பள்ளி போக தொடங்கிவிட்டனர் குழந்தைகள். வீட்டுக்கு வந்தால் வீட்டுப்பாடம், எக்ஸ்ட்ரா கிளாஸ், டியூஷன் என்று மட்டும் சேர்க்காமல் அவர்களது வாழ்க்கையில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான பொழுது போக்கையும் கற்றுக் கொடுங்கள். அது உங்களுடையதும் தான்.
90கள் வரை பிறந்த எல்லோருமே தபால் தலைகளை பார்த்திருப்போம். வந்த தபால்களில் இருந்து தலைகளை மட்டும் கிழித்து எடுத்து ஒரு நோட்டில் ஒட்டி பாதுகாத்தோம். அது தான் அந்த வயதில் நமக்கு அதிகப்படியான மகிழ்ச்சி. யார் அதிக தபால் தலைகள் வைத்திருப்பது என்று போட்டி வேறு. ஆனால் இன்றைய சமூகத்தில் குழந்தைகள் தபால்காரரையோ தபால்களையோ பார்த்ததில்லை. அவர்களுக்கு அதைக் கற்றுத் தர ஒரு வாய்ப்பளிக்கிறது அஞ்சல் துறை.
வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரக்டர்கள்
அஞ்சல் துறையில், தபால் தலைகளை சேமிப்பவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான PHILATELY திட்டத்தையே வைத்துள்ளது. முதலில் இருந்து அஞ்சல் தலை சேமிப்பவர்களுக்கு இது பற்றி தெரியும். இன்று நாமும் தெரிந்து கொள்வோம்.
சேமிப்பு கணக்கு போலவே அஞ்சல் துறையில் philately account என்று ஒன்று உள்ளது. 1948 ஆகஸ்ட் 15 அன்று நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த வசதி உருவாக்கப்பட்டது. இன்று எல்லா தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ளது.
முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் போதும், முக்கிய தலைவர்கள், நிறுவனங்களின் முக்கிய ஆண்டுகளுக்காகவும் அரசு அஞ்சல் தலைகளை வெளியிடும். அது மற்ற தபால் தலைகளை போல் அதிகமான எண்ணிக்கையில் வெளியிடப்படாது. குறைந்த அளவில் வெளியிடப்படும் முக்கிய தலைகளை வாங்கத்தான் இந்த திட்டம்.
ஃபிலேட்லீ அக்கவுண்ட் தொடங்குவது எப்படி?
ஃபிலேட்லீ டெபாசிட் அக்கவுண்ட் விண்ணப்பங்கள் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும். குறைந்தபட்ச டெபாசிட் 200 ரூபாய் செலுத்தி ஒரு கணக்கை ஆரம்பித்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் பாக்கெட் மணிக்கு பதில் அந்த காசை இந்த கணக்கில் போட்டு தபால் தலைகளாக அவர்களுக்கு வழங்கலாம்.
என்னென்ன கிடைக்கும்:
இந்த கணக்கைத் தொடங்கும் போது அந்த விண்ணப்பத்தில் என்னென்ன அஞ்சல் பொருட்கள் வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கும்.
ஃபிலேட்லீ என்பது வெறும் அஞ்சல் தலை மட்டுமல்ல. அஞ்சல் தலையோடு சேர்த்து, அந்த தலை எதற்காக வெளியிடப்பட்டது, அந்த அஞ்சல் தலையில் உள்ள தலைவர்/இடம்/சம்பவம் குறித்த வரலாறு அடங்கிய விவரப்பட்டியல், அஞ்சல் குறியீடுகள், முதல் நாள் அஞ்சல் உறைகள் , 3D தலைகள் என்று எண்ணற்ற பொருட்கள் சேர்ந்தது தான். அதில் நாம் என்னென்ன சேகரிக்க விரும்புகிறோமோ அவற்றை குறியீட்டால் நமக்கு அனுப்பப்படும்.
எப்படி அனுப்புவார்கள்?
ஒவ்வொரு வெளியீட்டுக்கு பின்பும் சேகரிப்பவர்கள் வீட்டு முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஏதேனும் விடுபட்டால் அதைத் தலைமை அலுவரிடம் தெரிவிக்கலாம். அதை அடுத்த வெளியீட்டோடு இணைத்து அனுப்பிவிடுவர்.
ரீசார்ஜ் செய்வது எப்படி?
ஒவ்வொரு தபாலிலும் எவ்வளவு காசுக்கு தலைகள் அனுப்பப்பட்டுள்ளது , எவ்வளவு மீதம் உள்ளது என்று அச்சடித்த விவரங்கள் அனுப்பப்படும். அடுத்து தலைகளை அனுப்ப போதுமான பணம் இல்லை என்றால் அதிலேயே கூடுதல் செய்தியும் அனுப்புவர். அதைப் பார்த்ததும் அருகில் உள்ள எந்த தபால் அலுவலகத்திலும் நீங்கள் பணத்தைப் போட்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் நிறைய கற்றுக் கொள்வார்கள். ஆண்டிற்கு ஒரு முறை அஞ்சல் துறை சார்பில் கண்காட்சி நடைபெறும். மற்றவர்களது சேமிப்பையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அஞ்சல் தலை சேமிப்பவர்கள் கிளப்பில் சேர்ந்து அவர்களது அறிவும் விரியும். கடைகளில் விற்கும் ஸ்டாம்ப் கலெக்ஷன்களை விட அவர்களையே சேமிக்க வையுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Post Office