Home /News /lifestyle /

வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!

வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!

நிம்மதி இன்மை

நிம்மதி இன்மை

சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய் என்பது வெற்றியாளர்களின் பொன்மொழி.

பலவித மனிதர்களை நாம் தினந்தோறும் சந்திக்கிறோம். கோவக்காரர்களாக சிலர், எப்போதும் டென்ஷனுடன் உலவும் சிலர். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்கள், தன் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கத் துடிப்பவர்கள், எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் தட்டிக் கழிப்பவர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

எப்போதும் பெறுப்பில்லாமல் வெறும் பில்டப் கொடுத்துப் பேசும் பலரை நாம் சந்தித்திருப்போம். அப்படிப்பட்ட ஒருவர்தான் வெற்றிவேல். இவர் பெயரில்தான் வெற்றி இருக்கிறதே தவிர வாழ்க்கையில் இருக்கவில்லை. மிகச்சிறந்த சோம்பேறியாக இருந்து வந்தார்.

வெற்றிவேல் செய்ய வேண்டிய வேலைகளை, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எப்போதும் நினைப்பவர். எல்லா வேலைகளையும் இப்படித்தான் தள்ளிப் போடுவார். அதில் முக்கியாமானது, முக்கியமில்லாதது என்றெல்லாம் பாகுபாடு பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் தள்ளிப் போடுவார். அவருக்காக எப்போதாவது தோன்றினால் ஏதோ கடமைக்காக செய்வார்.

வடிவேல் தனது அபார நடிப்பால் சும்மா இருப்பது எப்படி என்று நடித்து சிரிக்க வைப்பாரே அந்த கேட்டகிரியைச் சேர்ந்தவர்தான் இந்த வெற்றிவேல்.இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள். அந்த குடும்பத்தை அவரின் மனைவிதான் வேலைக்குச் சென்று கவனித்து வந்தார். வீட்டில் படுத்துக் கிடப்பது. டி.வி. பார்ப்பது, ஊரில் யாரிடமாவது அரட்டை அடித்து பில்டப் கொடுப்பது என பொழுதைப் போக்குவார்.

அவரை பொறுப்புள்ள ஆளாக மாற்ற அந்த குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை. அவருக்கு சில நேரங்களில் திடீரென ஞானம் வரும். அப்போது, வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என நினைப்பார் வெற்றிவேல். அதற்காக மனதில் திட்டமிடுவார். பிறகு சரி, நாளை நிச்சயம் செய்துமுடித்து விடுவோம் என கிடப்பில் போடுவார்.

வெற்றிவேல் பிறரிடம் பேசும்போது, தனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் என காட்டிக்கொள்வார். இதன் மூலம் பிறரிடம் நன் மதிப்பைப் பெற நினைப்பார். ஆனால், அவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரே இருப்பவர் விரைவில் கண்டுபிடித்துவிடுவார். அந்த அளவிற்கு சொதப்பலாக இருக்கும் அவரின் பில்டப்.

செயல்கள் எல்லாம் வெற்றிவேலின், நினைவுலகத்தில் மட்டுமே சாத்தியமாய் இருந்தது. நிஜவுலகில் செயல்களாக வெளிப்படுவது மிகவும் குறைவு.

சில வேலைகளை பாதியில் நிறுத்திவிடுவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை நடக்கும். அப்போதெல்லாம் வழக்கம்போல மனைவி திட்டித் தீர்த்துவிடுவார். அப்படிப்பட்ட நேரங்களில் வெற்றிவேலுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வரும். இனி எப்போதும் வேலைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் செய்ய வேண்டும் என உறுதியேற்பார். அந்த உறுதி ஒருசில நாட்கள் இருக்கும். பின்னர் மீண்டும் பழைய வெற்றிவேலாகவே மாறிவிடுவார்.

Read More : தன் மகளை மருத்துவராக்கிய ஓர் ஏழைத் தாயின் கதை....

இப்படிப்பட்ட இயல்புகளை செயல்களின் மூலமாக, விடாப்பிடியான தொடர் பயிற்சி மூலம் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் அவருக்குக் கிடைத்த ஏராளமான வாய்ப்புகளை நழுவவிட்டார். இதனால் அவரின் மனைவிக்கு ரத்தக்கொதிப்பு நோய் வந்ததுதான் மிச்சம் என்ற நிலை ஏற்பட்டது.

Must Read : பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!

நம் இயல்புகளிலும் இப்படிப்பட்ட வெற்றிவேல்கள் பொதிந்திருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு முறையான தொடர் பயிற்சிகள் மூலம் வெளிநடப்பு செய்ய வைத்துவிடுங்கள். இல்லை என்றால் வாய்ப்புகள் கைநழுவிச் சென்றுவிடும். அன்பும் ஆரோக்கியமும், வெற்றியும் இருக்க வேண்டிய இடங்களில், வெறுப்பும், துன்பங்களும், தோல்வியும், நிம்மதி இன்மையும், நிரந்தரமாய் தங்கிவிடும். "ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய்" என்பது வெற்றியாளர்களின் பொன்மொழி.
Published by:Suresh V
First published:

Tags: Special story, Success

அடுத்த செய்தி