உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். அதுமட்டுமின்றி எடை குறைப்பிற்கு உணவுகள் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடற்பயிற்சி செய்வதும் முக்கியம். அனைவருக்குமே ஜிம்மில் சேர்ந்தோ அல்லது ஒரு பயிற்சியாளரிடம் இருந்து முறையான உடற்பயிற்சியை கற்றுக் கொள்வது சாத்தியமில்லை. ஆனால் எல்லோருக்குமே சைக்கிள் ஓட்டுவது எளிது சைக்கிள் ஓட்டுவது. உடல் எடை குறைப்பதற்கு மிகவும் எளிதான வழி சைக்கிள் ஓட்டுவது தான்.
உடல் நலத்தை மேம்படுவதோடு மட்டுமல்லாமல் ஒரு முழு கார்டியோ உடற்பயிற்சியாகவும் விளங்குகிறது. சைக்கிள் ஓட்டுவது உடல் மற்றும் மன நலத்தை எவ்வாறெல்லாம் மேம்படுத்துகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சைக்கிள் ஓட்டுவது புத்துணர்ச்சி அளிக்கும்
சைக்கிள் ஓட்டுவது என்பதை ஒரு உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க முடியாது. உண்மையில் இது ஒரு ஜாலியான விஷயமாகவே பார்க்கலாம். வெளிப்புறத்தில் சைக்கிள் ஒட்டிச் செல்வதன் மூலம் தினமும் இயற்கையான சூழலில் சிறிது நேரம் செலவிட முடியும். இதனால் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
மூளை சுறுசுறுப்பாகும்
பொதுவாக சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு கார்டியாக் பயிற்சியாக கருதப்படுகிறது. கார்டியாக் பயிற்சியின்போது இதய துடிப்பு அதிகரித்து ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் சீராக பரவும். இதில் குறிப்பாக சைக்கிள் ஓட்டும் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் 28% அதிகரிப்பதாகவும் மற்ற பாகங்களுக்கு 70% வரை இரத்த ஓட்டம் அதிகரித்து சீராக இயங்குவதற்கு உதவுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவித்து உள்ளது.
தசைகள் வலுவடைகிறது
சைக்கிள் ஓட்டும் பொழுது உடல் முழுவதும் இயங்குகிறது. கை கால்களில் உள்ள தசைகள் வலுப்பட்டு தசைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
40 வயதைக் கடந்த பின் பெண்கள் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்..? கட்டுப்படுத்தும் வழிகள்..!
எடை குறைப்பதற்கு எளிதான வழி சைக்கிள் ஓட்டுவது
நீங்கள் குறைந்த பட்சம் 1 மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் 400 – 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். இதனால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முழு உடலுக்குமான ஒரு உடற்பயிற்சியாக சைக்கிளிங் விளங்குவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், இயற்கையாக சுரக்கும் புரதம், வெள்ளை அணுக்கள், ஹார்மோன்கள் உற்பத்தி சீராக இருக்கும்.
மன நலம் மேம்படும்
மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுவது மூளையை ரிலாக்சாக உணரச் செய்து உங்கள் மன நலத்தை மேம்படுத்தி, புத்துணர்ச்சியூட்டும்.
தனிப்பட்ட நன்மைகள் தவிர்த்து, சைக்கிளிங் செய்வது சுற்றுசூழலுக்கு மிகவும் சிறந்தது. எரிபொருள் பயன்பாடு தேவைப்படாத வாகனமாக, உங்கள் பணத்தை மிச்சம் பிடிப்பதோடு, சுற்றுசூழலை மாசுப்படுத்தாது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.