செல்வி தன் தாயுடன் அன்று மருத்துவமனைக்கு வந்திருந்தார். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. அந்த மாதம் மாதவிடாய் தள்ளி போய் இருப்பதாக கூறினார்.
கர்ப்பத்திற்கான யூரின் டெஸ்ட் எடுத்து சோதித்தோம்.
இரண்டு கோடுகள், கர்ப்பம் இருப்பதை உறுதி செய்தன.
"வாழ்த்துகள்! செல்வி!" பாசிட்டிவ் என்று தான் ரிசல்ட் வந்திருக்கிறது. என்றதும் தாயும் மகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும்? டாக்டர்!!! என்று கேட்டனர். "தேவையான அடிப்படை ரத்தப் பரிசோதனைகள் செய்ய வேண்டும். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஸ்கேன் செய்து கருவின் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் ." இப்பொழுதிலிருந்து கருவினுடைய வளர்ச்சிக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றேன்.
மாத்திரை என்றதும் செல்வியின் தாயின் முகம் குழப்பம் அடைந்தது. "டாக்டர்!! மாத்திரை சாப்பிடலாமா? கர்ப்பமாக இருக்கும் போது எந்த மாத்திரையும் எடுக்க கூடாது. சாப்பிட்டா குழந்தையை பாதிக்கும்னு சொல்றாங்களே!!! என்றார்.
"இந்த மாத்திரை எல்லாம் சத்து கொடுக்கும் மாத்திரை தான்" என்றேன்.
"நல்ல சத்துள்ள உணவு மட்டும் எடுத்தால் போதாதா? மாத்திரை சாப்பிட்டுதான் ஆகணுமா??" என்று கேள்விகளை அடுக்கினார்.
என் பதில்:
உலக அளவில் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஆராய்ச்சிகளில் ஒரு பெண் கர்ப்பத்திற்காக திட்டமிடும்போது போலிக் ஆசிட் எனப்படும் பி விட்டமின் ரத்தத்தில் சரியான அளவு இருக்கும் பொழுது அந்த குழந்தைக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிறவி குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லா பெண்களுக்கும் இந்த போலிக் ஆசிட் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பமானதை உறுதி செய்ய மருத்துவரிடம் வரும்பொழுது தான் இந்த மாத்திரையை எடுக்க தொடங்குகிறார்கள். இருப்பினும் மூன்று மாதம் வரை இந்த போலிக் ஆசிட் ( folic acid) மாத்திரைகளை எடுக்கும் பொழுது அது குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
Also Read : கர்ப்பிணிகள் அடிக்கடி ஸ்கேன் செய்வது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா..?
விட்டமின் டி3 தாயினுடைய கர்ப்ப காலத்தில் உண்டாகக் கூடிய ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கான வாய்ப்புகளை குறைப்பதுடன் குழந்தையினுடைய எலும்பு வளர்ச்சிக்கும் பிற்காலத்தில் குழந்தையினுடைய மூளை வளர்ச்சிக்கும் கூட உறுதுணையாக இருப்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கர்ப்பத்தின் துவக்கத்திலிருந்து விட்டமின் டி3 மாத்திரைகளை எடுப்பது மிகவும் நல்லது.
பல பெண்களுக்கும் பரிசோதனை செய்து பார்க்கும்போது விட்டமின் டி3 குறைவாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் வெளியே வரக்கூடிய வாய்ப்புகள் குறைந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கிய போது, 90 சதவீதமான பெண்களுக்கும் இந்த விட்டமின் டி3 அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏனென்றால் நாம் சூரிய ஒளியில் இருக்கும் பொழுது நம்முடைய உடல் விட்டமின் டி3யை தயாரிக்கிறது.
தாய்க்கு குறைவாக இருக்கும் போது குழந்தைக்கு செல்லக்கூடிய விட்டமின் டி3 குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் விட்டமின் டி3 மாத்திரைகளை கொடுக்கலாம். எனவே உலக அளவில் போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் டி3 மாத்திரைகளை எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் கேட்ட மற்றொரு நல்ல கேள்வி:
நல்ல சத்துள்ள ஆகாரத்தை எடுக்கும்பொழுது அதிலிருந்து நமக்கு போலிக் ஆசிட் விட்டமின் கிடைக்கும். ஆனால் நாம் எடுக்கக்கூடிய உணவின் தன்மை மற்றும் அதிலிருந்து நம் உடல் உறிஞ்சக்கூடிய அளவு ,அது நம்முடைய ரத்தத்தில் கலக்க கூடிய அளவு ஆகியவை மாறுபடும் . அதனால் இந்த உணவு எடுத்தால் கட்டாயமாக அது ரத்தத்தில் உள்ள விட்டமின் அளவை சரியாக வைத்திருக்கும் என்பதற்கு உறுதி கூற முடியாது.
அதனால்தான் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதுவரை பல ஆண்டுகளாக செய்துள்ள ஆராய்ச்சிகளின் முடிவுகள் எந்த குழந்தைக்கும் இந்த மாத்திரைகளை தாய் உட்கொள்வதால் எந்த பிரச்சனையும் வருவதை காட்டவில்லை . வந்ததாகவும் இல்லை அதனால் கர்ப்பிணிகள் இந்த பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எந்தவிதமான பயமும் இன்றி தைரியமாக எடுத்துக்கொள்ளலாம்.
இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தை ,எலும்பு நரம்பு தண்டில் குறைபாட்டோடு பிறந்தபோது, அதற்காக தன்னுடைய மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கு போலிக் ஆசிட் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் தான் எடுத்திருந்தால் தன்னுடைய குழந்தைக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது" என்றும் வாதிட்டார்.
Also Read : கர்ப்பம் உறுதியானதும் இத்தனை டெஸ்ட் எடுக்கனுமா..? ஏன் இதெல்லாம் எடுக்கனும் தெரியுமா..?
அந்த வழக்கிலும் அந்த பெண்மணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்திருந்தது. இதிலிருந்தே நீங்கள் போலிக் ஆசிட் எத்தனை முக்கியம் என்பதை புரிந்து கொள்ளலாம். என்று முடித்தேன்.
"டாக்டர் !! நன்றாக தெரிந்தது. கட்டாயம் நீங்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளை என் மகள் எடுத்துக் கொள்வதை நான் உறுதி செய்கின்றேன்" என்று கூறினார், புத்திசாலியான அந்த பெண்மணி.
கர்ப்பத்திற்கு திட்டமிடும் எல்லா பெண்களும் போலிக் ஆசிட் மாத்திரைகளை திட்டமிடும் பொழுதே எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான குழந்தை உருவாவதற்கு உதவும்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy care, Tablets, பெண்குயின் கார்னர்