உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் இருக்கிறதா? இந்த யோகாசனங்களை செய்யலாம்..!

உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் இருக்கிறதா? இந்த யோகாசனங்களை செய்யலாம்..!

யோகா

ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

  • Share this:
பருவமெய்திய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும், மன அளவிலும் அசௌகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசௌகரியங்கள் மறைந்துவிடுகின்றன. இந்த மாற்றங்கள் நடைபெறும்போது பல பெண்களேகூட அதை உணர்வதில்லை. இவை சுமார் 70 சதவிகித பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாதாமாதம் நடைபெறும் இந்த மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்கச் செய்துவிடும்.

இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதால் இந்த அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் உடலின் இயற்கையான இயக்கத்தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் நடத்தை சார்ந்த காரணங்களும் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக அமையலாம். இந்த சிக்கலிருந்து தப்ப யோகாசனம் நமக்கு ஒரு நல்ல வழியை அளிக்கிறது. சரி வாருங்கள் அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.யோகா எப்படி உதவுகிறது?

* யோகாசனங்கள் நமது உடலின் ரத்த ஒட்டத்தைச் சீர்செய்கிறது.
* யோகா நமது நரம்பு மண்டலத்தை தளர்வான நிலையில் இருக்கச் செய்கிறது. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுவது குறைகிறது.
* யோகா நமது ஹார்மோன்களின் அளவுகளைச் சமநிலைப்படுத்துகிறது.
* யோகாவின் மூலம் நமது உடலையும், மனதையும் நம்மால் பிரித்துப்பார்க்க முடிகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிகிறது. இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாமல் பதற்றமாக நாம் செய்யும் பல செயல்களைத் தடுக்க முடிகிறது.
* வளர்சிதை மாற்றம் சீராவதால் குறிப்பிட்ட உணவுக்கான ஏங்குதல்கள் குறைகின்றன.

சில முக்கிய யோகாசனங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

 

சூர்ய நமஸ்காரம்:தொன்று தொட்டே நம் மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசனம் சூரிய நமஸ்காரம். இது உடல் மற்றும் மனது உறுதியடையவும், அமைதியடையவும் உதவுகிறது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும், சக்தியும் வருகின்றது. அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சூரிய நமஸ்காரத்தின் பங்களிப்பு முக்கியமானது. மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்து வருவது பலன் தரும். பிரசவம் சுமூகமாக நடைபெறவும் துணைபுரியும்.

கபாலபதி:முதலில் யோகா விரிப்பில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும். இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

மூச்சை இழுத்து விடும்போது உருவாகும் வெப்பமானது வயிற்றின் உள்ளே இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்தத்துக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைப்பதால் ரத்தம் சுத்தமாகிறது. செரிமானத்தைத் தூண்டி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. மாதவிடாய்க்கு மிகவும் முக்கியமான யோகாசனம் இது.

பத்ராசனம்:யோகா விரிப்பில் அமர்ந்து இரண்டு கால்களையும் நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்கவேண்டும். இரண்டு கால்களின் பாதங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்க வேண்டும். உங்கள் இரண்டு கைகளையும் ஒட்டிய பாதத்தை பிடித்திருக்க வேண்டும். கவனம் வயிற்றை அழுத்தியோ கூன் போட்டோ உட்கார வேண்டாம். பாதங்கள் இணைக்கும் அளவு நன்றாக இணைத்து கைகளால் பிடித்துகொண்டு இரண்டு கால்களின் தொடைகள் முதல் முட்டிவரை மேலிருந்து கீழாக அசைக்க வேண்டும். இதை பட்டர்ஃப்ளை போஸ் என்று சொல்வார்கள். 40 முதல் 50 முறை வரை தொடை முட்டியை அசைக்கவேண்டும். மாதவிடாயின்போது சிக்கல் இல்லாமல் உடலுக்கு ஆற்றல் தரும் ஆசனம் இது.

தனுர் ஆசனம்:தனுரசனா அல்லது வில் போஸ் என்பது 12 அடிப்படை ஹத யோகங்களில் ஒன்றாகும். இது மூன்று முக்கிய பின்புற நீட்சி பயிற்சிகளில் ஒன்றாகும். இது முழு முதுகையும் வளைப்பதன் மூலம் ஒரு நல்ல நீட்டிப்பை அளிக்கிறது. இதனால் உடலின் பின்புறத்திற்கு வலிமையையும் அளிக்கிறது. இதன் நன்மைகள் - முதுகு மற்றும் வயிறை பலப்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளின் செயல்திறனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தையும் குறைக்கும். பெண்கள் மாதவிடாயின்போது படும் அவதிக்கு இந்த ஆசனம் மன நிம்மதியை தரும்.

வஜ்ராசனா:இந்த ஆசனத்தை செய்வதால் மாதவிடாய் காலத்தில் முதுவலி பிரச்சனை தவிர்க்கப்படும். யோகா விரிப்பின் மீது அமர்ந்து கால்களை நீட்டி உட்காரவேண்டும். வலது காலை நேராக நீட்டி இடது காலை மடக்கி வலது காலின் தொடையின் அருகில் வரும்படி மடக்கி வைக்கவேண்டும். வலது கையானது இடது கால் முட்டியின் மீது இருக்க வேண்டும். இடது கை பின் பக்கமாக வைக்க வேண்டும். இப்போது மூச்சை ஆழமாக இழுத்து தலை, இடுப்பு பகுதியை இடது பக்கமாக இயன்றளவு திருப்ப வேண்டும். இந்த நிலையில் 5 விநாடி முதல் 10 விநாடிகள் வரை இருந்து முச்சை வெளியேற்றி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மீண்டும் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: