கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஐடி போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
வீட்டில் வேலை செய்தாலே சற்று ஓய்வாக கட்டிலில் அமர்ந்து கொண்டுதான் பலரும் வேலை செய்வோம். அப்படி கட்டிலில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை செய்தால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என ஆய்வு கூறுகிறது. அவை என்னென்ன பார்க்கலாம்.
ஆய்வில் கட்டில் மெத்தையில் அமர்ந்தபடி நீண்ட நேரம் வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.
கட்டிலில் அமரும்போது சமமான உடலமைப்பு கிடைக்காது. மெத்தையின் பஞ்சு அழுத்தத்தால் ஏற்ற இறக்கமாக இருக்கும். இந்த அமைப்பில் நீண்ட நேரம் அமரும்போது உடல் வலி மிகுதியாக இருக்கும். குறிப்பாக முதுகெலுப்புக்கு சரியான சப்போர்ட் கிடைக்காது. கடுமையான முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி உண்டாகும். தினமும் கட்டிலிலேயே அமர்கிறீர்கள் எனில் டிஸ்க் பிரச்னை வரும்.
இது ஒருபுறம் இருக்க மன ரீதியாக அனுகும்போது, கட்டில் என்பது உறங்குவதற்கான இடம் என்பது மூளையில் பதிவான ஒரு விஷயம். அதில் அமர்ந்து வேலை செய்யும்போது தூங்க வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் வேலையின் வேகம் தடைபடும். எனவே கட்டிலில் அமர்ந்தபடி நீண்ட நேரம் லேப்டாப் பயன்படுத்துவதோ, புத்தகங்கள் படிப்பதோ தவறு என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் வேறு வழியில்லை கட்டிலில்தான் அமர வேண்டும் என்போர் சில விதிமுறைகளைக் கையாளுதல் அவசியம்.
முதுகுக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையில் அமர வேண்டும். கழுத்து குணிந்து வேலை செய்யாதபடி லேப்டாப்பை உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும். அதாவது கழுத்து, தலை முதுகு மூன்றும் நேர்கோட்டில் இருக்க வேண்டும். கால்கள் நேராக இருக்க வேண்டும் அல்லது முழங்கால்களை சற்று வளைத்து அமரலாம். அதேபோல் நீண்ட நேரம் ஒரே அமைப்பில் அமராமல் அடிக்கடி மாறி மாறி அமர வேண்டும். இவற்றை பின்பற்றினால் பிரச்னைகளிலிருந்து சற்று தப்பிக்கலாம்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.