Sexual abuse in kids : உங்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தால் எப்படி கண்டறிவது? நடவடிக்கைகளில் தெரியும் மாற்றங்கள் என்ன?

துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல் ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த நடத்தையை மாற்றிவிடும். அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அல்லது, அவ்வப்போது அவர்களின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கும்.

  • Share this:
எந்த வயதினராக இருந்தாலும், பாலினமாக இருந்தாலும் பாலியல் துன்புறுத்தல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தை சேர்ந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு அவர்கள் வாழ்க்கையையே புரட்டிவிடும்.

குழந்தைகளுக்கு தனக்கு என்ன நேர்ந்தது என்பது சரியாகப் புரியாது. இளம் பருவத்தினர் தங்களுக்கு நேர்ந்ததை பகிர்வதற்குத் தயங்குவார்கள். ஆனால், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் டீனேஜர்களிடம் பொதுவான அறிகுறிகள் காணப்படும். அதைப் பற்றிய விவரங்கள் இங்கே.

பாலியல் துன்புறுத்தல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதைப் பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்துள்ளனர். இருப்பினும், அப்படியொரு பிரச்சனையே இல்லை என்று கூறிவிட முடியாது. தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு அளித்துள்ள தரவு விவரங்களின் படி, இந்தியாவில், குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 109 குழந்தைகள் ஏதோ ஒரு வித பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். மேலும், அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும், அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உடல் மற்றும் உணர்ச்சி பூர்வமாக குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும்போது, அவர்கள் மனநலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த பாதிப்பு, அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மற்றவர்களை நம்புவது, ஒரு உறவை ஏற்பது போன்றவற்றில் சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, தீவிரமான மனச்சோர்வும் ஏற்படுகிறது.



பெற்றோராக, நம் பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படாமல் இருக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல, அப்படி ஏதேனும் நடந்தால், அவர்களுக்கு தேவையான ஆதரவும் அரவணைப்பும் தந்து அந்த தாக்கத்திலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

இதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள, பாலியல் துன்புறுத்தலில் எத்தனை விதங்கள் உள்ளன மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் காணப்படும் பொது அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

பாலியல் ரீதியான செயல்கள் – உடல் ரீதியானது, வாய்மொழி அல்லது உணர்ச்சி பூர்வமானது – ஆகியவற்றில் கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ ஈடுபடுத்தப்படுவது பாலியல் துன்புறுத்தல் எனப்படும். குழந்தைகளை மிகவும் எளிதாக இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம், ஏனென்றால், பாலியல் செயல்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, பாலியல் தொல்லை கொடுப்பவரின் முறைகேடான நோக்கம் குழந்தைகளுக்கு தெரியாது. அது மட்டுமின்றி, பாலியல் தொல்லை என்பது நேரடியாக அல்லது இணையம் வழியாக, என்று எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

பாலியல் துன்புறுத்தல் வகைகள் :

பாலியல் துன்புறுத்தல் இரண்டு வகைகளில் காணப்படுகின்றன – நேரடித் தொடர்பு மற்றும் தொடர்பு இல்லாத துன்புறுத்தல். நேரடித் தொடர்பு வழியான துன்புறுத்தல் என்பது, ஒரு குழந்தையிடம் உடல் ரீதியான தொல்லை கொடுப்பதை குறிப்பிடுகிறது. தொடர்பு இல்லாத துன்புறுத்தல் என்பது ஒரு குழந்தையிடம் நேரடியாகவோ, ஆன்லைனிலோ ஏற்படலாம்.

தீண்டுதல், முத்தமிடுதல், வாய்வழி புணர்ச்சி, மற்றும் பாலியல் அத்துமீறல் போன்றவை தொடர்பு ரீதியான பாலியல் துன்புறுத்தல்கள். தொடர்பு இல்லாத துன்புறுத்தல் என்பது மாஸ்டர்பேஷன், பார்ன் அல்லது பாலியல் ரீதியான வீடியோக்கள் காட்டுவது, வீடியோக்கள் எடுப்பது போன்றவற்றைக் குறிக்கும். குழந்தைகளால் இத்தகைய செயல்பாடுகளை விளக்கவோ வெளிப்படுத்தவோ முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட அறிகுறிகளைக் கண்டறிந்து குழந்தைக்கு உதவி செய்து ஆதரிக்க வேண்டும்.



உடல் ரீதியான அறிகுறிகள் :

பாலியல் துன்புறுத்தலுக்கு உண்டான குழந்தைகளிடம், பின்வரும் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளான அறிகுறிகள் காணப்படும்.

*பிறப்புறுப்பில் வலி அல்லது அரிப்பு
*இரத்தக்கரையோடு காணப்பட்ட உள்ளாடை
* மலக்குடல் இரத்தப்போக்கு
* நடப்பது அல்லது உட்காருவதில் பிரச்சனைகள்
* ஆடைகளில் மண் அல்லது ஈரம், அல்லது படுக்கைலேயே சிறுநீர் கழிப்பது
* வழக்கத்தை விட, அதிகமாக அல்லது குறைவாக உண்பது
* தூங்க முடியாமல் அவதிப்படுவது
* வயிற்றுவலி

Diabetes in kids : குழந்தைகளையும் தாக்கும் நீரிழிவு நோய் : அறிகுறிகள்..சிகிச்சை முறைகள் என்ன?

நடத்தை மற்றும் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் :

பாலியல் துன்புறுத்தல் ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த நடத்தையை மாற்றிவிடும். அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அல்லது, அவ்வப்போது அவர்களின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருக்கும். அவற்றில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகள்:

* அமைதியாக இருப்பது
* அனைவரிடமும் இருந்து விலகி இருப்பது
* பள்ளி, பாடங்கள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது
* பள்ளியில் கவனக்குறைவால் குறைந்த மதிப்பெண்



உணர்ச்சிபூர்வமான மாற்றங்கள் :

எந்த விதமான பாலியல் துன்புறுத்தலும் குழந்தைகளுக்கு அதிர்ச்சிகரமாகவே இருக்கும். அவர்களை மிகவும் உணர்ச்சிபூர்வமாக பாதிக்கக்கூடும்.

* பதட்டம்
* மனச்சோர்வு
* கோபம்
* படபடப்பு
* பயம்
* காரணம் இல்லாமல் அழுதல்
* குறைந்த தன்னம்பிக்கை
* பாலியல் ரீதியான குழப்பங்கள்
* அச்சுறுத்தும் கனவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது :

உங்கள் குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து உங்களிடம் ஏதேனும் கேட்டால், அல்லது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதைப் பற்றி அமைதியாக உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். முதலில், அப்படி நடந்ததற்கு காரணம் குழந்தை அல்ல என்பதை அவர்களுக்கு உறுதி படுத்தி, ஆறுதல் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள் குற்றவுணர்வுக்கு ஆளாகக் கூடாது. அல்லது தாங்கள் தான் அதற்குக் காரணம் என்று தன்னைக் குற்றம் சாட்டிக்கொள்ளக் கூடாது. அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றி உங்கள் குழந்தையிடம் தெளிவாக விளக்கிச் சொல்ல, நடந்த சம்பவத்தைப் பற்றி உடனேயே புகார் அளிக்க வேண்டியது உங்கள் கடமை.

 
Published by:Sivaranjani E
First published: