விரதத்தை ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல். அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும், உள்ளத்திற்கும் உகந்தது என்கின்றனர். மாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் மகா சிவராத்திரி விரதத்தின் போது, கடைபிடிக்க வேண்டியவைகள் என்னென்ன என்பது பற்றி நிபுணர்கள் பகிர்ந்துள்ள சில குறிப்புகள் இதோ...
"விரதம் இருப்பது என்பது மனித ஹார்மோன் வளர்ச்சியில் (HGH) குறுகிய கால அதிகரிப்பு மற்றும் மரபணு வெளிப்பாட்டின் மாற்றங்கள் உட்பட பல்வேறு சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய விளைவுகள் நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது மற்றும் நோய்க்கான அபாயங்களை குறைக்க உதவும். வழக்கமான இடைவெளியில் விரதம் இருப்பவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் உடல் எடையை குறைப்பதற்காக அதனை பின்பற்றுகின்றனர்” என ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விரதமிருப்பதை ஆரோக்கியமான அனுபவமாக மாற்ற, நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
விரதத்தை தொடங்குவதற்கு முன்:
விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள் கடைசி உணவில் புரோட்டீன் அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் இருப்பதை உறுதி செய்வது முக்கியம், ஏனெனில் இது உங்கள் மூளையில் பசி உணர்வை தூண்டுவதை குறைத்து, விரதத்தை எளிமையாக கடைபிடிக்க உதவும்.
விரதத்தை முடிக்கும் போது:
விரதத்தை முடிக்கும் போது சரியான உணவை உட்கொள்வது அவசியம். விரதத்தை நிறைவு செய்யும் போது காய்கறிகள், புரதம், கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் விரதத்தை முடிக்க முதலில் இனிப்பை எடுத்துக்கொள்ளக்கூடாது.
விரதத்தின் போது செய்யக்கூடாதவைகள்:
சிலர் விரதம் இருக்கிறேன் என உணவு ஏதும் சாப்பிடாமல் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பார்கள். இது தவறான முறை. ‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கிறேன் என்பதும் சரியானது அல்ல. இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும். அது பல நோய்கள் வரக் காரணமாக அமையும். விரதம் இருக்கும் நாளில் எண்ணெயில் செய்யப்படும் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது. காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துவிட்டு விரதத்தை முடிக்கும்போது பழச்சாறு அருந்தினாலும் பெரிய பயன் இருக்காது. மலச்சிக்கல், வயிற்றுப்புண், தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படக் கூடும்.
விரதத்தை எளிதாக்கும் சில குறிப்புகள்:
1. முறையான திட்டமிடுதலுடன் தொடங்க வேண்டும்.
2. உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க தண்ணீர் அதிகமாக அருந்தவும்.
3. நீங்கள் சாப்பிடும் போது மெதுவாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும்.
4. ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
5. பூண்டு, வெங்காயம், வாழைக்காய், பெருங்காயம் ஆகியவை சேர்க்காத உணவுகளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல் நல்லது.
6. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே உணவை சமைத்து வையுங்கள்.
7. உங்கள் இரவு உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நல்ல அளவில் இருக்க வேண்டும்.
8. விரதத்தின் போது குளுக்கோஸ் தண்ணீர், கிரீன் டீ, சூப் போன்றவையும் பருகலாம். கிரீன் டீ ‘ஆன்டிஆக்ஸிடென்ட்’ ஆகச் செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்யும். போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் கிடைக்க வழி செய்கிறது.
9. பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்து பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்தலாம். வேக வைத்த காய்கறிகள், முளை கட்டிய தானியங்கள், சோயா பீன்ஸ், சுண்டல், நவதானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் தானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். இது உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
10. உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும். வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முகப்பொலிவையும் பாதிக்கும். உங்கள் விரத முறையை மேலும் நிலையானதாக மாற்ற இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தவும்" என ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Maha Shivaratri