நம்ம சந்தை | ஐடி இளைஞர்கள் நடத்தும் கிராமத்து திருவிழா...

news18
Updated: February 12, 2018, 3:15 PM IST
நம்ம சந்தை | ஐடி இளைஞர்கள் நடத்தும் கிராமத்து திருவிழா...
news18
Updated: February 12, 2018, 3:15 PM IST
அதிக விலையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள், வசதியானவர்களுக்கு மட்டுமே என்கிற நிலையை உடைத்து, அனைவருக்கும் கிடைக்கும் வகையில்  ‘நம்ம சந்தை’ என்கிற பெயரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்  ஐடி இளைஞர்கள்.

சமூக வலைதளங்களில் பரவும் விழிப்புணர்வு, சமூக அக்கறை கொண்ட மருத்துவர்களின் அறிவுரை போன்ற காரணங்களால் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்த இயற்கை சார்ந்த பொருட்களின் மீது மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது.  அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக விவசாயிகளிடமிருந்து இயற்கை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோரிடம் விற்பனை செய்து வருகின்றனர் தாம்பரத்தை சேர்ந்த ‘அகத்தி’ குழுவினர்.

தாம்பரம், சென்னை  கிறித்தவக் கல்லூரி அருகில்  எம்.இ.எஸ் சாலையில் அமைந்துள்ளது அகத்தி தோட்டம். இங்கு பிரதி மாதம் ஒவ்வொரு இரண்டாம் ஞாயிறு அன்றும் பறை, கரகாட்டம், சூழலியல் கருத்தரங்கு, மரபு சார்ந்த சிறார் விளையாட்டுகள் என ஒரு திருவிழாவைப் போல ஒரு அசல் கிராமத்து சூழலில் களைகட்டுகிறது ‘நம்ம சந்தை’.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த ‘நம்ம சந்தையில்’ பூங்கார்,மாப்பிள்ளை சம்பா ,சீரக சம்பா போன்ற பாரம்பரிய அரிசிவகைகளும், தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள், நாட்டு சர்க்கரை,செக்கில் அரைத்த எண்ணெய் வகைகள் உள்ளிட்ட இயற்கை வேளாண் பொருட்கள் கிடைக்கின்றன.

‘அகத்தி’ குழுவினரின் நம்ம சந்தை


மேலும் மறுசுழற்சியில் உருவாக்கப்பட்ட துணிப்பைகள்,கைவினைப் பொருட்கள் , சிறுதானியங்களில் செய்யப்பட்ட கார வகை தின்பண்டங்கள், கருப்பட்டியில் செய்யப்பட்ட இனிப்பு தின்பண்டங்கள், இயற்கை சோப்புக்கட்டிகள் போன்ற பொருட்களும் கிடைக்கின்றன.

நம்ம சந்தையில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை
Loading...
நம்ம சந்தையில், சிறார் களம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான விளையாட்டு பயிற்சி நடத்தப்படுகிறது


இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாததால், மிகக்குறைந்த விலையில் இயற்கை (ஆர்கானிக்) பொருட்கள் நுகர்வோரின் கைகளில் போய்ச்சேர்கிறது என்பதே இதன் சிறப்பு.

பொருட்களின் விற்பனைத் தளமாக மட்டும் இல்லாமல் பல்வேறு நிகழ்வுகளும் இங்கு நடைபெறுகின்றன.

வியாபாரம் மட்டுமின்றி, வீடுகளில் தோட்டங்கள் அமைப்பது போன்ற பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்புகள்


இந்த சந்தை குறித்து பேசிய அகத்தி குழுமத்தை சேர்ந்த இளைஞர்கள், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளின் பொருட்கள் நுகர்வோரை சென்று சேர வேண்டும் என்பதும், மறந்துபோன மண்சார்ந்த கலைகளை மீட்டெடுப்பதுமே தங்களது நோக்கம் எனவும் தெரிவித்தனர்.

பரபரப்பான நகர வாழ்க்கையை முற்றிலுமாக துண்டித்து ஒரு கிராமத்து உணர்வை தரும் ‘நம்ம சந்தை’ குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க ஒரு அருமையான இடம்.

நம்ம சந்தை குறித்து மேலும் விபரங்களை ‘அகத்தி’ என்கிற ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்