சேட்டை செய்யும் குறும்புக்கார பிள்ளைகளை எப்படி கையாள்வது? பெற்றோர்களுக்கான டிப்ஸ்!

சிறுவர்கள்

குறும்புக்கார குழந்தைகள் உற்சாகமானவர்கள், சோம்பல் அற்றவர்கள். ஒழிவுமறைவு அற்றவர்கள், அறிவுக் கூர்மை உடையவர்கள். நுண்ணறிவு வாய்ந்தவர்கள். நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் மற்றும் நன்கு கலந்து பழகக்கூடியவர்கள்.

  • Share this:
சிறுவர்களின் சேட்டை ரசிக்கும் வகையில் இருந்தாலும், நாம் வாழும் நெருக்கடி மிகுந்த இந்த காலம் பெற்றோர்களுக்கு கோபத்தை வரவழைத்து விடுகின்றன. அவர்களை எப்படி வழிநடத்துவது? என்ற குழப்பம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றது. இந்நிலையில், குறும்புத்தனம் செய்யும் பிள்ளைகள் குறித்து மனோதத்துவ நிபுணரும் ஆசிரியருமான ஷ.அமனஷ்வீலி கூறும் கருத்துகள் பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அவர் ‘குழந்தைகள் வாழ்க’ என்ற தமது புகழ்மிக்க நூலில் இது குறித்து பேசுகிறார்.

அமனஷ்வீலி கூறுகிறார், “குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கிறோம்? பெரியவர்கள் ஏன் இவற்றை ஏதோ குற்றங்களாக, உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடு மீறப்பட்டதாகப் பார்க்கிறார்கள்? குறும்பு என்றால் என்ன, இந்த குறும்புக்காரர்கள் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியாததுதான் இதற்குக் காரணம் எனத் தோற்றுகிறது.

குறும்புக்கார குழந்தைகள் உற்சாகமானவர்கள், சோம்பல் அற்றவர்கள். ஒழிவுமறைவு அற்றவர்கள், இவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது. பிற பிள்ளைகள் உற்சாகமாக ஓடியாடி தற்காப்பில் ஈடுபட குறும்புக்கார குழந்தைகள் உதவுகின்றனர்.

குறும்புக்கார குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள். நுண்ணறிவு வாய்ந்தவர்கள். எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மதிப்பீடு செய்யும் அவசியத்திற்கு பெரியவர்களை ஆளாக்குவார்கள்.

ஷ.அமனஷ்வீலி


குறும்புக்கார குழந்தைகளிடம் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும். தம் தனிப்பட்ட திறமைகளின் வளர்ச்சி பற்றிய தறவான கணிப்புகளை இவர்கள் தம்முள்ளேயே ஈடுகட்டிக் கொள்கின்றனர். குறும்புக்கார குழந்தைகள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். விளையாட்டும்தனம் அற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள். கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கைப் பார்ப்பார்கள். இவர்கள் தமக்கு மட்டும் அன்றி, தம்மை சுற்றி இருப்பவர்களின் மத்தியில் நகைச்சுவை உணர்வு மிக்க நல்ல மனநிலையையும் சிரிப்பையும் தருவார்கள்.

குறும்புக்கார குழந்தைகள் நன்கு கலந்து பழகக்கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரை எல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும்போதுதான் குறும்புகள் பிறக்கின்றன. குறும்புக்கார குழந்தைகள் செயல்முனைப்பான கற்பனையாளர்கள், இவர்கள் சுற்றி இருப்பவற்றை சுயமாக அறியவும், மாற்றி அமைக்கவும் விழைகிறார்கள். குழந்தைகளின் குறும்புகள் வாழ்க்கையின் மீது இவர்களுக்கு இருக்கும் நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் மீது இருக்கும் நாட்டம். இவர்களுடைய மூளைத்திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.

எனவேதான் குறும்புக்காரர்களை நாம் விரும்புகிறோம். குறும்புத்தனம் என்பது குழந்தைகளிடம் உள்ள ஒரு நல்ல குணமாகும். இதை சரிவர அணுகிப் பயன்படுத்த வேண்டும். குறும்புத் தனங்களை தண்டிக்கலாம். ஆனால், ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.

சிறுவர்கள்


குழந்தைகளின் ஒழுக்கம் என்பது குறும்புகளை மாற்றி அமைப்படுவதில்தான் இருக்கின்றதே தவிர, இவற்றை அடக்கி ஒடுக்குவதில் இல்லை. நமது பயிற்சி முறையின் மூலம் அவர்களின் உள்ளே புகுந்து முடியாததைச் செய்யும்படி அவர்களை நிர்பந்திக்க வேண்டாம்.

Must Read : சாதிக்கத் துடிக்கும் இளைஞருக்கு மருள் நீக்கியார் கூறிய ஆலோசனை

 

குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்க வேண்டும். அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள, தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காண வேண்டும். என்றென்றும் மனிதாபிமானம் மிக்க பெற்றோராக இருக்க வேண்டும் எனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும். குழந்தைகளின் குறும்புகளை மாற்றி அமைக்க உதவ வேண்டும்.” இவ்வாறு கூறுகிறார்.
Published by:Suresh V
First published: