விதவிதமான கொழுக்கட்டை ரெசிபீஸ்: இது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

news18
Updated: September 12, 2018, 4:51 PM IST
விதவிதமான கொழுக்கட்டை ரெசிபீஸ்: இது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
கொழுக்கட்டை பாயாசம்
news18
Updated: September 12, 2018, 4:51 PM IST
பொங்கல் பண்டிகை என்றால் கரும்பும், தீபாவளிப் பண்டிகை என்றால் பட்டாசும் உடனடியாக நினைவுக்கு வரும். அதுபோல, விநாயகர் சதுர்த்தி என்றாலே நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். விநாயகருக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான சிற்றுண்டி கொழுக்கட்டை.

வழக்கமான முறைகளில் செய்யப்படும் கொழுக்கட்டைகளாக அல்லாமல், புதிய பொருட்களைக் கொண்டு வித்தியாசமாக தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளின் செய்முறைகளை அறிமுகப்படுகிறோம்.

கோதுமை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - ஒரு மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), பீன்ஸ் - சிறிது பொடியாக நறுக்கியது
கேரட் - சிறிது துருவியது
Loading...
உருளைக்கிழங்கு -1 (துருவியது)
கோஸ் துருவல் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
சூரியகாந்தி எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை மாவை லேசாக வறுத்து, அதில் அரிசி மாவு மற்றும் உப்பை சேர்க்க வேண்டும். இதனுடன் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து, பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து வைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பீன்ஸ், கேரட், கோஸ், உருளைக்கிழங்கு துருவலை சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை பழ அளவு உருண்டையாக எடுத்து, எண்ணெய்விட்டு கிண்ணம்போல் செய்து, அதில் ஒரு தேக்கரண்டி  வதக்கிய காய்கறி கலவையை வைத்து மூடவும். பின்னர் கொழுக்கட்டைகளை 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்தால் கோதுமை கொழுக்கட்டை தயார்.

சிறுதானிய கொழுக்கட்டை

தேவையானவை: கம்பு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி, வெள்ளை நிற சின்ன சோளம் ஆகியவற்றை கலந்து ரவையாக உடைத்தது - 2 கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 10
ஏலக்காய் தூள் - சிறிது
உலர்ந்த அத்திப்பழம் - 2
பேரீச்சம்பழம் - 2
வெல்லம் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை: சிறுதானியங்கள் அனைத்தையும் லேசாக வறுத்து ரவை பதத்திற்கு அரைக்கவும். அதில் உலர்ந்த பழங்களையும் பொடித்து கலந்து வைக்க வேண்டும். பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை நறுக்கி நெய்யில் வறுத்து வைக்க வேண்டும்.ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் 1/2 கப் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி ஏலக்காய்த்தூள், வெந்த ரவை கலவை, உப்பு சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சுருண்டு வந்ததும், உடனே இறக்கி ஆறவிட வேண்டும். அதில், நட்ஸ் வகைகள், நெய் சேர்த்து கலக்கவும். பின்னர், இதை பிடிக்கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்தால் சுவையான சுவையான சிறுதானிய கொழுக்கட்டை சாப்பிடலாம்.

சம்பா ரவை கொழுக்கட்டை

தேவையானவை: சம்பா ரவை – ஒரு கப், வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வெறும் கடாயில் சம்பா ரவையைப் போட்டு லேசாக வறுக்க வேண்டும். அதே கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்க வேண்டும். வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சி துருவல், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, ரவையை மெதுவாக சேர்த்துக் கிளறவும். ஆறியதும், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சம்பா ரவை கொழுக்கட்டை தயார்.

கொழுக்கட்டை பாயாசம்

தேவையானவை: களைந்து உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு – 1 கப், வெல்லம் – 1 கப், தேங்காய் துருவல் – அரை கப், கடலைப்பருப்பு – அரை கப், ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை, காய்ச்சிய பால் – 2 கப், எண்ணெய், உப்பு – சிறிதளவு, செர்ரி உள்ளிட்ட உலர் வழங்கள் - சிறிது

செய்முறை: கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு கப் தண்ணீர் விட்டு, பொடித்த வெல்லம் சேர்த்து, பாகு பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த கடலைப் பருப்பை சேர்க்கவும். பின்னர், அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கவும். கொதி வந்தவுடன் இறக்கவும்.2 கப் நீருடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். பின்னர், மாவை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதை வெல்லப் பாகு - கடலைப்பருப்பு கரைசலில் சேர்த்துக் கிளறவும். பின்னர், அதில் உலர் பழங்களை சேர்த்தால் தித்திக்கும் கொழுக்கட்டை பாயாசம் அருந்தலாம்.

சிவப்பு அவல் கொழுக்கட்டை

தேவையானவை: சிவப்பு அவல் – ஒன்றரை கப், வேக வைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், துருவிய இஞ்சி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – சிறிதளவுசெய்முறை: சிவப்பு அவலை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, துருவிய இஞ்சி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, வேக வைத்த பருப்புகளை சேர்த்துக் கிளறி, அவலையும் சேர்த்து நன்கு கிளறவும். கையில் சிறிது எண்ணெய் தடவி, அவல் கலவையை விரும்பிய வடிவத்தில் கொழுக்கட்டைகளாக பிடித்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான அவல் கொழுக்கட்டைகளை ருசிக்கலாம்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...