Home /News /lifestyle /

உங்கள் டீனேஜ் பிள்ளை காதலில் இருக்கிறாரா..? இதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும்

உங்கள் டீனேஜ் பிள்ளை காதலில் இருக்கிறாரா..? இதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும்

டீனேஜ் காதல்

டீனேஜ் காதல்

டீனேஜ் வயதில் தன் மீது அன்பு செலுத்தும் எவர் மீதும் அவர்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சீராட்டி, பாராட்டி வளர்த்த குழந்தைகளை தங்கள் விருப்பப்படி நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது சராசரி பெற்றோர்களின் கனவாக இருக்கும். ஆனால், பிள்ளைகள் தங்கள் மனம் விரும்பியபடி யாரோ ஒருவரை காதலிப்பது தெரிய வரும்போது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்த பின்னர் பிள்ளைகள் தேர்வு செய்யும் காதல் என்பது பெரும்பாலும் முதிர்ச்சி நிறைந்ததாகத் தான் இருக்கும். அதுவே வளர் இளம் பருவத்தில் பிள்ளைகள் செய்யும் காதல் என்பது நிலையற்ற முடிவுகளை கொண்டதாக இருக்கிறது.

குழந்தைகளின் டீனேஜ் பருவம் என்பது எல்லா விஷயங்களின் மீது எண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். இந்த வயதில் தன் மீது அன்பு செலுத்தும் எவர் மீதும் அவர்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக, இந்த வயதுக்கு உரிய தடுமாற்றங்கள் நிறையவே இருக்கும். எதிர் பாலினத்தவர் தன் மீது அன்பு செலுத்தும் போது அதை சாதாரணமாக கடந்து செல்லும் இந்த வயதினருக்கு இருக்காது. ஆகவே, நட்பு எது, காதல் எது என்று பிரித்து உணர முடியாத சூழலில், அதை காதல் என்றே தீர்மானித்துக் கொள்வர். இதுபோன்ற முதிர்ச்சியற்ற நிலையில் காதல் முறிவு மற்றும் வேதனை என்பது சாதாரணமாகி விடுகிறது.

பெற்றோர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும்

எல்லாம் சரி. இப்போது அறியா பருவத்தில் இருக்கும் உங்கள் குழந்தைகள் தெரியாத்தனமாக காதலில் விழுந்து விட்டால் பொறுப்புள்ள பெற்றோராக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உடனடியாக சாட்டையை சுழற்றி பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்று கிளம்பி விடக் கூடாது. டீனேஜ் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாய், தந்தையரைக் காட்டிலும் அரவணைக்கும் நண்பர்கள் தான் தேவை. ஆகவே, ஒரு நண்பன் அல்லது தோழியின் ஸ்தானத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் வழிநடத்த வேண்டும்.



சூழ்நிலையை புரிந்து தீர்வு அளிக்க வேண்டும்

காதலில் விழுந்த பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டது எதையும் பிரித்தறியும் பக்குவம் இருக்காது. மனம் குழப்பம் அடைந்த நிலையில் இருக்கும். மேலும், தனக்கு ஏன் காதல் ஏற்பட்டது, இது சரியா, தவறா என்ற காரணங்களை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைக் கைதிகளாக இருப்பார்கள். அது மட்டுமின்றி, காதல் உணர்வு என்பது உடலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு, அதாவது இது ஒரு பயாலஜிகல் பிராசஸ் என்று புரிய வைக்க வேண்டும். இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தும் என்ற புரிதலை உண்டாக்க வேண்டும்.

நீங்கள் குழந்தைகளின் மனம் புண்படும்படி பேசும் பெற்றோர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

எந்த சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு காதல் ஏற்பட்டது என்றும், அதில் இருந்து அவர்களால் ஏன் மீள முடியவில்லை என்பதையும் பெற்றோர்கள் கவனமாக ஆராய வேண்டும். சிக்கல்களுக்கான தீர்வுகளை தெளிவாக முன்வைக்க வேண்டும்.



வன்முறை கூடாது

எந்த சூழலிலும், உங்கள் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறையை நீங்கள் கையில் எடுக்கக் கூடாது. இது நிச்சயமாக அவர்களது மனதை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கி பிரச்சினையை பெரிதாக்கிவிடும். அது மட்டுமல்லாமல் அவர்களது கல்வி பாதிக்கப்படும். ஆகவே, இளம் வயதில் காதல் என்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் சாதாரண குறுகுறுப்பு எண்ணம் என்பதை பிள்ளைகளுக்கு தெளிவாக புரிய வையுங்கள். இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தையும் கடைப்பிடித்தால், உங்கள் பிள்ளைகளை உங்கள் வசப்படுத்துவது எளிதானதாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Teenage parenting

அடுத்த செய்தி