நீங்கள் ஆன்லைனில் பிரிட்ஜ் வாங்குகிறீர்ளா? கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் இதான்

மாதிரிப் படம்

அமேசான்,ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் பிரிட்ஜ் வாங்குகிறீர்கள் என்றால், இந்த சில விஷயங்களை நிச்சயமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • Share this:
வீட்டிற்கு பிரிட்ஜ் வாங்கும்போது பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்ஜ் அளவு, அதன் கொள்ளளவு (capacity), குளிர்விக்கும் திறன் ஆகியவற்றை பார்க்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு வீட்டில் இருக்கும் பொருள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை மாற்ற முடியாது. அதனால் வாங்கும்போதே பல்வேறு விஷயங்களை கூர்ந்து கவனித்து வாங்க வேண்டும். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், இன்னும் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

பிரிட்ஜ்ஜூக்கான இடம்:

பிரிட்ஜ் வாங்க திட்டமிடும்போதே வீட்டில் அதனை எங்கு வைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரிட்ஜ் வைப்பதற்கு தகுந்த இடம் இருக்கிறதா? மூன்று பின் பிளக் பாய்ண்ட் இருக்கிறதா என்பதை பார்த்து, அவை இருக்கும் இடத்தில் வைக்க உத்தேசிக்க வேண்டும். பிரிட்ஜ் கதவை தாராளமாக திறந்து மூடுமளவிற்கான இடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டில் இருக்கும் இடத்திற்கு தகுந்த அளவுள்ள பிரிட்ஜ் -ஐ தேர்வு செய்ய வேண்டும். இக்கட்டான இடத்தில் பொருந்தாத பிரிட்ஜ்-ஐ வாங்கி வைத்து சிரமத்தை எதிர்கொள்ள வேண்டாம்.

பிரிட்ஜ் வகை மற்றும் விலை:

பிரிட்ஜின் விலை மற்றும் அதன் வகை முக்கியமென்பதால், வாங்கும் முன்னரே எந்த வகை பிரிட்ஜ் வாங்கலாம் என்பதை தீர்மானியுங்கள். உதாரணமாக சிங்கிள் டோர், டபுள் டோர் பிரிட்ஜ் இருக்கின்றன. மினி பிரிட்ஜ் மற்றும் அளவில் பெரிய பிரிட்ஜ் ஆகியவை இருக்கின்றன. மினி பிரிட்ஜ் என்றால் 8,000 ரூபாய் விலையில் இருந்து சந்தையில் இருக்கின்றன. சிங்கிள் டோர் பிரிட்ஜ் 11,000 ஆயிரம் முதல் 20,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

பிரிட்ஜ் கொள்ளளவு:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிட்ஜ் கொள்ளளவு இருக்குமாறு வாங்குவது அவசியம். ப்ரீசர் (Freezer) மற்றும் புதிதாக உணவை சேமிக்கும் அளவு குறைந்தபட்சம் 160 லிட்டருக்கு குறைவாக இருக்கக்கூடாது. புதிய உணவை சேமிக்கும் இடம் அதிகமாகவும், பிரீசர் இடம் குறைவாகவும் இருக்க வேண்டும். 2 பேர் மட்டும் குடும்பத்தில் இருந்தால் 150 லிட்டர் ஸ்டோரேஜ் கொள்ளளவு பிரிட்ஜ் போதும். 3 பேருக்கு 180 லிட்டரும், 4 பேருக்கு மேல் 300 லிட்டரும், 6 பேருக்கு மேல் இருந்தால் 400 லிட்டர் கொள்ளவு கொண்ட பிரிட்ஜ் வாங்கலாம்.

மினி பிரிட்ஜ்:

ஒருவர் மட்டுமே இருந்தால் கூட மினி பிரிட்ஜ் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சிங்கிள் டோருடன் இருக்கும் 160 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ் வாங்கிக் கொள்ளலாம். மினி பிரிட்ஜ், ஒரு குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றும் போதிய சமையல் பொருட்களை சேமித்து வைக்க முடியாது. அதேநேரத்தில் 160 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ் வாங்கும்போது அனைத்து பயன்பாடுகளையும் மேற்கொள்ள முடியும்.

ஸ்டேபிளைசர் மாடல்:

200 லிட்டருக்கும் மேலான கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ்-ஐ வாங்குபவர்கள் ஸ்டேபிளைசர் இலவசமாக கொடுக்கும் பிரிட்ஜை வாங்கிக்கொள்ளலாம். அடிக்கடி ஏற்படும் மின்சார தடை மற்றும் அதிகமான வோல்டேஜ் பிரச்சனைகளில் இருந்து பிரிட்ஜ் -ஐ பாதுகாக்க இது உதவியாக இருக்கும். சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் இருப்பதால், ஸ்டேபிளைசரை கூடுதலாக கொடுக்கும் நிறுவனத்தின் பிரிட்ஜை தேர்தெடுக்கலாம்.

பிரிட்ஜ் கலர் மற்றும் டிசைன்:

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரிட்ஜ் வாங்குகிறீர்கள் என்றால், அதனை பயன்படுத்தும்போதெல்லாம் கை விரல்கள் அதன்மீது படிந்திருக்கும். இதனால், அதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இந்த மாடல்களில் காந்ததன்மை கொண்ட பொருட்களை வைக்க முடியாது. பிளாஸ்டிக் மாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் கீறல்கள் மற்றும் அதிகளவு அழுக்கு உண்டாகும். சமையலறையில் உள்ள கலரை பொறுத்தும் பிரிட்ஜ் கலரை தேர்ந்தெடுக்கலாம்.

குளிர்விக்கும் வகை:

உறைவிக்கும் வசதி மற்றும் உறைவிக்கும் வசதி அல்லாத பிரிட்ஜ் என இருவகை பிரிட்ஜூகள் உள்ளன. நேரடியாக அனைத்து பொருட்களையும் ஒரே விகித அளவில் குளிர்விக்கும் பிரிட்ஜ்கள் விலை குறைவானதாக இருக்கும். பொருட்களை தனியாக உறைவிக்கும் வசதி கொண்ட பிரிட்ஜ்கள் விலை சற்று கூடுதலாக இருக்கும். உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப எந்தவித பிரிட்ஜ் வேண்டும் என்று தேர்தெடுத்துக்கொள்ளுங்கள்.

சேமிக்கும் அடுக்குகள்:

பிரிட்ஜில் இருக்கும் சேமிக்கும் அடுக்குகளை கவனிக்க வேண்டியது அவசியம். பாட்டில், காய்கறிகள் மற்றும் பழங்கள் வைப்பதற்கு ஏற்ப இடங்கள் உள்ளதா? என்பதை பொறுத்து, அதற்கான இடவசதி உள்ள பிரிட்ஜ் -ஐ வாங்கிக்கொள்ளுங்கள். ஏற்கனவே கூறியதுபோல் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் மட்டுமே பிரிட்ஜில் வசதிகள் இருக்கும்.

டிஜிட்டல் இன்வெர்டர் vs ஸ்மார்ட் இன்வெர்ட்டர்:

டிஜிட்டல் இன்வெர்ட்டர் உள்ள பிரிட்ஜூகளில் கூலிங் தேவையை அளவிட்டு ஆட்டோமேடிக்காக பேன் ஸ்பீடு மாறும். இதன்மூலம் உங்களின் மின்சாரம் மிச்சப்படுவதுடன், குறைவான சத்தம் மட்டுமே இருக்கும். ஸ்மார்ட் இன்வெர்ட்டரில் மின்சாரம் இல்லை என்றாலும் பொருட்கள் ஜில்லென்றும், பிரெஷ்ஷாகவும் இருக்கும்.

BEE ஸ்டார் ரேட்டிங்க்:

குறைவான கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ் வாங்கினால் BEE ஸ்டார் ரேட்டிங் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. உங்களின் மின் கட்டணத்தையும் எந்த வித்ததிலும் பாதிக்காது. அதிக கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ் - ஐ வாங்குகிறீர்கள் என்றால் BEE ஸ்டார் ரேட்டிங்கை பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஸ்டார்கள் இருக்கும் பிரிட்ஜ் -ஐ தேர்தெடுக்கலாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: