• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்று உலக இதய தினம் : உங்கள் இதயத்தை தினமும் கவனிக்கிறீர்களா..?

இன்று உலக இதய தினம் : உங்கள் இதயத்தை தினமும் கவனிக்கிறீர்களா..?

இதயம்

இதயம்

2016 ஆம் ஆண்டு மட்டும் இதய சார்ந்த நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது இதயநோய்களால் இறந்தோரின் எண்ணிக்கை 31 விழுக்காடு.

  • Share this:
உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குவதிலும், கழிவுப் பொருட்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது இதயம். இதன் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதனை அசாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவரின் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானால் இதயத்தின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை மக்களின் ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மன அழுத்தம், சோர்வு மற்றும் கவலைக்கு ஒட்டுமொத்த மனித சமூகமே உள்ளாகியிருப்பதால், இதயம் சார்ந்த நோய்களின் பாதிப்பை மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதனால், மக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சமநிலையான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இதயத்தில் ஏதேனும் பாதிப்புகள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், அதனை புறக்கணிக்காமல் மருத்துவமனைக்கு சென்று பரிசதோனை செய்து கொள்ளுங்கள். மருத்துவர்களின் கூற்றுப்படி, கோவிட் வைரஸ் பாதிப்பு காலத்தில் அதற்கு இணையாக இதய நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையே உலகளவில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.2016 ஆம் ஆண்டு மட்டும் இதய சார்ந்த நோய்களால் உலகளவில் 17.9 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். ஒட்டுமொத்த இறப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது இதயநோய்களால் இறந்தோரின் எண்ணிக்கை 31 விழுக்காடு. குறிப்பாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். 2016 ஆம் ஆண்டில் என்.சி.டிகளினால் மட்டும் இந்தியாவில் இறந்தவர்கள் 63 விழுக்காடு. இதில், சிவிடி எனப்படும் இதய நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 விழுக்காடு. 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் இதயநோயால் 45 விழுக்காடு பேர் இறப்பை தழுவியுள்ளனர்.

நீங்கள் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்...

கோவிட் வைரஸ் பரவலுக்குப் பின்னர் இதய நோய்களின் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்தக் காலம் மிகவும் சவாலான காலமாக மாறியுள்ளது. அவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அஞ்சி முறையான மருத்துவ ஆலோசனை பெறக்கூட பொதுவெளிக்கு செல்ல தயங்குகின்றனர். இந்த ஆண்டு உலக இதய தினத்தில், டிஜிட்டலைப் பயன்படுத்தி இதய நோய் பாதிப்பு, தடுப்பு, முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இதய நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், சரியான நேரத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். இல்லையென்றால், உடற்பயிற்சியினால் ஏற்படக்கூடிய கார்டியோமயோபதி மற்றும் இதய செயலிழப்பை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்ளும்போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உணவுச் சமநிலை பேணாமல் இருந்தாலும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகள், மன அழுத்தம், சோர்வு, புகைப்பிடித்தல், தூக்கமின்மை, காஃபின், குறைந்த உடற்பயிற்சி ஆகியவை இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் என பட்டியலிட்டுள்ள மருத்துவர்கள், மார்பு வலி, அசௌகரியம், விவரிக்க முடியாத சோர்வு, மெதுவான இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி ஆகிய ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு தாமதிக்காமல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: