கல்வி என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கல்வியை சரியாக கற்கவில்லை என்றால் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். அந்த அளவிற்கு கல்வி என்பது அதிமுக்கிய விஷயமாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியை உறுதிப்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கின்றனர். தங்களது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க பல வித புதிய வழிகளை முயற்சி செய்வார்கள். அதில் முதன்மையான ஒன்றாக இருப்பது டியூஷன் தான்.
பள்ளியில் படிப்பதை தவிர்த்து மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிப்படுத்தவும். மேலும் கல்வியில் சிறந்து விளங்கவும் டியூஷன் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், பல பெற்றோர்களுக்கு எந்த வயதில் டியூஷன் சேர்ப்பது என்பது குறித்த தெளிவு இருப்பதில்லை. எல்.கே.ஜி சேர்ந்தவுடன் குழந்தைகளை டியூஷனில் சேர்த்து விடுகிற பெற்றோர்களே இங்கு அதிகம் உள்ளனர். எனவே இந்த பதிவில் குழந்தைகளை எந்த வயதில் டியூஷனில் சேர்க்க வேண்டும், எப்படிப்பட்ட வழிகளை பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் போன்ற பல விவரங்களை பார்க்கலாம்.
சரியான வயது :
டியூஷனில் சேர்க்க உங்கள் குழந்தையின் வயது மிக முக்கியமானது. பல பெற்றோர்கள் தங்களின் மூன்று வயது குழந்தைக்குக் கூட டியூஷனில் சேர்த்து விடுகின்றனர். வாழ்க்கை என்பது ஒரு பந்தயமாக இருந்தாலும், உங்கள் குழந்தை சிறந்தவராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவர்களை சிறு வயதிலேயே பல விஷயங்களை செய்ய கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளின் திறனை கூர்மைப்படுத்த ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுப்பது நல்லது தான் என்றாலும், பெற்றோராகிய நீங்கள் அடிப்படைக் கற்றலுக்குத் தேவையான அளவு உதவினாலே மிகவும் போதுமானது என்பதை நீங்கள் உணர வேண்டும். மூன்று அல்லது நான்கு வயது குழந்தைக்கு ஒரு ஆசிரியரை பணியமர்த்துவது சரியான முறையாக இருக்காது. எனவே 5 வயதுக்கு மேல் ஆனதுக்கு பிறகு டியூஷன் என்பது ஏற்றதாக இருக்கும்.
தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..?
சரியான முடிவுகள் :
உங்கள் பிள்ளைக்கு உண்மையில் கூடுதல் உதவி தேவைப்படுகிறதா? என்பதைக் கண்டறிவது அவசியம், ஒருவேளை, பள்ளி நேரம் மிகுதியாக இருந்தால் அவர்களுக்கு டியூஷன் என்பது தேவையற்றதாக இருக்கலாம். மேலும் சில குழந்தைகள் அவர்கள் படிப்பிற்காக மற்றவர்களைச் சார்ந்திருக்கக்கூடும், எனவே அவர்களால் தங்கள் படிப்பை கையாள முடியாமல் போகலாம். இது போன்ற குழந்தைகளுக்கு டியூஷன் சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இருப்பினும், உங்கள் பிள்ளை தாங்களே படிக்க கூடிய ஆர்வம் கொண்டவராக இருந்தால், அவர்களுக்கு டியூஷன் என்கிற கல்வி முறை தேவையற்றதாக கூட இருக்கலாம். இது குறித்த சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தையுடன் கலந்துரையாடலாம். மேலும் அவர்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய அவர்களுக்கு சில நாட்கள் வரை சோதனை வகுப்புகளையும் ஏற்பாடு செய்யலாம்.
பெற்றோரிடம் பிள்ளைகள் பொய் சொல்வது ஏன்..? சமாளிப்பது எப்படி..?
ஆன்லைன் பயிற்சி சரியா?
இந்தியாவில் ஆன்லைன் பயிற்சி நிறுவனங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன, மேலும் அவற்றின் பிரபலமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆன்லைன் கல்வியின் கலாச்சாரம் எல்லோர் மத்தியிலும் பரவி உள்ளது. ஆனால், இந்த ஆன்லைன் வகுப்புகள் அந்த அளவிற்கு தாக்கத்தை கொண்டதாக இருக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நேரில் கற்று தர கூடிய கல்வி முறையை நீங்கள் பின்பற்றுவது சிறப்பு.
இருப்பினும், உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், ஆசிரியர் ஆக்கப்பூர்வமான பாடங்களைத் திட்டமிட வாய்ப்புள்ளது. மற்றும் வகுப்புகளின் நீளம் அதிகமாக இல்லை என்றால், உங்கள் பிள்ளைக்குக் கல்வி சிறந்ததாக இருக்கும். உங்கள் குழந்தை எப்போதும் புத்தகங்களிலேயே மூழ்கி இருப்பதை தவிர்க்கவும். பொழுதுபோக்குகள், விளையாட்டு, ஓய்வு மற்றும் பல திறனுள்ள விஷயங்களில் அவர்களை நேரம் செலவிட செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.