முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மருந்துகளுக்கு கட்டுப்படாமல் விடாது துரத்தும் சளி மற்றும் காய்ச்சல் : காரணம் என்ன..?

மருந்துகளுக்கு கட்டுப்படாமல் விடாது துரத்தும் சளி மற்றும் காய்ச்சல் : காரணம் என்ன..?

இருமல் மற்றும் சளி

இருமல் மற்றும் சளி

கடந்த சில மாதங்களாக நாடெங்கிலும் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நீடித்த இருமல், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுவதற்கு வழக்கத்தை விட கூடுதலான காலம் பிடிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களாக நாடெங்கிலும் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. நீடித்த இருமல், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகுவதற்கு வழக்கத்தை விட கூடுதலான காலம் பிடிக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் கூட இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

இதுவரை கண்டிராத வகையில் மக்களுக்கு உடல்நலன் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். சாதாரணமாக 3, 4 நாட்களில் சரியாகக் கூடிய காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் தற்போது குணமாகுவதற்கு 3 முதல் 8 வாரங்கள் வரை ஆகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வழக்கமாக இவற்றை சரி செய்யக் கூடிய ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு அவை தற்போது கட்டுப்படுவதில்லை. மாறாக தற்போது ஸ்டீராய்டு மருந்துகள் தேவைப்படுகின்றன. இதனால் மிகுந்த கவலை அடைந்துள்ள மக்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் காய்ச்சல், சளி குறித்த பதிவுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

பருவச்சூழல் மாற்றம்

அண்மைக்காலமாகவே இந்தியாவின் பருவச்சூழலில் மிகுந்த ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன. திடீரென்று வெப்பநிலை அதிகரிப்பதும், திடீரென்று குளிர்நிலை காணப்படுவதும் இயல்பாகி வருகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா எதிர்விளைவுகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் காரணமாக பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த சமயத்தில் பலருக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், அவை நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவுக்கு பாதித்துள்ளன. குறிப்பாக, கொரோனா பாதிப்பின் வடுக்களை நுரையீரலில் பார்க்க முடிகிறது என்று மருத்துவர் பரேஹ் கூறினார்.

உருமாறும் வைரஸ்கள்

வைரஸ்கள் புறச் சூழல்களுக்கு தகுந்தாற்போல தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. கொரோனா போன்ற பல வைரஸ்கள் வெளிப்புறச் சூழலில் நீடித்து இருக்கின்றன. மேலும் உடலில் பல்கிப் பெருகும்போது, நம் நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றன.

Also Read : சென்னையில் அதிகமாக பரவி வரும் காய்ச்சல்.. ஆய்வில் இன்ஃப்ளூயன்ஸா-ஏ வகை வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு..!

ஆரோக்கியமற்ற வாழ்வியல்

பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. துரதிருஷ்டவசமாக இதுபோன்ற உணவுப் பழக்கங்களால் மக்களின் உடல்நலன் பெருமளவிற்கு பாதிக்க தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து மருத்துவர் தான்புர்வாலா கூறுகையில், “ஆரோக்கியமான உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வது, பழங்கள், காய்கறிகளை முற்றிலுமாக தவிர்ப்பது போன்ற காரணங்களால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை’’ என்றார்.

ஆரோக்கியமான உணவுத் தேவைகள் ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மக்கள் முகக்கவசங்களை தவிர்த்து விட்டனர். கூட்டமாக உள்ள இடங்களில் இடைவெளி இன்றி கலந்து சென்று வருவது இயல்பாகி விட்டது. இதனால், ஒருவருக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் எளிதில் பலருக்கு பரவி விடுகிறது.

First published:

Tags: Cold, Fever, Throat Infection