காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்த நகுலின் மனைவிதான் ஸ்ருதி நகுல். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அகிரா என்கிற பெண் குழந்தைப் பிறந்தது.
அவர் குழந்தைப் பெற்றெடுக்க தேர்வு செய்த வாட்டர் பாத் சிகிச்சை முறை பலரையும் கவனிக்க வைத்தது. அந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் மிகவும் சிலாகித்து பதிவு செய்திருந்தார் ஸ்ருதி. இதைத் தொடர்ந்து அவர் குழந்தைப் பெற்றதிலிருந்து குழந்தை வளர்ப்பு குறித்து அவ்வபோது சில குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது அவர் குழந்தைப் பெற்று நான்கு மாதம் ஆகிறது. இந்த சமயத்தில் அவரின் ஒரு பதிவு பலரையும் கவனிக்க வைத்தது. அதோடு அந்த பதிவு குழந்தை ஈன்ற பல பெண்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் கொடுக்கும் விதமாகவும் இருந்தது.
அந்தப்பதிவில் தான் ஒரு அழகிய புடவை கட்டியிருந்ததாகவும், அதை இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களுக்கும் ஷேர் செய்தால் அதேபோன்ற புடவை வாங்கி ஸ்டைல் செய்வார்கள் என நினைத்துதான் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்ததாகக் கூறியுள்ளார். ஆனால் மாறாக எப்படி குழந்தை பெற்ற 3 மாதத்தில் உடல் எடையைக் குறைத்தீர்கள், வயிறு தொப்பை இல்லயே, தழும்புகள் இல்லையே... என்ன செய்தீர்கள்... எங்களுக்கும் குறிப்பு தாருங்கள் என கமெண்டில் கேட்டுள்ளனர். இதைப் பார்த்து கவலையுற்ற ஸ்ருதி உடனே இவ்வாறு பதிவு செய்தார்.
நான் இன்னும் கர்ப்பகால உடல் எடையுடன்தான் இருக்கிறேன். குழந்தை ஈன்ற தொப்பை இருக்கிறது. அதேபோல் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் நிறைய உள்ளது. குறிப்பாக அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் இன்னும் இருக்கின்றன. இன்றும் என்னுடைய பழைய ஆடைகளை அணிய முடியாமல், அளவு கொள்ளாமல் சிரமப்படுகிறேன். இதனால் பெரிய அளவு ஆடைகளை வாங்கும்போது மற்றவர்களைப் போல் நானும்தான் கவலைக்கொள்கிறேன். இன்னும் கருமையான அக்குள்களை கொண்டிருக்குகிறேன். இதனால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாமல் சிரமப்படுகிறேன். என்னுடைய இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வருடங்கள் தேவைப்படலாம். ஆனால் தற்போது என்னவாக இருக்கிறேனோ அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
முதுகு வலி, கால் வலியை அனுபவிக்கிறேன். குழந்தைப் பெற்ற பிறகான மன அழுத்தங்களையும் அனுபவித்தேன். ஒரு அம்மாவாக இருப்பது அத்தனை எளிதான காரியமில்லை. போரில் வென்ற தழும்புகளை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் பெண்களும் ஏன் இந்த தழும்புகளை கொண்டாடக்கூடாது. ஏன் அந்த தழும்புகளை காலம் கடந்த பின்பும் சுமக்கக் கூடாது..? அதுதான் எதிர்காலத்தில் நீங்கள் யார், உங்கள் தகுதியை அடையாளப்படுத்தும் தழும்புகள்.
எனவே யாராக இருந்தாலும்.. ஏன் கணவராகவே இருந்தாலும் உங்களை உடல் அவமானம் செய்ய அனுமதிக்காதீர்கள். சில பெண்களின் வீட்டிலேயே மாமியார், கணவர் போன்றவர்களே குழந்தைப் பெற்ற பின்பு ஏறிய உடல் எடையை குறைக்கச் சொல்லி கிண்டல் செய்வதாகக் கூறுவதை கவனித்துள்ளேன். இந்த பதிவைப் படிக்கும் யாராக இருந்தாலும் இனியும் பாடி ஷேமிங் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறி அந்த பதிவை நிறைவு செய்துள்ளார்.
இப்படியான ஒரு நீண்ட பதிவுடன் அவரின் அந்த புடவை ஃபோட்டோ மற்றும் தழும்புகள் கொண்ட வயிறையும் புகைப்படம் எடுத்து இரண்டையும் சேர்ந்தார்போல் இணைத்துள்ளார். அவரின் இந்த பதிவுக்கும் சின்மை போன்ற பிரபலங்களும் வரவேற்று கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.