நாய், பூனையைப் போல கங்காருவும் மனிதர்களுடன் பழகும் பாசக்கார புள்ளைங்க..! ஆய்வில் தகவல்!

கங்காரு

வீட்டு விலங்குகளைப்போல் கங்காருகளும் மனிதர்களுடன் சைகை மொழி மூலம் உதவி கேட்கும் திறனை பெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  • Share this:
வீட்டு விலங்குகளான நாய், பூனைகளைப் போன்று மனிதர்களுடன் பழகுவதை கங்காரு இனமும் கற்றுக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருவின் குணாதிசயங்களையும், அவை மனிதர்களுடன் பழகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அயர்லாந்தைச் சேர்ந்த விலங்கியல் ஆராய்ச்சியாளர் ஆலன் மெக்எலிகாட் (Alan McElligott) தலைமையிலான குழுவினர் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகருக்கு வெளியே அமைந்துள்ள மௌன்ட் மேசிடன் (Mount Macedon) பகுதியில் 11 கங்காருகளைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டனர்.

11 கங்காருக்களும் வளர்க்கப்படவில்லை, அந்த பகுதியிலிருந்த அவைகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடைத்து தங்களின் ஆய்வை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதன் முடிவுகளை அண்மையில் வெளியிட்ட அவர்கள், அதில் மனிதர்களின் உரையாடல்களையும், கட்டளைகளையும் கங்காருகள் புரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் வளரும் நாய், பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் தங்களுக்கு தேவையானதை சைகை மூலமோ அல்லது பார்வை மூலமோ உணர்த்தி பெற்றுக்கொள்வதுபோல் கங்காரு இனமும் செய்வதாக தெரிவித்துள்ளனர்.



இதற்கு சான்றாக, 11 கங்காருகள் முன்பு உணவு அடைக்கப்பட்ட பெட்டியை கொண்டு வைத்ததாகவும், 10 கங்காருகள் அந்த பெட்டியை திறந்து வைக்க வேண்டும் என்பதுபோல் ஆய்வாளர்களை பார்த்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தாங்கள் அமைதியாக இருந்தபோதும், உணவுப் பெட்டியையையும், தங்களையும் உற்று பார்த்துக்கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ஒருகட்டத்தில் அந்த பெட்டிகளை திறக்குமாறு சைகை மூலமாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர். கங்காருவின் இந்த சைகை மொழி தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

செல்லப் பிராணியை தினமும் வாக்கிங் கூட்டிட்டு போறதுதான் உங்களின் முதல் வேலையா..? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்..!

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு விலங்குகள் மட்டுமே இத்தகைய சைகை மொழிகளை காட்டும் நிலையில், காட்டில் வளரும் கங்காரு சைகை மொழி காட்டியது புதுமையாக இருந்ததாக தெரிவித்தனர். இதன் மூலம் வீட்டு விலங்குகளைப்போல் கங்காருகளும் மனிதர்களுடன் சைகை மொழி மூலம் உதவி கேட்கும் திறனை பெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 'கங்காரு மனிதர்களுடன் வாழ்வதற்கு ஏற்ற விலங்குதான் என்பதற்கு சரியான அறிகுறி இந்த மொழிச் சைகை' என அயர்லாந்து ஆராய்ச்சியாளர் ஆலன்மெக்எலிகாட் தெரிவித்துள்ளார்.



பொதுவாக காட்டு விலங்குகளிடம் இதுபோன்ற சைகைகளை எதிர்பார்க்க முடியாது என்பதால், இது எங்களுக்கு புதுமையாக இருக்கிறது என்று அவர் கூறினார். நாய், பூனை, குதிரை உள்ளிட்ட வீட்டு விலங்குகள் எவ்வாறு மனிதர்களுடன் சைகை மொழியில் பேசுகிறது என்பதையும் ஆய்வறிக்கையில் விளக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள், அவற்றுடன் கங்காரு எப்படி ஒத்துப்போகிறது என்பதையும் கூறியுள்ளனர். சரியான கற்றல் சூழல் இருக்கும்போது, அங்கு இருக்கும் குணாதிசயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடியும், காட்டு விலங்கான கங்காருவும் இதற்கு பொருந்தி இருப்பதாக ஆய்வில் பங்கேற்ற துணை ஆய்வாளர் அலெக்ஸாண்டிரியா கிரீன் கூறியுள்ளார்.
Published by:Sivaranjani E
First published: