குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான வஷயம். அதிலும், நல்ல தகவல்களை சொல்லிக்கொடுத்து, அதன்படி அவர்களை நடக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்றுகூட செல்லாம். ஆனால், அதனை பெற்றோர் கண்டிப்பாக செய்ய வேண்டும். குறிப்பாக, தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல், சபித்தல் போன்ற ஒழுக்கத்துக்கு மாறான செயல்களில் இருந்து குழந்தைகளை நல்வழிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. குழந்தைகள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்து, அந்த வார்த்தையை மற்றொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்துவார்கள்.
அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை திட்டி, அடிப்பதைக்காட்டிலும், அதற்கு மாற்றான வழிகளை சொல்லிக்கொடுத்தோம் என்றால் அவர்கள் அதனை எளிதாக பின்பற்றி மிகவும் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். "தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை", "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" போன்ற தமிழ் பழமொழிகள் குழந்தை வளர்ப்பை பற்றி மிக எளிமையாக விளக்குகின்றன. நாம் எவ்வாறு குழந்தைகளை வளர்க்கிறோமோ, அதைப்போல் தான் நாளைய சமூகத்தில் அவர்கள் பரிணமிப்பார்கள். இதனை உணர்ந்து, குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்ய வேண்டும். முதன்முதலாக குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போது, அவர்களில் மழலை மொழியைக் கேட்டு எல்லையில்லா மகிழ்ச்சியை அடைவோம்.
அதே குழந்தை வளர்ந்து தவறான வார்த்தைகளை பேசும்போது நமக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வரும். அதனை அப்போது சரிசெய்ய முயல்வதைக் காட்டிலும், சிறுவயதிலிருந்தே (childhood) அவர்கள் வளரும் சூழலை கண்காணித்து அதற்கேற்றார்போல் வழிநடத்த வேண்டும். குழந்தைகள் பிறரை திட்டுவதோ, சபிப்பதோ சாதாரண விஷயம் தான். ஏனென்றால் இத்தகைய சூழலை நாம் அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சக குழந்தைகள் என அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளையும், செயல்களையுமே குழந்தைகள் பிரதிபலிக்கும். குழந்தைகள், பிறரை திட்டுவதும், சாபமிடுவதும் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதனை மாற்றுவதற்கென்று சில வழிகள் உள்ளன. அதனை பின்பற்றினால் குழந்தைகளின் நடத்தையை நிச்சயமாக மாற்றலாம்.
ஒரு குழந்தை தவறான வார்த்தைகளை பயன்படுத்துகிறதா? பிறரை திட்டுகிறதா? அதைப்பற்றி நீங்கள் கவலையடைய வேண்டாம். உடனே இந்த 4 வழிகளையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள், அவர்களின் நடத்தையில் மாற்றம் தெரியும்.
1. குழந்தைகள் முன் திட்டுவதையும் சாபமிடுவதையும் தவிருங்கள் :குழந்தைகளின் எந்தவொரு செயலுக்கும் முதற்காரணி பெற்றோர் மட்டுமே. அதனால், குழந்தைகளின் முன் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை பெற்றோர் முதலில் தவிர்க்க வேண்டும். அவர்கள் இருக்கும்போது என்ன பேசுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்தைகளை நிதானமாகவும், அதனை மென்மையாகவும் பேசினால், நாமும் இப்படிதான் பேச வேண்டும் என குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் கோபமாக பேசினால் அதையே குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.
also read : உங்கள் துணையிடம் இப்படி நடந்துக்கொண்டால் சண்டையே வராது..
2.குழந்தைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டும் :சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டுவதில்லை. இதனால் எது சரி, எது தவறு என்பதையறியாமல் குழந்தைகள் வளரும் வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் குழந்தைகள் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி சாபமிடுவதையும், திட்டுவதையும் பெற்றோர் உடனடியாக கண்டிக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை (warning) செய்வதுடன், வார்த்தைக்கான அர்த்தங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். யாரோ ஒருவர் விளையாட்டாக குழந்தைகள் முன் பயன்படுத்தும் வார்த்தைகளை, அதன் பொருள் தெரியாமலேயே அவர்கள் பயன்படுத்துவார்கள். இதனால், குழந்தைகள் எந்தமாதிரியான வார்த்தைகளை பயன்படுதுகிறார்கள் என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
3. தவறான வார்த்தைக்கு மாற்றாக, நல்ல வார்த்தையை சொல்லிக் கொடுங்கள்:நாம் பயன்படுத்தும் மொழியில் ஒவ்வொரு தவறான வார்த்தைக்கும் நிகரான நல்ல வார்த்தைகள் நிறைய உள்ளன. இதனால், குழந்தைகள் ஒரு தவறான வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதனை உடனடியாக கண்டித்துவிட்டு, அதற்கு மாற்றான நல்ல வார்த்தையை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நல்ல வார்த்தைகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது, அதனை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். இதனால், எத்தைகய சூழலிலும், நேர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இயல்பாகவே அவர்களுக்குள் வளர்ந்துவிடும்.
4.குழந்தைகளுக்கான எல்லையை வரையறுத்தல் :தற்போதைய சூழலில் குழந்தைகள் விளையாடுவதைக்காட்டிலும் தொலைபேசிகளிலும் , தொலைக்காட்சிகளை பார்ப்பதிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானபோக்கு என்றாலும் கூட, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகள், அவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், நாடகம், படம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமெடிக்காக Adult content - அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செல்போனில் கேம் விளையாடும்போது தவறான விளம்பரங்கள் அவர்களின் கண்ணில்படும் வாய்ப்பு உள்ளது. இது குழந்தைகளின் போக்கை மாற்றிவிடும் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.