குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான ஒன்று. ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகு அக்குழந்தை சிறந்த மனிதராக இந்த சமூகத்தில் வளர்வதில் தாய், தந்தை இருவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பொதுவாக எல்லா பெற்றோர்களும் மிக சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால், உண்மை என்னவென்றால் எந்த பெற்றோராலும் மிகச் சரியாக இருக்க இயலாது. ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் விதத்தில் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்தப் பதிவில் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
பயம் கொள்ள செய்தல்:
புதிதாக பெற்றோராக ஆனவர்கள் அதிகம் பயம் கொள்வதுண்டு. குழந்தை வளர்ப்பில் பயம் அதீதமாக இருப்பது ஆபத்தானது. இந்த பயமானது குழந்தைகளையும் பாதிக்க கூடும். குழந்தைகள் அழுவது, அவர்களின் உணவு, தூக்கம், போன்ற பல்வேறு காரணிகளை புது பெற்றோர்கள் பயத்துடன் அணுகுகிறார்கள். எனவே, உங்கள் மனதை அமைதியாக்கிக் குழந்தையை வளர்ப்பது சிறந்தது.
எக்கச்சக்கமான தகவல்கள்:
இன்றைய காலகட்டத்தில் இளம் பெற்றோர்கள் பலர் செய்யும் மிக பெரிய தவறான விஷயம், எக்கச்சக்கமான தகவல்களை இணையத்தில் இருந்து தெரிந்து கொண்டு அதைப்பற்றி கவலைப்படுவது தான். இணையம் என்பது தேவையான தகவலை உடனடியாகப் பெற சிறந்த வழி தான். ஆனால், அதையே நம்பி எல்லாவற்றையும் செய்வது நல்லதல்ல. மேலும் வீட்டில் பெரியவர்களிடம் இருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவார்கள். இவை இரண்டிற்கு பதிலாக, எல்லா நேரங்களிலும் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
சரியாக பொறுப்பேற்காமல் இருப்பது:
ஒரு குழந்தையை சிறந்த முறையில் வளர்க்க தாய், தந்தை இருவரின் பங்களிப்பும் மிக முக்கியமாகும். தாய் மட்டுமே குழந்தைக்கு எல்லாவற்றையும் செய்வது அவர்களுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் கடும் நெருக்கடியை தரும். எனவே தந்தையும் எல்லா பொறுப்புகளிலும் பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.
துணையுடன் நேரம் செலவிட முடியாமல் இருப்பது:
குழந்தை பிறந்ததில் இருந்து பொதுவாக துணையுடன் நேரம் செலவு செய்வது கடினமாக மாறிவிடும். இதனால் உறவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே, கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது உங்களுக்கென நேரம் செலவிடுங்கள். இதனால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும், குழந்தையையும் நன்றாக வளர்க்க முடியும்.
இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
ஒப்பிட்டுப் பார்ப்பது:
குழந்தை வளர்ப்பில் பலர் செய்யும் தவறு தனது குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது தான். எல்லாக் குழந்தைகளும் தனித்துவம் பெற்றவர்கள். எனவே உங்கள் குழந்தையை பிறருடன் ஒப்பிடாமல், அவர்களிடம் இருக்கும் சிறந்த குணங்களை பாராட்டுங்கள்.
தாய்ப்பால்:
குழந்தைக்கு தாய்ப்பால் மிக முக்கியமானதாகும். எனவே குழந்தைக்கு பசி எடுக்கும் போதெல்லாம் தவறாமல் தாய்ப்பால் கொடுங்கள். இது தான் குழந்தைக்கு தேவையான முழு வளர்ச்சிக்கும் சிறந்த வழி. இத்துடன் உங்கள் குழந்தை முன்பு எப்போதும் மகிழ்ச்சியான முகத்தை மட்டும் காட்டுங்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைக்கு சிறியதாக காய்ச்சல் இருந்தால் கூட குழந்தைநல மருத்துவரை அணுக வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.