உலக சுகாதார அமைப்பின் (WHO) கணிப்பின் படி , கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 2-17 வயதுக்குட்பட்ட 1 பில்லியன் குழந்தைகள் உடல் மற்றும் உணர்ச்சி அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இன்டர்போல் தரவுகளின்படி, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 24 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்த வழக்குகளில் 80 சதவீதம் குழந்தைகள் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கவும், அதனை அடையாளம் காணவும் வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள் போன்ற பெரியவர்கள் தங்களது கடமையை செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான உடல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை அடையாளம் காண நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் குழந்தையின் மனதை காயப்படுத்துவதையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் மீதான துஷ்பிரயோகங்களின் மிகவும் பொதுவான வகைகளை முதலில் அறிந்துகொள்வோம் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம்...
1. உடல் ரீதியிலான அத்துமீறல்கள் :
குழந்தைகள் மீதான உடல் ரீதியான தாக்குதலால் மனதில் ஏற்படும் காயங்கள், நீண்ட கால மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் சில செயல்கள் பின்வருமாறு:
- குழந்தையை அடித்தல், உதைத்தல், சூடுவைத்தல் அல்லது தீங்கிளைத்தல்
- குழந்தையை மூர்க்கத்தனத்துடன் அசைத்தல்
- மூச்சுத்திணற வைப்பது அல்லது நீரில் மூழ்கடிப்பது
- குழந்தைக்கு விஷம் கொடுப்பது அல்லது செலுத்துவது
- எங்கேயும் அசையாத வண்ணம் கட்டிவைப்பது
- உணவு தண்ணீர், மருந்து கொடுக்காமல், தூங்க விடாமல் சித்திரவதை செய்வது
உங்கள் குழந்தைகளை சத்தான உணவை சாப்பிட வைக்க என்ன செய்யலாம்..? இதை ஃபாலோ பண்ணுங்க..!
2. பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் :
வயது வந்தவருக்கும் அவர்களை விட சிறியவருக்கும் இடையிலான எந்தவொரு பாலியல் செயல்பாடுகளும் பாலியல் துஷ்பிரயோகமாகவே கருத்தப்படுகிறது. பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு குழந்தையை பாலியல் செயலில் ஈடுபட கட்டாயப்படுத்தும் அல்லது கவர்ந்திழுக்கும் எந்தவொரு செயலாகும்.
- கற்பழிப்பு அல்லது வாய்வழி உடலுறவு
- பாலியல் துன்புறுத்தல்
- குழந்தைக்கு தனிப்பட்ட உடல் உறுப்புகளை வெளிப்படுத்துதல்
- மைனர் குழந்தைகள் முன்னிலையில் சுய இன்பம்
- பாலியல் ரீதியிலான குறுச்செய்திகள் அல்லது தொலைபேசி உரையாடல்கள்
- வலுக்கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ பாலியல் ரீதியிலான செயலில் ஈடுபட வைத்தல்
- குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தயாரித்தல் மற்றும் பரப்புதல்
3. உணர்ச்சி ரீதியிலான அத்துமீறல்கள் :
குழந்தைக்கு உளவியல் அல்லது வார்த்தை ரீதியாக தீங்கிழைப்பது,மன ரீதியிலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. குழந்தைகளின் அவதூறாக பேசப்படும் வார்த்தைகள் அவர்களது மனதில் நீண்ட காலம் மாறாத வடுவாக மாற வாய்ப்புள்ளது.
ஒரு குழந்தையை தேவையற்றதாகவும், மதிப்பற்றதாகவும், அன்பற்றதாகவும் உணர வைக்கிறது. மேலும் குழந்தைகளிடம் பதற்றம், மனச்சோர்வு, ஒழுக்கமின்மை, மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவது போன்ற சிக்கல்களை உண்டாக்குகிறது.
உங்களையே பிரதிபலிக்கும் குழந்தைகள்… வார்த்தைகளில் கவனம் தேவை… பெற்றோருக்கான கைட்லைன்ஸ்!
உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம் :
- நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைத்தல்
- உங்கள் குழந்தையின் செயல்களை அதிகமாக விமர்சிப்பது
- எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அவர்களை அச்சுறுத்துவது
- குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுதல் அல்லது இழிவுபடுத்துதல்
- நீங்கள் நினைத்ததை குழந்தை செய்ய வேண்டும் என்பதற்காக அதனிடம் பேசுவதை தவிர்ப்பது.
- குழந்தையின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் புறக்கணித்தல்
அறிகுறிகள் :
ஒவ்வொரு குழந்தையும் சில சூழ்நிலைகளில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு குழந்தை துஷ்பிரயோகத்திற்கு ஆளானால் அதனை கண்டறிய உதவும் சில அறிகுறிகள் இங்கே...
- உடல்நலம் மோசமடைவது
- நடத்தை மற்றும் மனநிலையில் விவரிக்க முடியாத மாற்றங்கள்
- பதற்றம் மற்றும் மன அழுத்தம்
- அதிகப்படியான கோபம்
- மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருப்பது
- பள்ளிக்குச் செல்ல மறுப்பது
- பொருத்தமற்ற உடை அணிந்திருப்பது
- போதை மருந்துகள் அல்லது ஆல்கஹால் பயன்படுத்துவது.
குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள் எப்படியில்லாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம், அவர்களுடன் நேரம் செலவழித்து உரையாடுங்கள். குழந்தைகளுக்கு அவர்களின் உரிமைகளைப் பற்றி சொல்லிக்கொடுங்கள். சரியான மற்றும் தவறான நடத்தைகளைப் பற்றி உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள். நீங்கள் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளைக்குத் தெரியப்படுத்துங்கள். துஷ்பிரயோகம் நிகழ்ந்தால் உடனடியாக அதைப் புகாரளிக்கவும் அல்லது விசாரணை நடத்தவும் முன்வாருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.