இளைஞன் கலக்கமே என்று நம்மில் சிலரும், இல்லை இல்லை அவன் கலங்கரை விளக்கமே என்று மேலும் சிலரும் வாதிட்டுக் கொண்டிருக்க இங்கே சத்குரு, "இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்," என்கிறார்.
இந்த உலகத்தில் ஏதாவது ஆக்கப்பூர்வமான வேலைகள் நடக்க வேண்டுமானால், அது இளைஞர்களால்தான் முடியும். ஏதாவது நாசகரமான வேலைகள் நடக்க வேண்டுமானாலும், அதுவும் இளைஞர்களால்தான் முடியும்.
ஏனென்றால், அவர்கள் மிகவும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கின்றனர்.
இன்றைய இளைஞர்கள் உயிரோட்டத்தோடும், சிறந்த லட்சியங்களோடும், சிறந்த ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். இந்த உலகம் இளைஞர்களால் வழிகாட்டப்படுமானால், வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக அமையும் என்பதே உண்மை. ஆனால், அவர்கள் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் சற்று மிகைப்படுத்திச் செய்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை.
வயதான தலைமுறையினர், இன்றைய இளைஞர்களை ஏதோ சிகிச்சை தேவைப்படுகிற நோயாளிகளைப்போல கருதுகிறார்கள். அது உண்மை அல்ல. வாழ்க்கையைவிட்டு மிகவும் விலகிப் போய்விட்ட மனிதர்களுக்குத்தான் சிகிச்சை தேவை. இளைஞர்களோ, வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் எப்போதும் ஓர் உயர்ந்த சக்தி நிலையில் இருப்பதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலோ, தூண்டுதலோ கிடைக்கவில்லையென்றால், அவர்களது சக்தி எளிதில் எதிர்மறையாகிவிடும்.
நமது கல்விமுறை 100% தகவல் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது ஒரு தூண்டுகோலாக, ஊக்கம் கொடுப்பதாக இல்லை. ஊக்குவிப்பவர் இல்லையென்றால், ஒரு மனிதன் அவனுடைய எல்லைகளைத் தாண்டி உயர முடியாது. வெறும் தகவல் தேவை என்றால், ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியாது. புத்தகங்களும், இணையத்தளமும் இந்த வேலையை இன்னும் சிறப்பாகச் செய்யும்.
ஓர் ஆசிரியரின் பங்கு, ஒரு மாணவரை கற்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
கல்விமுறையை முற்றிலும் தகவல் தொடர்புடையதாய் செய்திருப்பது நம் நாட்டில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாழ்க்கையில் இளைஞராய் இருக்கும்போது, பல விஷயங்கள் செய்யக்கூடியவராய் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான தூண்டுகோல் இல்லாமல் போய்விட்டால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் வாழ்க்கையின் முக்கியக் காலம் பயனற்றுப் போய்விடும்.
இளைஞர்களுக்குத் தேவையான தூண்டுகோலாக இருப்பதற்கு உங்களுக்குப் பெரிய பொறுப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொறுப்பு உணர்ச்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இந்த உலகத்தில் ஒரு பற்றாக்குறைப் பொருளாய் ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு நாளில் கோலாகலமாக விழா ஒன்று நடத்தி இளைஞர்களை அற்புதமான நிலைகளுக்கு ஊக்குவிப்பது பற்றியே நினைக்கிறார்கள். ஆனால் இது இவ்வாறு நடக்காது. இது ஒரு வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய விஷயமாகும். இன்றைக்கு ஒன்று செய்துவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்று வெறுமனே இருந்துவிட முடியாது.
இது ஒரு செடியைப் பேணி வளர்ப்பதுபோல. அது ஒரு நாள் பழம் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அதை தினமும் பேணி வளர்க்க வேண்டும். அதற்குத் தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் அதனைப் பாதுகாக்க வேண்டும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு வயதானவர்களுக்கு இருக்குமானால், இளைஞர்களால் பல அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். இந்த அர்ப்பணிப்பு உணர்வு பெரியவர்களிடம் இல்லாததால்தான், இளைஞர்கள் திசைமாறி, என்ன செய்வதென்றே தெரியாமல் தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்து வருகிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுவதால், இளைஞர்களும் குறுகிய கால இலக்குகளை நோக்கிச் செயல்படுகிறார்கள்.
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனிதர்களின் நலன் குறித்துத்தான் அக்கறை கொண்டு உள்ளார்கள். ஆனால், ஒவ்வொருவரும் மனித நலன்பற்றி வெவ்வேறு அளவுகளில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஒருவருக்கு மனித நலன் என்பது அவரும் அவரது குடும்பமும். இன்னொருவருக்கு அவரும் அவரது நாடும். மற்றொருவருக்கோ மனித நலன் என்பது இந்த முழு உலகமும் உள்ளடங்கியது. ஒரு குற்றவாளியோ அல்லது ஒரு திருடனோ அவரும் மனித நலன் குறித்துத்தான் அக்கறைகொண்டு இருக்கிறார். ஆனால் அவர், மனித நலன் என்றால் தனது நலன்தான் என்ற கருத்தில் இருக்கிறார்.
Also Read : குழந்தைகளை எவ்வாறு படிப்பில் கவனம் செலுத்த வைப்பது..? பெற்றோர்களுக்கு டிப்ஸ்..!
அதனால் இளைஞர்கள் மற்றும் எல்லோரிடமும் ஒரு பெரிய மாற்றம் வர வேண்டும். ஒவ்வொருவருடைய எண்ணமும் தன்னைப்பற்றி மட்டுமல்லாமல் அது இந்த முழுச் சமூகத்தையும், முழு உலகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இது நமது கல்விமுறையில் காணாமல் போய்விட்டது. நவீனக் கல்விமுறை, மக்களைத் தொடர்ந்து தங்களைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறது. இந்த முழு விஞ்ஞானச் செயல்முறையே, எப்படி எல்லாவற்றையும் நமது இன்பத்துக்கும், நலத்துக்கும் உபயோகப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது. இந்த மனப்பாங்கு புதிய கல்விமுறையால் ஆழமாகச் செய்யப்பட்டுவிட்டது.
தகவல் அறிவைக் கொடுப்பதற்காக எப்படி நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலிய-வற்றை முதலீடு செய்கிறோமோ அவ்வாறே நமது இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் நமது நேரம், வளங்கள் மற்றும் சக்தி முதலியவற்றை முதலீடு செய்ய வேண்டும். இது நடந்துவிட்டால், நமது உலகம் உண்மையிலேயே ஓர் அழகான இடமாக மாறும்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sadhguru, Teenage parenting