதை தெரிந்து கொண்டு எதுவும் செய்து விடாது என்ற எண்ணம் பெற்றோரிடம் இருந்தாலும், அதுவே குழந்தைக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது.
பெற்றோர் பரிமாறிக் கொண்ட ரகசியத்தை குழந்தைகள் தங்கள் நண்பர்களிடம் அல்லது மற்ற குடும்ப உறவுகளிடம் பகிர்ந்து கொண்டால் அது பிரச்சனைக்கு உரியதாக மாறி விடுகிறது. அதே சமயம், குழந்தை ரகசியத்தை மறைக்க கற்றுக் கொண்டால், அதே பாணியை பின்பற்றி தங்கள் பெற்றோரிடம் பல விஷயங்களை அவர்கள் மறைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
ரகசியம் காப்பது குடும்பத்திற்கு ஆபத்து
மிக முக்கியத்துவம் வாய்ந்த ரகசியம் குழந்தைக்கு தெரிய வரும்போது, அதை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை கூறுவது உண்டு. அந்த சமயத்தில், குழந்தை அந்த ரகசியத்தை மறைக்க வேண்டி தனக்குள் ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.
ரகசியத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள்
குழந்தைக்கு தெரிந்த ரகசியம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றால், அவர்கள் அதை நினைத்து குதூகலமாக இருப்பார்கள். அதுவே, அந்த ரகசியம் ஆபத்தானது என்றால் அதை நினைத்து அச்சம் அடைந்து கொண்டே இருப்பார்கள்.
உங்கள் குழந்தையை சுதந்திரமாக வளர்ப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்கள் இங்கே.!
ரகசியத்தை புரிந்து கொள்ளும் தன்மை
குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு ரகசியத்தின் தன்மைகள் குறித்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். எது மாதிரியான விஷயங்கள் நல்லவை, எந்த விஷயங்கள் தீயவை என்பது குறித்து குழந்தைகள் அறிய வேண்டும்.
தவறான விஷயங்களை எடுத்துரைக்கவும்
பிற நபர்கள் தவறான விஷயங்கள் குறித்து ரகசியம் காக்கும்படி எப்படி மிரட்டுவார்கள் அல்லது தவறாக வழி நடத்துவார்கள் என்பது குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக, நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகள் அறிந்திருக்க வேண்டும்.
தனியுரிமை மற்றும் ரகசியத்தின் வேறுபாடு
குழந்தைகள் ரகசியம் காக்கக் கூடாது என்றாலும், உண்மையை பேசுகிறேன் என்ற பெயரில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் வேடிக்கையாக சொல்லிவிடுவார்கள். ஆகவே, தனிப்பட்ட விஷயங்கள் எது, ரகசியம் எது என்று கற்பிக்க வேண்டும்.
நல்ல வழிகாட்டியாக
குழந்தைகளிடம் கருணை, அன்பு போன்ற குணங்களை வளர்க்க வேண்டும். தனக்குரிய பிரச்சனைகளை அவர்களே புரிந்து கொண்டு, அதற்கு தீர்வு காணுவதற்கான திறன்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக, இளம் வயதில் குழந்தைகள் மனதில் எந்தவித கவலைகளும் தங்கக் கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.