ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சமூகத்தில் சக மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், கலந்து பழகும் திறன் போன்றவவை பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம் கொண்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு நன்றாக பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் ஓரளவு பேசினாலும் தெளிவாக இல்லாமல் பேசுவார்கள். அதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. முக்கியமாக ஒரே மாதிரியான விஷயங்களை திரும்ப திரும்ப செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல.
எளிமையாக சொல்வதென்றால் பார்ப்பதற்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை போலவே தான் இருப்பார்கள். ஆனால் நாம் பேசுவதை புரிந்து கொள்வதிலும், அவர்கள் பேசுவதிலும், எல்லாருடனும் கலந்து பழகுவதிலும் இவர்களுக்கு சிக்கல் இருக்கும். இந்த குறைபாட்டை முற்றிலும் சரி செய்யும் வகையில் சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை நன்றாகவே மேம்படுத்த முடியும். ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை 10 மாதங்கள் முதலே கண்டறியலாம்.
சில நேரங்களில் ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகள் காலப்போக்கில் மாறுகின்றன. குழந்தைகளில் ஏற்படும் ஆட்டிசத்தின் வடிவங்களை கண்டறிந்து, முடிந்தவரை சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குவது அவசியம். இங்கே ஆட்டிசத்தின் சில ஆரம்ப அறிகுறிகளை பற்றி பார்க்கலாம்..
வயதிற்கேற்ற வளர்ச்சி தவறுவது:
யாராவது பெயர் சொல்லி கூப்பிட்டால் எதிர்வினையாற்றுவது முதல் ஊர்ந்து நடப்பது வரை, முதல் 2 ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சி வேகமாகவே இருக்கும். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப வளர்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் மாதங்கள் ஏற ஏற, அவர்களின் வளர்ச்சியில் உரிய முன்னேற்றம் தெரியவில்லை என்றால் உடனடியாக கவனித்து மருத்துவரிடம் அழைத்து செல்லுதல் அவசியம். ஆட்டிசத்தின் துவக்க அறிகுறியாக கூட இருக்கலாம் என்பதால் நிபுணரின் வழிகாட்டுதலை பெற வேண்டும்.
also read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? தெரிந்துக்கொள்ளுங்கள்..
வளர்ச்சியில் நீடித்து காணப்படும் குறைபாடு:
குழந்தையின் முதல் வயதிற்குள் அவர்களது சமூக மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சியை உன்னிப்பாக கண்காணிப்பது அவசியம். சராசரியாக குழந்தை நன்றாக வாக்கியங்களை வைத்து பேச 3 வயது ஆகும் என்றாலும் எளிமையான சொற்களை நிறைய வெளிப்படுத்தும். இந்த காலகட்டத்தில் கீழ்காணும் அறிகுறிகள் குழந்தைகளிடம் வெளிப்பட்டால் கவனிப்பது முக்கியம்..
வழக்கத்திற்கு மாறான தொனியுடன் கூடிய குரலை வெளிப்படுத்துவது, அசாதாரண உணர்ச்சி உணர்திறன்கள், வழக்கத்திற்கு மாறான உடல் அல்லது கை அசைவுகள், வழக்கத்திற்கு மாறான முறையில் பொம்மைகளுடன் விளையாடுவது, பெயரை சொல்லி கூப்பிட்டால் ரியாக்ட் செய்யாமல் இருப்பது, கண் தொடர்பை தவிர்ப்பது, முகபாவனைகளை காட்டாமலே இருப்பது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது.
also read : கலோரிகளை கணக்கு செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல : ஏன் தெரியுமா..?
திரும்ப திரும்ப செய்வது:
ஆட்டிசம் கோளாறின் குணாதிசயங்களில் ஒன்று மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை செய்யும் நடத்தை ஆகும்.
* பொம்மைகளை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்காக வைக்க விரும்புவது மற்றும் அதை மாற்றும் போது வருத்தமடைவது
* ஒரே வார்த்தைகள் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருப்பது
* ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியே பொம்மைகளுடன் விளையாடுவது
* அதிகம் தனிமையை விரும்புவது
* காரணமேயின்றி கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி வீசுவது
* வித்தியாசமான முறையில் கைகளை வளைத்து, நெளித்து கொண்டே இருப்பது
பிற குணாதிசயங்கள்:
தாமதமான அறிவாற்றல் அல்லது கற்றல் திறன், அசாதாரண உணவு மற்றும் தூக்க பழக்கம், செரிமான பிரச்சினைகள், பயமின்மை அல்லது இயல்பை விட அதிக பயம் கொள்வது, மன அழுத்தம் அல்லது அதிகப்படியான கவலை உள்ளிட்டவை ASD-ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வேறு சில குணாதிசயங்கள் ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.