மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வால், உடலிலும் மனதிலும் ரோலர் கோஸ்டர் போல மாற்றங்கள் நிகழும். பெரிதாக விரும்பாத உணவுகளை மாதவிடாய் காலத்தில் அதிகமாக சாப்பிடத் தோன்றும். ஒரு சில பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் ஒரு குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். அதே போல, அதிக இனிப்பு, காரம் அல்லது ஜன்க் உணவுகளை சாப்பிடுவார்கள்.எனவே, ஆரோக்கியமான உணவை தவிர்க்க நேரிடும். மாதவிடாய் நேரத்தில் மட்டும் ஏன் இப்படித் தோன்றுகிறது என்பதற்கு மருத்துவ காரணங்களும் உள்ளது.
மாதவிடாய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். சில பெண்கள் எரிச்சலான மனநிலையுடன இருப்பார்கள். சிலருக்கு அமைதியாக இடத்தில் சின்ன சத்தம் கூட இல்லாமல் இருக்க விரும்புவார்கள். பல பெண்களும் விருப்பமான உணவுகளின் மூலம் தங்கள் அசௌகரியத்தை போக்க முயற்சி செய்வார்கள். நல்ல ஓய்வையும் விரும்பும் பெண்கள் உணவு என்று வரும் போது, ஐஸ் கிரீம், சிப்ஸ், ஜன்க் ஃபுட்ஸ் என்று அளவில்லாமல் சாப்பிடுவது, இயல்பு தான் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பெரிய சாக்லேட் பார், சீஸ் பீட்சா, பக்கெட் சிக்கன் என்று சுவையான உணவுகளை அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிடக் கூடிய சாத்தியம் உள்ளது. கருமுட்டை சார்ந்த ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது, அதிகரிக்கும் பசி, வயிறு நிறையாத தன்மை உள்ளிட்ட காரணத்தால், பெண்களிடம் உணவுப் பழக்கம் மாறுபடும் என்று ஆய்வுகள் கூறியுள்ளன.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
மாதவிடாய் உடலை மட்டுமல்லாமல், மன நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மன நிலையை மேம்படுத்த, பலரும் விரும்பிய உணவை அதிகமாக சாப்பிடுவார்கள். அதே போல, மாதவிடாய் காலத்தில் பெண்களும் படபடப்பு, கோபமான மனநிலை, எரிச்சல், பதட்டம் ஆகியவற்றை சீர் செய்ய உணவை சார்ந்திருக்கிறார்கள். மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான ஜன்க் உணவுகளை சாப்பிட்டால் அதன் விளைவு உடலில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
எனவே, எந்த உணவுகளை சாப்பிடலாம் மற்றும் அதிகமாக சாப்பிடக் கூடாது என்ற எல்லையை பெண்கள் உணர வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் சாப்பிடக்கூடிய உணவுகள்:
நல்ல கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது செரோடொனின் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அளவை அதிகரித்து, மன நல மாற்றங்களை சரி செய்யும். அரிசி சாதம், தானியங்களால் செய்யப்பட்ட உணவு, மக்கா சோளம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட பொரி, பயறு வகைகள் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் தின்பண்டங்களாக நீங்கள் விரும்பும் பழங்களை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமான தேர்வாகும். வீட்டில் செய்யப்படும் பாப்காரன் குறைவான கலோரி கொண்ட, ஆரோக்கியமான தின்பண்டமாகும்.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1
மாதவிடாய் காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பின்வரும் உணவுகளை நீங்கள் முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைவான அளவில் உண்ண வேண்டும்.
- அதிக உப்பு உள்ள பொருட்கள்
- ரசாயனம் அல்லது சுவையூட்டி சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள்
- அதிக கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்
- அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், இனிப்புகள்
- சிவப்பு இறைச்சி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.