உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் பெற்றோர்களின் பொறுப்புகளை அதிகரித்துவிட்டது. அச்சுறுத்திய கொரோனாவால் பெற்றோர்களும், குழந்தைகளும் ஒருவித அச்சத்திலேயே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
கொரோனா காலத்திற்கு முன், கொரோனா காலத்திற்கு பின் என இரண்டு வகையாக காலத்தை பிரித்துக்கொள்வோம். கொரோனா காலத்திற்கு முன் சாதாரண நாட்களில் குழந்தைகளை பாதுகாப்பது, பராமரிப்பது பெரும் பிரச்சனைகள் இல்லாத நாட்களாக நகர்ந்தன. ஆனால் கொரோனா என்ற வைரஸ் உலகை ஆட்டிவைக்க தொடங்கியது முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பு சேர்ந்துவிட்டது. வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் ஏற்பட்ட பின் நம் வாழ்வியல் முறையில் நிறைய மாறுபாடுகள் வந்துவிட்டன. அதே சமயம், பச்சிளம் குழந்தைகள் முதல் 10 வயது வரை இருக்கும் குழந்தைகளை இந்த பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பது கூடுதல் பொறுப்பாக அமைந்தது.
பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் பராமரிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் குறித்து மனநல மருத்துவர் நித்யா பகிர்ந்ததை பார்க்கலாம்.
பெருந்தொற்று நேரங்களில் குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வாறு இருக்க வேண்டும்?
Parenting என்பதில் இதுதான் சரி, இதுதான் தவறு என்பது கிடையாது. ஒவ்வொருவரின் முறையைப் பொருத்து அவை வேறுபடுகின்றன. ஒரு முறையான parenting-ல் எங்கு விட்டு கொடுக்க வேண்டுமோ அங்கு விட்டுக்கொடுத்து எங்கு ‘நோ மீன்ஸ் நோ’ என சொல்ல வேண்டுமோ அங்கு அவ்வாறு செயல்பட குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். குறிப்பாக, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒரு கட்டமைப்பே இல்லாமல் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். எப்போது தூங்குகிறோம், எப்போது எழுகிறோம் என்ற கட்டமைப்பே இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. அதிலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை இருந்ததால் அட்டவணை தயாரித்து அதன்படி குழந்தைகளை கவனிப்பது பெற்றோருக்கு அவசியமாகிறது. குழந்தையை எப்போது தூக்கத்திலிருந்து எழுப்புவது, எப்போது படிக்க வைப்பது, எப்போது நேரம் செலவிடுவது போன்றவை அடங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளுக்கு ஓய்வு மிகவும் முக்கியம். ஓய்வு என்றால் தூங்குவதும், டிவி பார்ப்பதும், மொபைலில் கேம் விளையாடுவதும் அல்ல. ஆன்லைன் வகுப்புகளால் பெரியவர்களை போல குழந்தைகளும் ஓரிடத்தில் அமர்ந்து கணினியை பார்க்க வேண்டிய நிலை உருவானதால் குழந்தையின் மூளையில் அது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, மாலை நேரங்களில் மொட்டை மாடிக்கு செல்வதும், ஓவியம் வரைய வைப்பதும், உடற்பயிற்சி செய்வதும், குழந்தைகளிடம் உரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும். குழந்தைகளை எந்த விஷயத்திற்கும் நிர்பந்திக்கக் கூடாது. அவர்களை அவர்களாக இருக்கவிட வேண்டும்.
Must Read | மாரடைப்பு ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கா? அலர்ட் கொடுக்கும் புள்ளி விவரம்!
மேலும், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவு எதுவோ, அதை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். சீசன் பழங்கள், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், பாதாம், முந்திரி போன்றவற்றை கொடுப்பது அவசியம். இதற்கிடையே, குழந்தையின் உறக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு கிளம்புவதை போல் காலை எழுந்தவுடனேயே பல் துலக்கி, குளித்துவிட்டு சாப்பிடுவது குழந்தைக்கு நல்ல பழக்கத்தை ஏற்படுத்தும். ஆன்லைன் வகுப்பில் குழந்தைகள் படிக்கும்போது அவர்களை பங்கெடுக்க வைக்க வேண்டும். மாறாக பெற்றோர் அவர்களுக்காக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பாடம் எழுதக் கூடாது. குழந்தைகளை அவர்களாக இருக்கவிடுவதுதான் சிறந்தது. அவர்களையே எழுதவைப்பதும், அவர்களையே தங்களது ப்ராஜெக்ட் வேலைகளை செய்ய வைத்து கற்க வழிவகுக்க வேண்டும்.
WFH செய்யும் பெற்றோர் குழந்தைகளிடம் தக்க நேரத்தை செலவிடுவது எப்படி? பலன்கள் என்ன?
குழந்தைகளின் முறையான வளர்ப்பில் பெற்றோரின் நேர பங்களிப்பு மிக மிக அவசியம். பெருந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிந்தாலும் கணவன், மனைவி என இருவரின் வேலை நேரமும் முக்கியமானது. இருவருக்கும் வேலை பளு இருப்பின் நேரம் கடந்து தங்கள் பணியை முடிக்கும் சூழல் இருந்தால் அதை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும். ஓர் அட்டவணை அமைத்து அதன்படி செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குழந்தைகளிடன் நேரம் செலவிட வேண்டும். அலுவலக அழைப்புகளை தவிர்ப்பது நல்லது. பணி நேரத்தையும், குழந்தையிடம் செலவிடும் நேரத்தையும் சமநிலையில் வைக்க வேண்டும். மதிய உணவு, இரவு உணவை குழந்தையுடன் சேர்ந்து உமர்ந்து சாப்பிட வேண்டும். பணி மற்றும் குடும்ப சூழலுக்கு ஏற்ப நேரம் செலவிடுவது குறித்து பெற்றோர்களே தீர்வை கொண்டுவர வேண்டும். குழந்தைக்கு மட்டுமின்றி பெற்றோரும் தங்கள் பணி நேரத்தை பொருத்து அட்டவணை கொண்டு செயல்படுதல் குழந்தை-பெற்றோர் உறவு பாலத்தில் விரிசல் வராமல் தடுக்கும்.
Must Read | டைப் 2 நீரிழிவு நோயாளிகள்: உணவு விஷயத்தில் அலர்ட் தேவை!
இணைய பயன்பாட்டிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?
இணைய பயன்பாடு என்பது இந்த பெருந்தொற்று காலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, குழந்தைகளை கணினி முன்பாக அமரவைத்தது. ஜூம் போன்ற தளத்தில் குழந்தைகளுக்கு வகுப்பு நடக்கும்பொழுது அதனை பெற்றோர் தவறாது பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வது நல்ல பழக்கம். பெற்றோர் பணியில் இருந்தாலும் குழந்தையின் மீதும் ஒரு கவனம் இருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் கணினியை தனியறையில் வைக்காமல் வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் இடத்தில் வைப்பது சிறந்தது. குழந்தையை தனியறையில் விடுவதும் நல்லதல்ல. இக்கால குழ்ந்தைகள் டெக்னாலஜி வளர்ச்சியின் காரணத்தால் விரைவில் எதையும் கற்கும் திறனுடையவர்கள். இருப்பினும், இணையத்தில் அவர்கள் எதை பார்க்கிறார்கள், எதை தேடுகிறார்கள் என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதல்ல, மாறாக ஒரு சக நண்பராக இருப்பது குழந்தை எதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள உதவும். சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது அவர்கள் யாரிடம் பேசுகின்றனர், எதைப்பற்றி பேசுகின்றனர் என்பதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே, பெற்றோர் குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பது மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல பயன் தரும். குழந்தைகள் வளரும்போதே Open communication-ஐ பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலம் நமக்கு பல விஷயங்களை உணர்த்தியுள்ளது. குறிப்பாக, வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த பள்ளி குழந்தைகளுக்கு கவனிப்பை வழங்குவதற்கு பெற்றோருக்கு பெரும் பொறுப்பு உள்ளது. வளரும் பருவத்தை வெளியுலகை பார்க்காமல் வீட்டிற்குள்லேயே செலவிடுவது மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதை பெற்றோர் புரிந்து செயல்பட வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விஷயங்கள், மனம் மற்றும் பல அத்தியாவசிய ஆதரவை பெற்றோர் வழங்க வேண்டும். கூடுதல் வேலை மற்றும் பொறுப்பு இருக்கும்போதிலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை இந்த பெருந்தொற்று காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child Care, Explainer, Parenting, Parenting Tips