உலகம் முழுவதும், கோவிட் தொற்று பாதிப்பு பல்வேறு பாதிப்புகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டின் அரசும் போதிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படுமா போன்ற சந்தேகங்கள் உள்ளன.
ஆனால், தாய்க்கு தொற்று இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தை பிறந்தவுடன், தாயும் குழந்தையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. குழந்தை பிறந்தவுடனேயே, தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
கூடுதலாக, கோவிட் பாசிட்டிவ் என்று தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள், குழந்தையுடன் இருக்கும் போது, பாலூட்டும் நேரத்தில், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தாயின் கைகள் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டு, முறையாக சுத்தம் செய்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி, குழந்தையும் தாயும் இருக்கும் இடங்கள் சுத்தமாகாவும், சுகாதாரமாகவும் இருப்பது அவசியம்.
தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படாது என்பதை பல்வேறு தரவுகள் உறுதி செய்துள்ளன. தாய்ப்பால் கொடுக்கும் ஒருன் பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரின் உடலில் ஆன்டிபாடிகள் எனப்படும் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் உருவாகும். அந்த ரசாயனங்கள் தாய்ப்பாலிலும் சுரக்கும். எனவே, குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உடனடி மருந்தும், தடுப்பும் கிடைக்கிறது.
அது மட்டுமின்றி, பிறப்பு முதல் ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் தான் குழந்தையின் உணவு. எனவே, அது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க் உதவுகிறது. பாலூட்டுவது மிகவும் ஆரோக்கியமான செயல். கோவிட் தொற்று பாதித்த நபரின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தொற்றை எதிர்த்துப் போராட உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எனவே, தாய்ப்பால் கொடுப்பதும் அந்த வகையில் உதவியாக இருக்கின்றது.
கோவிட் தொற்று ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுக்கலாமா என்பது பற்றிய சந்தேகங்களுக்கு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி: எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சமீபத்தில் தான் ஒரு குழந்தை பிறந்தது. நான் என்ன செய்ய வேண்டும்?
குழந்தையை உங்களுக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது, பாலூட்டவும், முகக்கவசம் அணிந்து, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து, நீங்கள் இருக்கும் இடம் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறதா என்பதை இறுதி செய்து கொள்ளுங்கள்.
கேள்வி: எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரெஸ்ட் பம்ப் மூலம் நான் தாய்ப்பால் எடுத்து, அதை வேறொருவர் என் குழந்தைக்கு கொடுக்கலாமா?
அப்படி செய்யலாம், ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் பம்ப் செய்து கொடுக்கும் பாலை ஊட்டும் நபர் கொரோனா தொற்று இல்லாத நபராக இருக்க வேண்டும். சில நேரங்களில் தொற்று பாசிட்டிவாக இருந்தாலும், அறிகுறிகள் காட்டாது, அவ்வாறு இருப்பவர்களைத் தவிர்க்க வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு பால் அளிக்கும் நபரின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது, உணவு அளிப்பது மட்டும் இல்லை. தாயின் அரவணைப்பில் குழந்தை பால் குடிக்கும் போது, இருவருக்கும் பிணைப்பு, அன்பு, பாதுகாப்பு ஏற்பட்டு, குழந்தையின் சரியான உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. நீங்கள் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடிந்தால், கோவிட் தொற்று பாதிப்பு இருந்தாலும், அதையே செய்யலாம்.
கேள்வி: கோவிட் பாசிட்டிவ் தொற்று ஏற்பட்ட தாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்து, அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் என்ன செய்யலாம்?
அப்படியான சூழ்நிலையில், அவர் தாய்ப்பாலை பம்ப் வழியாக அல்லது நேரடியாக ஒரு கோப்பையில் வெளியேற்றி, அதனை வேறொரு நபர் வழியாக குழந்தைக்கு கொடுக்கலாம். உடல்நிலை சரியான உடனேயே, நேரடியாக பாலூட்டத்தொடங்க வேண்டும்.
கேள்வி: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிரமமாக உள்ளது. ஆனால், நான் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பகுதியில் உள்ள பாலூட்டும் நிபுணர் அல்லது ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். முறையான பயிற்சி பெற்ற, திறமையான ஆலோசகர் உங்களிடம் நேரடியாகவோ அல்லது வீடியோ வழியாகவோ, உங்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, உங்களுக்கு உதவி செய்வார்.
உங்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், வீடியோ ஆலோசனைப் பெறலாம்.
கேள்வி: நான் குழந்தையை பிரசவித்த போது, எனக்கு கோவிட் பாசிட்டிவ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, நான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை. குழந்தை பிறந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. எனக்கு பால் சுரக்கவில்லை என்பதைப் போல உணர்கிறேன். எனக்கு மீண்டும் தாய்ப்பால் சுரக்குமா? நான் என் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க முடியுமா?
நிச்சயமாக! நீங்கள் குழந்தை பிறந்த உடனேயே பாலூட்டவில்லை அல்லது சில நாட்கள் வரை பாலூட்டவில்லை என்றாலோ, சரியான திட்டம், முயற்சி மற்றும் பொறுமையுடன் இருந்தால், உங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் மற்றும் சுரக்கும் தாய்ப்பாலின் அளவும் அதிகரிக்கும். தாய்ப்பாலின் ஒவ்வொரு துளியும் பெரும் மதிப்புள்ளவை. ஆகவே, அளவு குறைவாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய, பயிற்சி மற்றும் அனுபவமிக்க லாக்டேஷன் ஆலோசகரிடம் கலந்துரையாடுங்கள்.
கேள்வி: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பிரசவ தேதியை நெருங்கும் பெண்களுக்கான பரிந்துரைகள் என்ன?
அனுபவம் மிக்கவர்களால் நடத்தப்படும் ‘கர்ப்பிணிகள் தாய்ப்பால் கொடுப்பது’ சார்ந்த இணைய வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
கோவிட் தொற்று இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தையை உங்கள் அரவணைப்பிலேயே வைத்துக் கொள்ளலாமா, எப்போது தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவது, தாய்ப்பால் எப்படி கொடுப்பது உள்ளிட்ட உங்கள் சந்தேகங்களுக்கு முன்கூட்டியே உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்..? கணவன்களுக்கான டிப்ஸ்
உலக சுகாதார நிறுவனம், இந்திய பாலூட்டும் நிபுணர்களின் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுகாதார அமைப்புகள் வழங்கியுள்ள பாதுகாப்பு பரிந்துரைகளை படிக்கவும்.
குழந்தை பிறந்தவுடனேயே, தாய்ப்பால் அளிக்கவும். நீங்கள் பாலூட்டுவதில் ஏதேனும் சவால்களை சந்தித்தால், உடனேயே மருத்துவரிடம் பேசி தேவையான உதவியைப் பெறுங்கள். இணையம் வழியாகவே பல்வேறு லாக்டேஷன் ஆலோசகர்கள் உங்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி உதவி செய்ய முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast feeding diet, Breastfeeding, World breastfeeding week