முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் பிளட் குரூப் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? Rh negative என்றால் ஒரு குழந்தை தான் பிறக்குமா?

கர்ப்ப காலத்தில் பிளட் குரூப் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? Rh negative என்றால் ஒரு குழந்தை தான் பிறக்குமா?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண் குயின் கார்னர் 69 : Rh நெகடிவ் என்றால் உடனே பயப்படத் தேவையில்லை. கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் . Anti D தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ரத்த குரூப்பை சோதித்து விட்டு தேவைப்பட்டால் anti D ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

லீமாவும் அவர் கணவரும் அன்று மருத்துவமனையில் காத்திருந்தனர்.

லீமா தன்னுடைய முதல் கர்ப்பத்தில் இருக்கிறார். அவருடைய ரத்த பரிசோதனைகளின் முடிவுகளை காண்பிப்பதற்காக வந்திருந்தார்.

முகத்தில் சிறிது பதட்டம் தெரிந்தது. அவர் கணவரும் சற்று பதட்டத்துடன் இருந்தார்.

"லீமா! என்ன ஆயிற்று? ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறீர்கள்!? "என்று கேட்டேன்.

"டாக்டர்! பிளட் குரூப் எனக்கு Rh நெகட்டிவ், என்று வந்திருக்கிறது . அதை பார்த்ததிலிருந்து ஒரே டென்ஷன் ஆக இருக்கிறது. Rh நெகட்டிவாக இருந்தால் குழந்தையை பாதிக்கும் . குழந்தை வளராது. ஒரு குழந்தை தான் பிறக்கும், இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்றாங்க! "என்று கூறினார்

என்னுடைய ஆலோசனை

கர்ப்ப காலத்தில் பார்க்கப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ஒன்று ரத்த குரூப் மற்றும் டைப்பிங் எனப்படும் வகையையும் கண்டறிவது. குரூப்பில் ஏ ,பி, ஏ பி, ஓ என்று நான்கு வகைகள் உள்ளன. அடுத்தது Rh வகையில் ஆர்எச் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என்று இரண்டு வகைகள் உள்ளன.

பொதுவாக ஏபிஓ வகைகளில் பெரும்பாலும் எந்த விதமான பெரிய சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஆர் எச் வகையில் சில சிக்கல்கள் குறிப்பாக கர்ப்ப காலத்தில் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அது யாருக்கு வரும்? எப்படி வரும் ?என்பதை பார்க்கலாம்

பெரும்பாலும் ஆர்ஹெச் வகையில் ஆர்எச் பாசிட்டிவ் 85% வரையும் நெகடிவ் 15 சதவீதம் மக்களுக்கும் இருக்கும். தாய் ஆர்.எச் பாசிட்டிவாக இருக்கும் பொழுது பிரச்சனை எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் தாய் ஆர் எச் நெகட்டிவ் எனில் சில சிக்கல்கள் எழலாம்.

குறிப்பாக கணவன் ஆர்எச் பாசிட்டிவாக இருந்தால் உருவாகும் குழந்தை ஆர் எச் பாசிட்டிவாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு .அப்போது தாய் நெகட்டிவ், குழந்தை பாசிட்டிவ் என்று உருவாகும் போது தாயினுடைய ரத்தமும் குழந்தையினுடைய ரத்தமும் கர்ப்ப காலத்திலோ அல்லது பிரசவ சமயத்திலோ கலக்கும் போது தாயின் ரத்தத்தில் பாசிட்டிவ் ரத்த அணுக்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி(antibodies) அணுக்கள் உருவாகிவிடும் . முதல் கர்ப்பத்தில் தான் இந்த உணர்வாக்கம்( sensitization) ஏற்படும் .. ஆனால் இது முதல் கர்ப்பத்தை பாதிக்காது.

Also Read : கர்ப்ப காலத்தில் சிறுநீரக வேலை திறன் டெஸ்ட் ஏன் எடுக்கப்படுகிறது..?

அவ்வாறு எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகள் உருவாகிவிட்டால் , இரண்டாவது கர்ப்பத்தில், குழந்தை பாசிட்டிவாக இருந்தால் அந்த குழந்தையின் ரத்த செல்களை இந்த எதிர்ப்பு அணுக்கள் அழிக்க தொடங்கும். அப்போது அந்த குழந்தை வளர்வது சிக்கலாகும். சில சமயங்களில் குழந்தைகளுக்கு கடுமையான ரத்த சோகை ஏற்படும். அப்போது கர்ப்பபைக்குள்ளேயே வைத்து குழந்தைக்கு ரத்தம் ஏற்றும் வரை சிகிச்சைகள் தேவைப்படும்.

எனவே நெகட்டிவ் ஆக இருப்பதால் கணவனுடைய ரத்த வகை rh வகை என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவரும் நெகட்டிவ் எனில் எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு பாசிட்டிவாக இருப்பின் இந்த கர்ப்ப காலத்தை கவனமாக கடக்க வேண்டும் . ஐசிடி( ICT) எனப்படும் ஒரு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். செய்தால் அவருடைய ரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எதிர்ப்பு அணுக்கள் உருவாகாமல் இருப்பதற்காக கர்ப்பகாலத்திலேயே Anti D எனப்படும் தடுப்பூசியை போட வேண்டும். அது தாயினுடைய ரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உருவாவதை தடுத்துவிடும். பிரசவமான பிறகும் குழந்தையின் இரத்த வககையை சோதித்து குழந்தை பாசிட்டிவாக இருப்பின் தாய்க்கு anti D ஊசி கொடுக்கப்படும். குழந்தை பிறந்த 24மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்பட்டால் எதிர்பணுக்கள் உருவாவது தடுக்கப்படும்.

ஒரு சிலருக்கு ஆர்எச் நெகட்டிவாக இருந்து அவர்களுக்கு கருச்சிதைவோ( abortion) அல்லது கருக்குழாயிலோ( ectopic) கரு உருவாகும் பொழுது அப்பொழுதும் இந்த anti D ஊசியை அவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Also Read : கர்ப்ப காலத்தில் லிவர் டெஸ்ட் அவசியமா?

Rh நெகடிவ் என்றால் உடனே பயப்படத் தேவையில்லை. கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் . Anti D தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ரத்த குரூப்பை சோதித்து விட்டு தேவைப்பட்டால் anti D ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டிய தடுப்பு முறையாகும். இதை செய்யும்பொழுது பெரும்பாலான சமயங்களில் எந்த சிக்கலும் எழுவதில்லை.

"இப்போதுதான் தெளிவாக புரிந்தது டாக்டர்!. நெகட்டிவ் என்று பார்த்ததிலிருந்து மிகவும் பயந்துவிட்டேன் . இது பெரிய ஒரு பிரச்சனை இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன் .மிக்க நன்றி! "என விடைபெற்றார் லீமா.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Blood Group, Blood test, Pregnancy care, பெண்குயின் கார்னர்