• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்தியாவிற்கு இப்போது பூஸ்டர் டோஸ் தேவையில்லை - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

இந்தியாவிற்கு இப்போது பூஸ்டர் டோஸ் தேவையில்லை - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Corona Virus : கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் இந்தியாவிற்கு தற்போது தேவையில்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் கூறி இருக்கிறார்.

  • Share this:
நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருக்கும் நிலையில், ஏராளமான மக்கள் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி கொண்டு வருகின்றனர். எனினும் சில சந்தர்ப்பங்களில் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைந்து விடுவதோடு, பெரிதாக ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகள் மூன்றாவது டோஸ் எனப்படும் பூஸ்டர் ஷாட் குறித்த பேச்சை அதிகரித்து உள்ளது.

இதனிடையே சமீபத்தில் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா, கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் இந்தியாவிற்கு தற்போது தேவையில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல் 2 டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். அதே போல பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர் கூறினார்.

also read : 'சமூக இடைவெளி மட்டும் போதாது'.. கொரோனா வைரஸ் பற்றி புதிய ஆய்வு கூறுவது என்ன ?

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய டாக்டர் ரன்தீப் குலேரியா, தற்போதைக்கு கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. எனவே தான் இந்தியாவில் இப்போதைக்கு பூஸ்டர் டோஸிற்கான அவசியம் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். கோவிட் தொற்று நோய்க்கு எதிரான நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தை பாராட்டிய குலேரியா, தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா எவ்வாறு நீண்ட தூரம் வந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு பேசினார். இந்தியாவில் H1N1 பாதிப்பு ஏற்பட்டபோது, ​​வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதிலிருந்து சொந்தமாக தயாரித்து மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்வது வரை நம் நாடு முன்னணியில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முதல் மற்றும் இரண்டாவது அலையுடன் ஒப்பிடும் போது தீவிரமான மூன்றாவது அலை இந்தியாவை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளோம். காலப்போக்கில் கோவிட் தொற்று ஒரு உள்ளூர் வடிவத்தை எடுக்கும். அதாவது தொடர்ந்து கோவிட் பாதிப்புகளை சந்தித்தாலும் நோயின் தீவிரம் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் என்றும் கூறினார். கோவிட் பூஸ்டர் டோஸின் தேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், மூன்றாவது டோஸ் (பூஸ்டர் ஷாட்) தேவைப்பட்டால் அது பற்றிய முடிவு அறிவியலின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும், இந்த விஷயத்தில் தற்போது ஆய்வுகள் நடந்து வருவதாகவும் கூறினார். பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாக வழங்கிய பிறகே ​​பூஸ்டர் டோஸ்களை வழங்குகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வி.கே.பால் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: