ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு ஏன் சிவப்பு நிற ரிப்பனை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு ஏன் சிவப்பு நிற ரிப்பனை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்கள் தனியே இல்லை, அவர்களுடன் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இருக்கிறோம் என்ற ஆதரவை அளிப்பது தான் இந்த சிவப்பு ரிப்பனின் அர்த்தம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அனைத்து தரப்பினரையும் சென்று சேரவேண்டும் என்று உலக சுகாதார மையம் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அறிவித்துள்ளது. எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது, எய்ட்ஸ் நோய் ஏற்படாமல் தடுப்பது எப்படி, எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்ஐவி வைரஸ், என்பது பற்றி பல விதமான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு என்று சொல்லும்போதே சிவப்பு நிற ரிப்பன் கண்முன் தோன்றும். எய்ட்ஸ் விழிப்புணர்வின் சின்னமாக இந்த சிவப்பு நிற ரிப்பன் ஏன் இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

எய்ட்ஸ் நோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட எய்ட்ஸ் நோய், பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.ஆரம்ப காலத்தில் எய்ட்ஸ் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் உலகம் முழுவதுமே ஒரு சிலருக்கு எப்படி தீவிரமான நோய்கள் வருகின்றன, உடல் நலம் மோசமடைகிறது, என்ன காரணம் என்று தெரியாமலேயே இருந்தது. எனவே இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் சிகப்பு நிற ரிப்பன் எய்ட்ஸ் விழிப்புணர்வின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏன் சிகப்பு நிற ரிப்பன்?

இதற்கு இரண்டு சுவாரஸ்யமான காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, சிவப்பு என்பது காதலை வெளிப்படுத்தும் நிறம். எனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது எச்ஐவி பாசிட்டிவ் என்று ஒரு நபருக்கு பரிசோதனை முடிவுகள் வந்தாலே அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இந்த அவலம் இன்று வரை தொடர்கிறது. அதுவும், எச்ஐவி பாசிட்டிவ் உடன், எய்ட்ஸ் நோய் வராமல் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே எச்ஐவி பாசிட்டிவ் கொண்ட நபர் அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர்களுக்கும் அன்பும், பாசமும் தேவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் சிகப்பு நிற ரிப்பன் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read More : தைராய்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்... கேன்சரில் இருந்து மீண்டவரின் அனுபவம்!

மற்றொரு காரணம், எய்ட்ஸ் என்பது பெரும்பாலும் இரத்தம் மற்றும் உடல் திரவம் வழியாகத்தான் ஒரு நபரிடம் இன்னொரு நபருக்கு பரவுகிறது. குறிப்பாக எச்ஐவி பாசிட்டிவ் உள்ள நபருடைய ரத்தம் மற்றொரு நபருக்கு ஏற்றப்படும் போது அது இன்னொருவருக்கு பரவுகிறது. எனவே ரத்தம் வழியாக நோய் பரவுவதால் சிவப்பு நிற ரிப்பனை சின்னமாக அறிவித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

உலக எய்ட்ஸ் தினத்தன்று சிவப்பு நிற ரிப்பனை அணிந்து கொள்ளுங்கள்

எய்ட்ஸ் நோய் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு தான் இந்த நோய்க்கான சின்னம் அறிவிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் இருந்துதான் ஒரு சின்னம் தேவை என்ற எண்ணம் தோன்றியது.

எய்ட்ஸ் பாதிப்பை உணர்ந்து கொண்ட கலைச் சேவையில் ஈடுபட்டுள்ள சமூகம், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு விளைவுகளுக்கு எதிர்வினையாக, விஷுவல் எய்ட்ஸ் என்ற குழுவை உருவாக்கியது. இது கலை சமூகம், கலைஞர்கள், கலைக் கல்வி நிறுவனங்கள், மற்றும் ரசிகர்கள், ஆகியோருக்கு உதவும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டது.

இந்த விஷுவல் எய்ட்ஸ் குழுவில் உள்ள கலைஞர்களில் ஒரு சிலர், 1991 ஆம் ஆண்டில், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்கும் அன்பும், கனிவும், இரக்கமும் தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு சின்னத்தை வடிவமைத்தனர்.

கல்ஃப் போரில் கலந்து கொண்ட அமெரிக்க வீரர்கள் பயன்படுத்திய மஞ்சள் நிற ரிப்பன்கள் போலவே சிகப்பு நிற ரிப்பன் எய்ட்ஸ் விழிப்புணர்வு சின்னமாக கலைஞர்கள் உருவாக்கினார்கள். சிவப்பு நிற ரிப்பன் என்பது ஆதரவு மற்றும் எச்ஐவி நோயை எதிர்த்து போராடி வாழ்ந்து வருபவர்களுக்கு, அவர்கள் தனியாக இல்லை, என்ற ஒற்றுமை உணர்வையும் பிரதிபலிப்பதாக உருவாகியது.

UNAIDS என்ற, சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கி வரும் அரசு சாரா நிறுவனம் ஒன்றின் வலைதளத்தில், ‘சிவப்பு என்பது ரத்தம் மற்றும் தீவிரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது, சிவப்பு நிறம் என்பது கோபம் மட்டுமலம், காதலும் கூட’ என்று தெரிவித்தது. மேலும், இதற்கு சிவப்பு ரிப்பன் திட்டம் என்று பெயரிடப்பட்டது.

1992 ஆம் ஆண்டு ஈஸ்டர் திங்கட்கிழமையன்று ஃபிரட்டி மெர்குரி எய்ட்ஸ் விழிப்புணர்வு டிரிப்யூட் கான்செர்ட்ல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிவப்பு ரிப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இது முதல்முறையாக ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது 70 நாடுகளில் இருந்து 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்தார்கள். அது மட்டுமல்லாமல் 90 களில் பல உலக பிரபலங்களும் சிவப்பு நிற ரிப்பன் அணிந்து எய்ட்ஸ் விழிப்புணர்வை பரப்பினார்கள். இவர்களில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் பங்கு முக்கியமானது.

எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்கள் தனியே இல்லை, அவர்களுடன் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இருக்கிறோம் என்ற ஆதரவை அளிப்பது தான் இந்த சிவப்பு ரிப்பனின் அர்த்தம். எனவே இதை அணிவது என்பது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்கும் மோசமான மனப்பான்மை மற்றும் பழக்கத்தை உடைப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

First published:

Tags: AIDS, HIV, WORLD AIDS DAY