• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குழந்தை மற்றும் தாய்மார்களை பாதுகாப்பது எப்படி?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத குழந்தை மற்றும் தாய்மார்களை பாதுகாப்பது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

பரிசோதனையில் இருக்கும் கோவிட் தடுப்பூசி பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மீது இதுவரை பரிசோதனை நடத்தவில்லை. இது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது தெரியாது என்பதால் தடுப்பூசி எடுத்துகொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பிறந்த குழந்தை மற்றும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவர்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சிறப்பு பாதுகாப்பு;

பிறந்த குழந்தை மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி எடுத்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். புனேவில் மகப்பேறு நல மருத்துவராக இருக்கும் துஷார் பரிக் இதுகுறித்து பேசும்போது, பரிசோதனையில் இருக்கும் கோவிட் தடுப்பூசி பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மீது இதுவரை பரிசோதனை நடத்தவில்லை. இது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது தெரியாது என்பதால் தடுப்பூசி எடுத்துகொள்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கோகூன் (cocoon strategy) பாதுகாப்பு முறையை பின்பற்றுவது நல்லது எனத் தெரிவித்துள்ளார். கோகூன் பாதுகாப்பு முறை என்பது, பச்சிளம் குழந்தை அருகில் தாய் மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்கு இருப்பார். வெளி ஆட்கள் யாரும் அவர்களை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டர்கள்.

தாய்ப்பால்:

தாய்ப்பாலில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் மாசசூசெட்ஸ் மருத்துவப் பள்ளி மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணர் தலைமையிலான குழு ஒன்று அண்மையில் இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. குழந்தை பிறப்புக்கு முன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின், ஆரம்பக்கட்ட தாய்ப்பாலில் கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் இருந்ததாக கண்டுபிடித்துள்ளது. ஆனால், அந்த ஆன்டிபாடிகள் குழந்தைக்கு சென்றுள்ளதா என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ரேஷ்மா தில்லன் பாய், பல்வேறு நோய்களுக்காக தாய்மார்கள் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடிகள், குழந்தைகளின் உடலுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், கோவிட் தடுப்பூசியில் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பால் வங்கி:

எதிர்பாராத விதமாக தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும்போது, பச்சிளம் குழந்தைகள் எடையிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்போது, பால் வங்கிகளில் கிடைக்கும் இலவச தாய்ப்பாலை பெற்று பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரூச்சிகா தெரிவித்துள்ளார். மேலும், தாய்ப்பால் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எந்தவொரு ஆய்வு முடிவும் கூறவில்லை எனக் கூறியுள்ளார். பால் வங்கி மூலம் பெறப்படும் தாய்ப்பால் பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பால் வங்கியில், பால் கொடுக்கும் கொடையாளரின் மருத்துவ தகவல்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாலை கொடையாக பெறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். கோவிட் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, முறையாக பரிசோதனை மேற்கொண்டு அதன்பிறகு தாய்பாலை கொடையாக கொடுக்க அனுமதிக்க வேண்டும் என ஊட்டசத்து நிபுணர் ருச்சிகா தெரிவித்துள்ளார்.

தாய் மனநலம்:

பிரசவத்துக்கு பின்பு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம், கோபம், வெறுமை ஆகியவை குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். முதல் ஒரு வருடத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், தாய்மார்கள் ஒரு சில வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, நாள்தோறும் குளிக்க வேண்டும், ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும், உடலுக்கு போதுமான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும், மிகவும் முக்கியமாக ஆரோக்கியமாக தூங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனை பின்பற்றினால், தாய் மற்றும் சேய் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: